பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனித் திருவிழா: இன்று தொடங்குகிறது


பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனித் திருவிழா: இன்று தொடங்குகிறது
x

கோப்புப்படம் 

பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சுசீந்திரம்,

குமரியின் குருவாயூர் என அழைக்கப்படும் பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி விழாவின் முதல்நாளான இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8.30 மணிக்கு மேல் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரு கொடிபட்டத்தை பெற்று கொடிமரத்தில் ஏற்றிவைக்கிறார். விழா நாட்களில் தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்திஇசை, பரதநாட்டியம், நாட்டியாஞ்சலி, பக்தி பஜனை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழாவில் 19-ந் தேதி இரவு 7 மணிக்கு கருடனுக்கு கண் திறந்து பெருமாள் காட்சி அருளுதல், இரவு 10 மணிக்கு கருட வாகனத்தில் சாமி எழுந்தருளல், 21-ந் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 23-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பக்தி பஜனை, இரவு 9 மணிக்கு சப்தவர்ண நிகழ்ச்சி, 9.30 மணிக்கு வெள்ளி கருடவானத்தில் சாமி வேட்டைக்கு எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது.

திருவிழாவின் 10-ம் நாளான 24-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சாமி ஆராட்டு துறைக்கு எழுந்தருளுதல், இரவு 11 மணிக்கு தெப்பத் திருவிழா ஆகியவை நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவினரும் இணைந்து செய்து வருகின்றனர்.

1 More update

Next Story