சமயபுரம் மாரியம்மன் சிறப்புகள்


சமயபுரம் மாரியம்மன் சிறப்புகள்
x

அம்மனின் சிறப்புமிக்க திருவடிவங்களில் ஒன்று, மாரியம்மன். இந்த அம்மன், ஊர்தோறும் வீற்றிருந்து அருள் பாலித்து வந்தாலும், சமயபுரம் மாரியம்மன் மிகவும் பிரசித்திப் பெற்றவர்.

சமயபுரம் அன்னையைத் தேடி பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். சமயபுரம் மாரியம்மன் என்று ஊரின் பெயரோடு சேர்த்து அழைக்கப்படும் இந்த அன்னைக்கு, அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கவுமாரி, காரண சவுந்தரி, சீதளதேவி, கண்ணபுரத்தாள், மகமாயி போன்ற பெயர்களும் உண்டு.

சமயபுரம் மாரியம்மனின் விக்கிரகம், மூலிகைகளால் ஆனது. எனவே இங்கே மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. இத்தல அம்மன் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, கருவறையைச் சுற்றிலும் எப்போதும் நீர் இருக்கும் வகையில் கட்டமைத்துள்ளனர். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. பக்தர்கள் பலரும் இதற்கு மலர் சூட்டி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். எட்டுத் திருக்கரங்களைக் கொண்ட சமயபுரம் மாரியம்மன், தன்னுடைய கரங்களில் கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியிருக்கிறாள்.

தைப்பூசம் அன்று இந்த மாரியம்மன், கொள்ளிடக்கரையின் தென்பகுதியில் தீர்த்தவாரிக்கு வருவாள். அப்போது திருவரங்கம் அரங்கநாதர் தன்னுடைய ஆலயத்தில் இருந்து பட்டுப்புடவைகள், மாலைகள், தளிகைகள் போன்றவற்றை சீராக எடுத்து வந்து தன்னுடைய தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு வழங்கும் நிகழ்வு இன்றளவும் நடந்து வருகிறது.

எந்த ஒரு ஆலயமாக இருந்தாலும், பக்தர்கள்தான் அந்த ஆலய இறைவனை ேவண்டி விரதம் இருப்பார்கள். ஆனால் சமயபுரத்தில், தன்னுடைய பக்தர்களுக்காக அன்னை மாரியம்மன் விரதம் இருக்கும் நிகழ்வு நடக்கிறது. இதனை 'பச்சைப் பட்டினி விரதம்' என்பார்கள். மாசி மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன், அம்மனின் இந்த விரதம் தொடங்குகிறது. தொடர்ந்து 28 நாட்கள் அம்மன் விரதம் இருப்பார். உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் நோய், தீவினை அணுகாது, சகல சவுபாக்கியங்களுடன் வாழவும் இந்த விரதத்தை அன்னை மேற்கொள்வதாக ஐதீகம்.

சமயபுரம் மாரியம்மனுக்கு செய்யப்படும் பிரார்த்தனையில், 'கரும்புத்தூளி எடுத்தல்' என்பது மிகவும் பிரசித்தமானது. குழந்தைப் பேறு வாய்க்காத தம்பதிகள், அன்ைனயை வழிபட்டு குழந்தை பிறந்ததும் இந்த நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். அன்னையின் அருளால் கருவுற்று, அந்த ெபண்ணுக்கு சீமந்தம் முடிந்த பின், சீமந்தப் புடவை- கணவரின் வேஷ்டியைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் ஆறாவது மாதத்தில், கரும்புத்துளி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே பத்திரப்படுத்திய சீமந்த புடவை, வேட்டியை மஞ்சள் நீரில் நனைத்து, கரும்பு ஒன்றில் அந்த துணிகளை கட்டி தொட்டிலாக தயார் செய்ய வேண்டும். ெதாட்டிலுக்குள் குழந்தையை படுக்க வைத்து கரும்பின் ஒரு பகுதியை தாயும், மற்றொரு பகுதியை தந்தையும் பிடித்துக் கொண்டு அன்னையின் கருவறையை மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.


Next Story