சிவ - ராம பட்டாபிஷேகம்


சிவ - ராம பட்டாபிஷேகம்
x

பட்டாபிஷேக ராமர் படத்தை நமது பூஜை அறையில் வைத்து தினசரியும் பூஜை செய்தால் நமது குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் வெற்றிகள் தேடி வரும் என்பது நம்பிக்கை.

ராமர் பட்டாபிஷேகம்

தன் மூத்த மகன் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்தார், தசரத மன்னன். ஆனால் அவரது இரண்டாவது மனைவி கைகேயியின் சூழ்ச்சியால் ராமன் 14 வருடம் வனவாசம் செல்ல நேர்ந்தது. பரதன், அயோத்தியின் மன்னனாக அறிவிக்கப்பட்டான். ஆனால் அதில் விருப்பம் இல்லாத பரதன், காட்டிற்குச் சென்று ராமனை அழைத்தான். அவர் வர மறுத்ததால், அவரது பாதுகை (காலணி)யை வாங்கி வந்து, அதை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி செய்தான். 14 வருடமும், ராவண வதமும் முடிந்து அயோத்தி திரும்பிய ராமருக்கு, பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. அப்போது ராமரும், சீதையும் சிம்மாசனத்தில் வீற்றிருக்க, ராமரின் சகோதரர்கள், அனுமன், முக்கோடி தெய்வங்களும் சூழ்ந்திருப்பதே ராமர் பட்டாபிஷேக திருக்கோலம் ஆகும்.

சிவன் பட்டாபிஷேகம்

சிவபெருமான் தன்னுடைய திருவிளையாடல்கள் அனைத்தையும் நிகழ்த்திய இடம், மதுரை. இங்கு மீனாட்சியாக அவதரித்திருந்த பார்வதி தேவியைக் கூட, அவர் திருவிளையாடல் புரிந்தே திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் தன்னுடைய மனைவி மீனாட்சியோடு மதுரையம்பதியின் அரசராக முடிசூடிக் கொண்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன. சிம்மாசனத்தில் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கும் சிவபெருமான், இரு கரங்களில் மழு, மான் தாங்கியும், ஒரு கரத்தால் அருளாசி வழங்கியபடியும், ஒரு கரத்தால் தனது இடது பக்கம் மடி மீது வீற்றிருக்கும் மீனாட்சி தேவியை அணைத்தபடியும் அருள்கிறார். இடது காலை மடக்கி, வலது காலை தொங்க விட்டிருக்கிறார். வலது காலை, சிம்மாசனத்தின் கீழே வீற்றிருந்து நந்தியம்பெருமானும், காரைக்கால் அம்மையாரும் தாங்குகின்றனர். சிம்மாசனத்தைச் சுற்றிலும் விநாயகர், ஆறுமுகப்பெருமான் மற்றும் முனிவர்களும், ரிஷிகளும் வீற்றிருப்பதே, 'சிவ பட்டாபிஷேக' திருக்கோலம் ஆகும்.


Next Story