சூரியனும், சந்திரனும் வழிபடும் திங்களூர் கயிலாசநாதர்
சாபவிமோசனம் பெற இத்தலத்தில் சந்திரன் தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி சிவனை நினைத்து தவம் இயற்றினான்.
நவக்கிரகங்களில் சூரியனும், சந்திரனும் முக்கியமானவா்கள். சந்திரனுக்கு 'திங்கள்', 'சோமன்' என்ற பெயர்களும் உண்டு. சந்திரன் வளர்பிறை காலத்தில் சுபராகவும், தேய்பிறை காலத்தில் பாபராகவும் இருக்கிறார். சுப கிரகங்களுக்கு இவர் நட்பு கிரகமாக இருப்பதால், ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில், பல நன்மைகளை வாரி வழங்குவார். உடல் பலம், மனோ பலம் இரண்டிற்கும் காரணியான சந்திர பகவான் அறியப்படுகிறாா். ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, சுகபோகங்கள் அனைத்திற்கும் இவரே காரகன் ஆவார். அறிவியலின்படி பூமியில் இருந்து 4 லட்சத்து 6 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் சந்திரன் உள்ளது. பூமியை விட 81 மடங்கு எடை குறைவானது. சந்திரன், பூமியை ஒரு முறை சுற்றுவதற்கு 29½ நாட்கள் ஆகும்.
சந்திரனுக்கான தலம் தஞ்சாவூர் மாவட்டம் திங்களூரில் அமைந்துள்ளது. இங்குள்ள கயிலாசநாதர் திருக்கோவிலில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து சந்திரன் அருள்பாலிக்கிறார். அப்பர் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார். ஆனால் இறைவனைப் பற்றிப் பாடாததால், இத்தலம் ஒரு தேவார வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. இத்தல இறைவன் கயிலாசநாதர் என்றும், அம்பாள் பெரியநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இத்தல தீர்த்தம் சந்திரபுஷ்கரணி, தல விருட்சம் வில்வம்.
தல வரலாறு
புராண வரலாறுபடி, தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தைப் பெற வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தனர். மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பைக் கயிறாகவும், திருமாலின் கூர்ம வடிவத்தை தாங்குதளமாகவும் கொண்டு திருப்பாற்கடல் கடையப்பட்டது. அசுரர்கள் வாசுகியின் தலைப் பக்கத்திலும், தேவர்கள் வால் பக்கத்திலும் நின்று கடைந்தனர். அப்போது, ஆலகால விஷம் வெளிப்பட்டது. தேவர்களைக் காப்பாற்றுவதற்காக சிவன் அந்த விஷத்தை எடுத்து அருந்தினார். பின்னர் இரு தரப்பினரும் உற்சாகமாக கடைந்தனர்.
திருப்பாற்கடலைக் கடையக் கடைய, அதில் இருந்து ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி, ரதி, சகேசி, மஞ்சுகோஷ், சித்திரலேகை என அறுபதாயிரம் தேவ கன்னிகள் வெளிப்பட்டனர். தொடர்ந்து உச்சைசிரவஸ் எனும் வெள்ளைக் குதிரை, ஐராவதம் என்ற வெள்ளை யானை, புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என்னும் எட்டு யானைகள், கற்பகமரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்துவகை மரங்கள், சங்கநிதி, பதுமநிதி முதலிய நவநிதிகள், பிரம்ம தண்டலம் என்னும் பிரம்ம கமண்டலம், சூரியமணி, சமந்தகமணி, கவுஸ்துபமணி, தேவார்த்த சங்கு, புஷ்பகவிமானம், நந்தி கோஷ ரதம், வாருணி, தன்வந்திரி, சூரியன், சந்திரன், மூதேவி, ஸ்ரீதேவி, தாரை ஆகியவற்றுக்குப்பின் இறுதியாக அமுதமும் வெளிவந்தது.
ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தி உலக உயிர்களை காத்தாலும், நஞ்சின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர். அப்போது அமிர்தத்துடன் எழுந்து வந்த சந்திரன், தேவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தான். அத்தகைய சந்திரனை, சிவபெருமான் தன் தலையில் சூடிக்கொண்டார். இதனால் சிவனை வழிபடும் பக்தர்கள் மறைமுகமாக சந்திரனையும் வழிபட வேண்டியவரானார்கள். இதைப் பார்த்த தட்சன், தன்னுடைய 27 மகள்களான 27 நட்சத்திரப் பெண்களையும், சந்திரனுக்கு மணம் முடித்துவைத்தான். தன் அனைத்து மகள்களையும், சரிசமமாகப் பாவிக்க வேண்டும் என்று தட்சன், சந்திரனிடம் கேட்டுக்கொண்டான்.
இருப்பினும் அந்தப் பெண்களில் மிகவும் அழகான ரோகிணியுடன் மட்டும் சந்திரன் அதிக நேரத்தை செலவிட்டான். அதனால் மற்ற நட்சத்திரப் பெண்கள், தங்கள் தந்தையிடம் இதுபற்றி தெரிவித்தனா். இதனால் கோபம் கொண்ட தட்சன், சந்திரனின் அழகு நாளுக்கு நாள் குறையும்படி சாபம் கொடுத்துவிட்டான். அந்த சாபத்தின்படி தன் பதினான்கு அழகுகளை இழந்த சந்திரன், மீதம் இருக்கும் அழகினை காப்பாற்றிக்கொள்ள சிவபெருமானிடம் தஞ்சமடைந்தான். பின்னர் ஈசனின் அறிவுரைப்படி சாபவிமோசனம் பெறவும், இழந்த அழகையும், பிரகாசத்தையும் பெறவும் இத்தலத்தில் தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி சிவனை நினைத்து தவம் இயற்றினான்.
ஒரு பங்குனி மாத பவுர்ணமியில் சிவன் காட்சி கொடுத்து, சந்திரனின் சாபத்தைப் போக்கினார். தட்சனின் சாபத்தால் நாள்தோறும் சிறிது சிறிதாக தேய்ந்து ஒருநாள் முழுமையாக மறையவேண்டிய (அமாவாசை) சாபத்திற்கு ஆளான சந்திரன், சிவனின் அனுக்கிரகத்தால் மீண்டும் வளர்ந்து ஒருநாள் பிரகாசிக்கும் (பவுர்ணமி) விமோசனத்தைப் பெற்ற தலமே திங்களூர் திருத்தலம் என்று தல வரலாறு கூறுகிறது.
ஆரம்பகால கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் இவ்வாலயத்தின் ஐந்துநிலை ராஜகோபுரம், கி.பி 10 மற்றும் 12-ம் நூற்றாண்டுகளில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஐந்து நிலைக் கோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்த இந்த தலம், இரண்டு பிரகாரங்களைக் கொண்டுள்ளது. இந்த ஆலயத்திற்கு தெற்கு வாசலே பிரதானமாகும். கோவிலுக்கு எதிரே ஒரு பெரிய நந்தி உள்ளது. மூலவர் 16 பக்க சகஸ்ர லிங்கம் கருப்பு கிரானைட் கற்களால் ஆனது. இவர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பாள் பெரியநாயகி சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்கு முன்பாக சந்திர தீர்த்தம் உள்ளது. கோவிலை வெளிப் பிரகாரமாக வலம் வரும்போது விநாயகர், சுப்பிரமணியர், கோஷ்டத்தில் அமர்ந்த நிலையில் தட்சிணாமூர்த்தி, கஜலட்சுமி சன்னிதிகளும், சண்டிகேசுவரர் உடன் சண்டிகேஸ்வரி மற்றும் பைரவர் சன்னிதிகளும் அமைந்துள்ளன. இத்தலத்தில் ஷேத்திர பாலகனான சந்திரன், மேற்கு திசை நோக்கி இறைவனை பார்த்தபடி தனிச் சன்னிதியில் காட்சியளிக்கிறார். கோவில் உள்மண்டபத்தின் இடப்புறத்தில் அப்பூதி அடிகள், அவருடைய மனைவி, மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு ஆகியோருடைய மூர்த்தங்களும் காணப் படுகின்றன.
சந்திர தோஷத்தைப் போக்கிக் கொள்ள இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், சந்திரனின் சாபத்தைப் போக்கிய சர்வ வல்லமை பெற்ற கயிலாசநாதரையும் சேர்த்து வழிபடும் பேறுபெற்ற தலம் இது. பெரும்பாலான கோவில்களில் சிவபெருமான் மீது சூரிய ஒளி விழும். சில கோவில்களில் சந்திரன் ஒளிவிழும். ஆனால் இத்தலத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் சூரிய பகவானின் ஒளி படுவதும், பங்குனியில் சந்திர பகவானின் ஒளி படுவதும் சிறப்புக்குரியதாகும். இப்படி சூரிய ஒளிபடும் வேளையில் சூரிய பூஜையும், சந்திரன் ஒளி படும் நேரத்தில் சந்திர பூஜையும் செய்யப்படுகிறது. இந்த ஆலயத்தில் தினமும் 4 கால பூஜை நடக்கிறது. மேலும் பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை, பவுர்ணமி, சதுர்த்தி, மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் போன்ற நாட்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தா்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் நெடுஞ்சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தூரத்திலும், திருவையாறில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.