சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் தேரோட்டம்


சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் தேரோட்டம்
x

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுசீந்திரம்,

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத்திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பக்தி மெல்லிசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. 9-ம் நாள் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி காலை 6.30 மணிக்கு தட்டு வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் 4 ரத வீதிகள் வழியே ஊர்வலமாக வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் தாணுமாலய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தன. காலை 7.50 மணியளவில் தட்டு வாகனங்களில் சுவாமி மற்றும் அம்பாளும், அறம் வளர்த்த நாயகி அம்மனும், விநாயகரும் தனித்தனியாக எழுந்தருளி கோவிலில் இருந்து வெளியே வந்தனர். அப்போது துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் சுவாமியும் அம்பாளும் அம்மன் தேரிலும், அறம் வளர்த்த நாயகி அம்மன் சப்பரத்தேரிலும், விநாயகர் விநாயகர் தேரிலும் எழுந்தருளினர். பின்னர் தேர் சக்கரங்களுக்கு சந்தனம் தெளித்து தேங்காய் உடைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காலை 8.10 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 4 ரத வீதிகள் வழியே வலம் வந்த தேர் சரியாக 10.33 மணிக்கு வெடி முழக்கத்துடன் நிலைக்கு வந்தடைந்தது.

தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் ரத வீதியில் வலம் வந்தபோது பக்தர்களுக்கு மோர், பானகாரம், பழம் போன்றவை பல்வேறு அமைப்பினர் சார்பில் வழங்கப்பட்டது.

10- ம் நாள் திருவிழாவையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள், பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளும் தெப்ப திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினரும், அறங்காவலர் குழுவினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

1 More update

Next Story