திருச்செந்தூர் கோவிலில் மூலவருக்கு மீண்டும் தாராபிஷேகம்


திருச்செந்தூர் கோவிலில் மூலவருக்கு மீண்டும் தாராபிஷேகம்
x

கோவில் கருவறையில் மூலவருக்கு ஏற்படும் கடும் வெப்பத்தை தணிக்கும் வகையில் உபயதாரர்கள் மூலம் 'தாராபிஷேகம்' எனும் பூஜை நடத்தப்படுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை தினசரி அதிகாலை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் என 3 நேரம் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

கோவில் கருவறையில் மூலவருக்கு ஏற்படும் கடும் வெப்பத்தை தணிக்கும் வகையில் உபயதாரர்கள் மூலம் நடைபெற்று வந்த 'தாராபிஷேகம்' எனும் பூஜை கடந்த 2018-ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.

இந்த தாராபிஷேகம் இன்று மீண்டும் தொடங்கியது. இதையொட்டி, கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜையும் நடந்தன.

பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள கந்தசஷ்டி யாகசாலை மண்டபத்தில் கும்பங்கள் வைக்கப்பட்டு ருத்ர பாராயணம் செய்யப்பட்டு, தாராபிஷேக பூஜை நடந்தது. பூஜைகளை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து வேத விற்பனர்கள் பூஜைகள் செய்தனர்.

பின்னர் மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு 122 லிட்டர் பசும் பாலால் தாராபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.


Next Story