பந்தளத்தில் இருந்து சபரிமலை புறப்பட்டது திருவாபரண ஊர்வலம்


பந்தளத்தில் இருந்து சபரிமலை புறப்பட்டது திருவாபரண ஊர்வலம்
x

மகர விளக்கு பூஜையின்போது, சாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு நேற்று ஊர்வலமாக புறப்பட்டது.

திருவனந்தபுரம்,

பிரசித்திப்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கை முன்னிட்டு கடந்த மாதம் (டிசம்பர்) 30-ந் தேதி நடை திறக்கப்பட்டது. தினசரி சாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

மகர விளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் 3 சந்தன பெட்டிகளில் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த திருவாபரணங்கள் நேற்று அதிகாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரண்மனையில் இருந்து பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பக்தர்களின் தரிசனத்துக்கு பின்னர் மேளதாளம் முழங்க திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது. அப்போது வானத்தில் பருந்து வட்டமடித்து சுற்றி வந்தது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த ஊர்வலம் பாரம்பரிய பெரு வழி பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைப்பயணமாக நாளை மதியம் பம்பை சென்றடையும். அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும்.

அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் 18-ம் படிக்கு கீழ் பகுதியில் மந்திரி ராதாகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து 18-ம் படி வழியாக சன்னிதானம் கொண்டு செல்லப்படும் திருவாபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தீபாராதனைக்கு பிறகு பொன்னம்பல மேட்டில் சாமி அய்யப்பன் 3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார். அப்போது பக்தர்கள் ஜோதியை 'சாமியே சரணம் அய்யப்பா' என சரண கோஷம் முழங்கி தரிசனம் செய்வார்கள்.


Next Story