திருப்பதி ஏழுமலையான் கோவிலில் போக சீனிவாசமூர்த்திக்கு சகஸ்ர கலசாபிஷேகம்
18 அங்குலம் உயரமுள்ள போக சீனிவாசமூர்த்தி சிலை, பல்லவ சாம்ராஜ்யத்தை சேர்ந்த ராணி சாமவாய் பெருந்தேவியார் காணிக்கையாக வழங்கியதாகும்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், மூலவருக்கு அருகில் போக சீனிவாசமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வெள்ளியால் உருவாக்கப்பட்ட 18 அங்குலம் உயரமுள்ள இந்த போக சீனிவாசமூர்த்தி சிலை, கி.பி. 614-ம் ஆண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தை சேர்ந்த ராணி சாமவாய் பெருந்தேவியார் என்பவர், ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியதாகும்.
இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் போக சீனிவாசமூர்த்திக்கு ஒவ்வொரு ஆண்டும் சகஸ்ர கலசாபிஷேகம் நடப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சகஸ்ர கலசாபிஷேகம் இன்று காலை 6 மணியில் இருந்து 8.30 மணி வரை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, 1000 கலசங்களில் நிரப்பப்பட்ட புனித நீரால் போக சீனிவாசமூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம், துணை நிர்வாக அதிகாரி லோகநாதன் மற்றும் கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.