திருப்பதி வகுல மாதா கோவிலில் நாளை மறுதினம் ஆண்டு கொண்டாட்டம்


Vakulamata temple anniversary celebrations
x

வகுல மாதா கோவிலில் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையானின் வளர்ப்புத் தாயாக அழைக்கப்படும் வகுலா தேவிக்கு திருப்பதி அருகே கோவில் உள்ளது. திருமலை மலையிலிருந்து 10 கிமீ தொலைவிலும், திருப்பதியிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ள பேரூர் கிராமத்தில் உள்ள ஒரு மலையில் ஸ்ரீ வகுல மாதா கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் நாளை மறுதினம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் ஒரு பகுதியாக காலை 8 மணிக்கு மகாசாந்தி ஹோமம், பூர்ணாஹுதி நடக்கிறது. தொடர்ந்து, காலை 11 மணி முதல் 12 மணி வரை உற்சவருக்கு அஷ்டோத்திர சத கலசாபிஷேகம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

வகுலா தேவி அவதாரம்: மகா விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரின் வளர்ப்புத் தாய் யசோதா, கிருஷ்ணரிடம், அவரது திருமணங்களில் எதையும் பார்க்க முடியவில்லை என்று கூற, கலியுகத்தில் அத்தகைய வாய்ப்பு கிடைக்கும் என்று கிருஷ்ணர் உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது.

கலியுகத்தில், விஷ்ணு பகவான் வெங்கடேஸ்வரராக உலகில் அவதரித்தார். யசோதை வெங்கடேஸ்வராவின் வளர்ப்பு தாயாக வகுலா தேவியாக மீண்டும் பிறந்தார். வெங்கடேஸ்வராவுக்கு ஆகாச ராஜாவின் மகளான பத்மாவதியுடன் திருமணத்தை ஏற்பாடு செய்தார். இவ்வாறு வகுலா தேவி வெங்கடேசப் பெருமானின் திருமணத்தை காண வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டதாக புராணம் கூறுகிறது.


Next Story