இன்று நவமி திதி: இதையெல்லாம் செய்யலாம்..!
பொதுவாக எந்த நல்ல காரியமாக இருந்தாலும் அஷ்டமி, நவமியில் தொடங்குவதை தவிர்ப்பது வழக்கமாக உள்ளது. இந்த நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள் இழுபறியாக முடியும் என்பார்கள். வேறொரு நல்ல நாள் பார்த்து புது முயற்சி செய்யலாம் என்று சொல்வதை கேட்டிருக்கிறோம்.
மற்ற திதிகளை கொண்டாடுவது போல் அஷ்டமி, நவமி திதிகளை மக்கள் கொண்டாடுவதில்லை. இவ்வாறு தங்களுக்கு பக்தர்கள் முக்கியத்துவம் அளிக்காததை அறிந்த அஷ்டமி, நவமி ஆகிய 2 திதிகளும் மிகவும் கவலைப்பட்டு மகாவிஷ்ணுவிடம் முறையிட்டதாம். உடனே இறைவன் 'உங்கள் இருவரையும் கொண்டாடும் விதத்தில் ஒரு செயல் செய்கின்றேன்' என்று சொல்லி அஷ்டமியன்று கண்ணன் அவதாரம் எடுத்த நாளாக அமைத்தார். நவமியன்று ராமர் அவதாரம் செய்த நாளாக அமைத்தார். இதனால் 2 திதிகளும் திருப்தி அடைந்தன. நம்மை மக்கள் கொண்டாட இறைவன் அவதரித்த நாளாக மாற்றிவிட்டதை அறிந்து மகிழ்ச்சிக் கடலில் மிதந்தன.
ராமர் பிறந்தது நவமி திதி என்பதால் ராம நவமியாக கொண்டாடுகிறோம். கிருஷ்ணர் பிறந்த நாள் கோகுலாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. இதன்மூலம் இந்த இரண்டு நாட்களும் தெய்வீக காரியங்களுக்கு ஏற்ற நாட்களாக உள்ளன. எனவே அஷ்டமி, நவமி ஆகிய 2 திதிகளையும் ஒதுக்க வேண்டியதில்லை.
குறிப்பாக அஷ்டமி திதியில் முக்கியமான காரியத்தை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் அன்று கிருஷ்ணரை வணங்கிய பிறகு காரியத்தை தொடங்கலாம். அதே போல நவமி திதியில் ஒரு காரியத்தை செய்தே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தால் ராமபிரான், சீதாதேவி, அனுமன் ஆகியோரை வழிபட்டுவிட்டு அந்த காரியத்தை செய்யலாம்.
ராமபிரான் சீதையை பிரிந்து பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால் தான் நடந்தது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த காரணத்தினால் தான் நவமி திதி நாளில் சுப காரியங்கள், திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் போன்ற நல்ல செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அஷ்டமி, நவமி நாட்களை தேர்ந்தெடுக்காவிட்டாலும் நடைமுறையில் செய்யும் மற்ற காரியங்களுக்கு அந்த திதிக்குரிய தெய்வங்களை வழிபட்ட பிறகு காரியத்தை தொடங்கினால் வெற்றி கிடைக்கும்.
ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால் நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை தரும். நவமியில் காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாட்டை தயக்கமின்றி மேற்கொள்ளலாம். குறிப்பாக, நவமி திதி அன்று போட்டியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தால் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional