திருக்குர்ஆன்: உண்மையே நன்மை தரும்


திருக்குர்ஆன்: உண்மையே நன்மை தரும்
x

அல்லாஹ்வை உண்மையுடன் வணங்கி, அவன் காட்டிய வழியில் வாழ்ந்து வருபவர்களுக்கு மறுமையில் சொர்க்கத்தில் இடம் உண்டு என்று அல்லாஹ் உறுதியாக கூறுகின்றான்.

ஏக இறைவனான அல்லாஹ்வின் படைப்புகளில் சிறந்த படைப்பு மனித இனம். 'தன்னை மட்டும் வணங்க வேண்டும்' என்று மனிதனுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். மனித இனத்தை நேர்வழிப்படுத்த இறைவன் தூதர்களையும் அடையாளம் காட்டி இருக்கின்றான்.

அந்த தூதர்கள், மனிதன் தற்போது வாழும் இம்மை வாழ்வை விட இறைவனின் அரியாசனத்தின் கீழ் வாழும் மறுமை வாழ்வின் சிறப்புகளை எடுத்துக்கூறியுள்ளனர். சிறப்பு மிகுந்த அந்த மறுமை வாழ்வுக்கு நம்மை எப்படி தயார் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் அல்லாஹ்வின் திருத்தூதர்கள் விளக்கி கூறியுள்ளனர்.

மனிதன் இம்மையில் எப்படி வாழ வேண்டும் என்று இறைவன் கூறியதில் முக்கியமானது, உண்மையுடன் நடந்து கொள்வது. முதலில் தன்னை படைத்த இறைவனுக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். இறைவன் எப்படி எல்லாம் தன்னை வணங்க வேண்டும், எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கின்றானோ அதற்கு ஏற்ப மனிதன் உண்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

ஆனால் சபலங்களுக்கும், ஆசைகளுக்கும் அடிமையான மனித மனம் உண்மையில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறது. இந்த உலக வாழ்க்கை குறித்து திருமறையில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

"இன்னும் மனிதர்களில் "நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்" என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்". (திருக்குர்ஆன் 2:8).

"இவ்வாறு கூறி அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை. (திருக்குர்ஆன் 2:9).

"மனிதர்களே! நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இந்த உலக வாழ்க்கை எல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், வெறும் அலங்காரமும் தான். தவிர, உங்களுக்கிடையில் ஏற்படும் வீண்பெருமையும், பொருளிலும், சந்ததியிலும் அதிகரிக்க வேண்டும் என்ற வீண் எண்ணமும் தான். இதன் உதாரணமாவது: ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அந்த மழையினால் முளைத்த பயிர்கள் நன்கு வளர்ந்து விவசாயிக்குக் களிப்பை உண்டுபண்ணிக் கொண்டிருந்தன. பின்னர், அவை மஞ்சனித்துக் காய்ந்து, சருகுகளாகி விடுவதைக் காண்கின்றான். இந்த உலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கின்றது. மறுமையிலோ அவர்களில் பலருக்குக் கொடிய வேதனையும், பலருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இந்த உலக வாழ்க்கை மனிதனை மயக்கும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை". (திருக்குர்ஆன் 57:20).

ஏக இறைவனான அல்லாஹ்வை உண்மையுடன் வணங்கி, அவன் காட்டிய வழியில் வாழ்ந்து வருபவர்களுக்கு மறுமையில் சொர்க்கத்தில் இடம் உண்டு என்று அல்லாஹ் உறுதியாக கூறுகின்றான்.

"எவர் ஈமான் (இறையச்சம்) கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் (அல்லாஹ்) சுவனபதிகளில் நுழைய வைப்போம்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்? (திருக்குர்ஆன் 4:122).

இறைவன் காட்டிய வழியில் உண்மையுடன் நடந்து, அதற்கு பரிசாக இறைவன் தரும் சொர்க்க வாழ்வை நாம் அனைவரும் பெற உறுதிகொள்வோம். ஆமின்.


Next Story