வைகுண்ட ஏகாதசி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 23-ந்தேதி தங்கத்தேரோட்டம்


வைகுண்ட ஏகாதசி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 23-ந்தேதி தங்கத்தேரோட்டம்
x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் தரிசனம் நடைபெற உள்ளது.

திருமலை,

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 23-ந் தேதி வைகுண்ட ஏகாதசி, 24-ந் தேதி வைகுண்ட துவாதசி விழா நடக்கிறது. வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை 1.45 மணிக்கு 'சொர்க்கவாசல்' திறக்கப்படுகிறது. அன்று காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை தங்கத்தேரோட்டம் நடக்கிறது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் தரிசனம் நடப்பதால், அதில் ஏதேனும் ஒரு நாளில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து மூலவர் மற்றும் உற்சவர்களை தரிசனம் செய்தால், பக்தர்களுக்கு ஒரே மாதிரியான புண்ணிய பலன் கிடைக்கும்.

வைகுண்ட ஏகாதசி நாளில் திருமலையில் உள்ள நாத நீராஞ்சன மேடையில் காலை 6 மணியில் இருந்து 7 மணி வரை விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணமும், கீதா ஜெயந்தியான அதே நாள் மதியம் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை பகவத் கீதை அகண்ட பாராயணமும் நடக்கிறது. வைகுண்ட துவாதசியான 24-ந்தேதி அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் நடக்கிறது. அன்று பக்தர்கள் ஸ்ரீவாரி புஷ்கரணியில் புனித நீராடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story