பாவங்கள் மன்னிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?


பாவங்கள் மன்னிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?
x

“குறுக்கு வழி உண்டா பரலோகத்திற்கு?” என்று ஒரு முதியவர் கேட்டாராம். காரணம், அவர் வாழ்நாள் எல்லாம் குறுக்கு வழிகளிலேயே சென்று பழக்கப்பட்டவர். மக்கள் எல்லாம் குறுக்கு வழியிலேயே பழக்கப்பட்டு நேர் வழிகளை குறித்து அறியாமலேயே இருக்கிறார்கள்.

புதிய ஏற்பாட்டின் நாட்களில், கர்த்தருடைய வரத்தை பணம் கொடுத்து குறுக்கு வழியில் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று சீமோன் என்ற மாய வித்தைக்காரன் எண்ணினான்.

பேதுரு அவனைப் பார்த்து, "தேவனுடைய வரத்தை பணத்தினாலே சம்பாதித்துக் கொள்ள லாம் என்று நீ நினைத்தபடியினால், உன் பணம் உன்னோடு கூட நாசமாய் போகக்கடவது. உன் இருதயம் தேவனுக்கு முன்பாக செம்மையாய் இராதபடியினால், இந்த விஷயத்திலே உனக்கு பங்குமில்லை பாகமு மில்லை" (அப். 8:20,21) என்று கடிந்து கொண்டார்.

"பாவம் மன்னிக்கப்பட குறுக்கு வழி எதுவாகிலும் உண்டா?" என்று கேட்கிறார்கள். தான தர்மம் செய்து விட்டால், வழிபாட்டுத்தலங்களில் உள்ள உண்டியலில் கொண்டு பெரும் தொகையை போட்டு விட்டால் பாவம் நீங்கிவிடும் என்று சிலர் கருதுகிறார்கள். இன்னும் சிலர் ஒவ்வொரு வருஷத்தின் முடிவிலே ஒரு காற்றாடியின் மேல் தங்களுடைய பாவங்களை எல்லாம் எழுதி, உயர பறக்கவிட்டு கயிற்றை அறுத்து விட்டால் தங்களுடைய பாவங்களும் காற்றோடு காற்றாக போய்விடும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அப்படியும் பாவம் போவதில்லை.

பாவம் நீங்க ஒரே வழி இயேசுவின் ரத்தம் தான். நீங்கள்: "ஆண்டவரே, நான் ஒரு பாவி. பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு விரோதமாகவும் பாவம் செய்தேன். நீர் எனக்காக கல்வாரி சிலுவையிலே ஜீவனைக் கொடுத்தீர் என்று விசுவாசிக்கிறேன். என்னுடைய பாவங்களை எல்லாம் மன்னியும்" என்று கேட்பீர்கள் என்றால், நிச்சயமாகவே இயேசுவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி உங்களை சுத்திகரிக்கும்.

ஒருமுறை ஒருவர் பரலோகத்தின் வாசலை அடைந்தாராம். காபிரியேல் தூதன் அவரைப் பார்த்து, "உன்னை பரலோகத்திலே சேர்ப்பதற்கு உன்னிடத்தில் என்ன தகுதி இருக்கிறது?" என்று கேட்டாராம்.

இது அந்த பக்தனை சிந்திக்க வைத்தது.

"நான் வாரந்தோறும் ஆலயத்திற்கு போகிறேன் என்று சொல்லுவதா?, காணிக்கை ஒழுங்காக கொடுக்கிறேன், தினமும் பாட்டு பாடி ஜெபம் பண்ணுகிறேன். பொய் சொல்லவில்லை, திருடவில்லை, எந்த பாவமும் செய்யவில்லையென்று சொல்லுவதா? பரலோகத்திற்கு செல்லுவதற்கு வழி என்ன?" என்று சிந்தித்துப் பார்த்தார்.

முடிவிலே அவர், "கர்த்தர் தம்முடைய ரத்தத்தை சிந்தி என்னை அவருடைய பிள்ளையாக்கி இருக்கிறார். அவருடைய கிருபையினாலே நான் தகுதி பெற்றிருக்கிறேன்" என்று சொன்னாராம். உடனே பரலோகத்தின் வாசல்கள் திறந்தன.

பிரியமானவர்களே, பரலோகத்திற்கு செல்ல எந்த குறுக்கு வழியும் கிடையாது. "இயேசு ஒருவரேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் சேரான். அவரே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார்" (யோவான் 14:6).

"ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு" (சங். 68:20).

"ஒருவன் என் வார்த்தைகளை கைக்கொண்டால் அவன் என்றென்றைக்கும் மரணத்தை காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (யோவா. 8:51).


Next Story