சிறு விவசாயிகளின் பட்டியலை விரைந்து அனுப்ப வேண்டும்


சிறு விவசாயிகளின் பட்டியலை விரைந்து அனுப்ப வேண்டும்
x
தினத்தந்தி 22 Feb 2019 9:30 PM GMT (Updated: 2019-02-22T23:19:08+05:30)

நாளை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள். இந்த ஆண்டு ஜெயலலிதா பிறந்தநாளுக்கு ஒரு சிறப்பு அம்சம் இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் மத்திய அரசாங்கத்தின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நாடு முழுவதும் 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் 12 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் 3 தவணைகளாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் 2018-ம்ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி முதல் தொடங்கியது. அந்தவகையில் வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதியோடு முடிவடையும் நிதி ஆண்டுக்கான தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி நாளை கோரக்பூரில் தொடங்கி வைக்கிறார்.

ஜெயலலிதா பிறந்தநாளான அதேநாளில் தமிழ்நாட்டிலும் இந்த திட்டம் தொடங்கப்போகிறது. நாளை சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் இந்த விழாவில் மத்திய மந்திரி பியூஸ் கோயலும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டு தமிழகத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். மாநில அரசுகள் இந்த திட்டத்தின் பலனை பெறுவதற்காக சிறு மற்றும் குறு விவசாயிகளின் பட்டியலை மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பவேண்டும். அந்தவகையில், தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் இருந்து இதுவரை 2 கோடியே 20 லட்சம் விவசாயிகளின் பட்டியல் தான் மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பப் பட்டுள்ளது. இதில் தகுதி உள்ளவர்கள் யார்? யார்? என்று பொது நிதி மேலாண்மை அமைப்பு பரிசீலித்து ஒரு கோடிக்கு மேலான விவசாயிகளுக்குத்தான் நாளை அவர்கள் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த இருக்கிறது. தமிழ்நாட்டில் இப்போதும் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பங்களை தாக்கல் செய்து கொண்டிருக்கிறார்கள். பலருக்கு இந்த திட்டத்தின் பலன் பற்றிய விவரங்கள் இன்னும் போய் முழுமையாக சேரவில்லை. மத்திய அரசாங்கத்துக்கு அதிக விவசாயிகள் எண்ணிக்கையில் பட்டியலை அனுப்பி வைத்த மாநிலங்கள் வரிசையில் உத்தரபிரதேசம், மராட்டியம், குஜராத், அசாம், அரியானா ஆகிய மாநிலங்கள் தான் இருக்கிறதே தவிர தமிழ்நாடு இல்லை என்பது வருத்தத்துக்குரியது.

கிராம நிர்வாக அதிகாரிகள் அவரவர் கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த விவரத்தை தெரிவித்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான பணிகளையும் மேற்கொள்ள உதவியாக இருக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்ய அவர்கள் பெயரில் உள்ள பட்டா நகல், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், வங்கி கணக்கு நகல், 2 புகைப்படம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என்ற விவரத்தை தெரிவித்து, அதற்கேற்ப விண்ணப்பங்களை அடுத்த சிலநாட்களில் பெற்று முடிக்கவேண்டும். யார்? யார்? இந்த நிதியுதவியை பெற தகுதியானவர்கள் என்பதை கணக்கிட்டு இந்த நிதி உதவியை பெற தமிழ்நாட்டில் உள்ள 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் தகுதியான சிறு, குறு விவசாயிகள் எத்தனை பேர்? என்ற விவரங்களை தமிழகஅரசும் தொகுத்து முழுமையான பட்டியலை விரைவாக தாக்கல் செய்தால் இந்த ஆண்டு 2 ஆயிரம் ரூபாயும், தொடர்ந்து ஏப்ரல் முதல் அடுத்த தவணையையும் ஆண்டுதோறும் பெறவும் வசதியாக இருக்கும். தமிழகத்தில் மாவட்ட வாரியாக பயன்பெறும் விவசாயிகள் எத்தனை பேர்? என்பதையும் அறிவிக்க வேண்டும்.

Next Story