தமிழ்நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சி !


தமிழ்நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சி !
x
தினத்தந்தி 26 Jan 2022 8:33 PM GMT (Updated: 26 Jan 2022 8:33 PM GMT)

ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு முக்கிய நிர்வாகியாக இருந்த ஒருவர், அங்கு பணியாற்றிய ஊழியர்களிடம், எப்போதும் ஒரு ஆலோசனையை கூறுவார்.

ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு முக்கிய நிர்வாகியாக இருந்த ஒருவர், அங்கு பணியாற்றிய ஊழியர்களிடம், எப்போதும் ஒரு ஆலோசனையை கூறுவார். “உடலில் ஒரு பக்கம் மட்டும் வளர்ச்சி அடைந்தால், அது வளர்ச்சி அல்ல, வீக்கம். உடலின் அனைத்து பாகங்களும் ஒருசேர வளர்ச்சி அடைந்தால்தான் அது உண்மையான வளர்ச்சி. அந்த வகையில், நிறுவனத்தில் ஒரு துறை மட்டும் வளர்ச்சி அடைந்தால் போதாது. அனைத்து துறைகளும் ஒன்றுபோல வளர்ச்சி அடைந்தால்தான் அந்த நிறுவனம் முன்னேற்றம் காணமுடியும்” என்று கூறுவார்.

இதைத்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சமச்சீர் வளர்ச்சி என்றும், திராவிட மாடல் வளர்ச்சி என்றும் கூறுகிறார். “தமிழகத்தின் வளர்ச்சி என்பது-சமூகத்தின் வளர்ச்சியாக, வாழ்க்கை வளர்ச்சியாக, சிந்தனை வளர்ச்சியாக, பண்பாட்டு வளர்ச்சியாக இருக்கவேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி. அத்தகைய வளர்ச்சிக்கு பெயர் சூட்ட வேண்டுமென்றால், அதுதான் திராவிட மாடல். பொருளாதாரம்-கல்வி-சமூகம்-சிந்தனை-செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளரவேண்டும். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி” என்கிறார். இந்த கருத்தைத்தான், சமீபத்தில் நடந்த மாநில திட்டக்குழு ஆய்வுக்கூட்டத்தில் அவர் தெளிவாக சுட்டிக்காட்டினார்.

அரசு நிறைவேற்ற வேண்டிய பல திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கும் இந்த திட்டக்குழுவின் தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சனும் இருக்கிறார்கள். மேலும், பல நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆய்வு கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கருத்தை முன்வைத்தார். அதாவது, “சமச்சீரான வளர்ச்சி-அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான வளர்ச்சி இதுவரை நம்மிடம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டாகவேண்டும். தொழில் வளர்ச்சியிலும், கல்வியிலும் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபாடு உள்ளது. சில மாவட்டங்களில் வறுமை குறைவாகவும், சில மாவட்டங்களில் அதிகமாகவும் இருப்பதை நாம் காண்கிறோம். இந்த வேறுபாட்டை களைய தமிழகம் முழுமைக்கான ஒரு வேலை திட்டம் தேவை. சமச்சீரான வளர்ச்சிக்கான பயணத்தை நாம் உடனடியாக தொடங்கியே ஆகவேண்டும்” என்று பிரகடனப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் சமச்சீரான வளர்ச்சி நிச்சயமாக தேவை. மாநிலம் முழுவதும் ஒரேபோல வளர்ச்சி காணப்பட்டால்தான் எல்லா மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு பெருகும். உள்கட்டமைப்பு வசதிகள் வளரும். உற்பத்தி பெருகும். அனைத்து மாவட்டங்களும் ஒன்றுபோல வளர்ச்சியை காணமுடியும் என்பது நிதர்சனமான உண்மையாகும். தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும் வளர்ச்சி பெறவேண்டும் என்ற நோக்கில், தொழில் துறையும், சிறு தொழில் துறையும் தங்கள் முயற்சிகளை தொடங்கியுள்ளது மிகுந்த வரவேற்புக்குரியது. அனைத்து மாவட்டங்களிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடங்குவதற்கு தமிழக அரசு சலுகைகள் அளிக்கிறது. ஆனால், மொத்தம் உள்ள 385 பஞ்சாயத்து யூனியன்களில் ஏறத்தாழ 200 பஞ்சாயத்து யூனியன்கள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கியதாக வகைப்படுத்தப்பட்டு, அங்கு இத்தகைய தொழில்களை தொடங்குபவர்களுக்கு மூலதன மானியம் வழங்கப்படுகிறது என்கிறார், இந்தத்துறையின் செயலாளர் அருண் ராய்.

பெரிய தொழிற்சாலைகளை பொறுத்தமட்டில், தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு சலுகைகள் அளித்தாலும், அனைத்து மாவட்டங்களும் பயன்பெறவேண்டும் என்றவகையில், 23 மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டு, அங்கு தொழில் தொடங்கவரும் நிறுவனங்களுக்கு கூடுதலாக சலுகைகள், மானியங்கள் வழங்கப்படுகிறது. மின்சார வாகனங்கள் போன்ற சில குறிப்பிட்ட தொழில்களை தொடங்கும் நிறுவனங்களுக்கு இன்னும் கூடுதலாக சலுகைகள் வழங்கப்படுகிறது என்கிறார், தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன்.

தமிழகத்தை பொறுத்தமட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும், சில குறிப்பிட்ட தொழில்களை தொடங்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. அரசு வழங்கும் சலுகைகள், மானியங்கள், தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் போன்ற விவரங்களை தொழில் முனைவோரிடம், குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை தொடங்க நினைப்போரிடமும் கொண்டுபோய் சேர்க்கும் வகையில், நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முயற்சிகளை எடுக்கவேண்டும்.

Next Story