தாலிக்கு தங்கம் திட்டத்தைவிட இது நல்லது!


தாலிக்கு தங்கம் திட்டத்தைவிட இது நல்லது!
x
தினத்தந்தி 17 May 2022 8:41 PM GMT (Updated: 17 May 2022 8:41 PM GMT)

“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்” என்றார், மகாகவி பாரதியார் அன்று. அந்த வகையில், இதுவரை தமிழகத்தை ஆண்ட அரசுகள், பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தன. இதில், மற்றொரு மைல் கல்லாக இந்த ஆண்டு பட்ஜெட்டில், மேலும் ஒரு நல்ல திட்டம் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளின், உயர்கல்வி சேர்க்கை மிகக்குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் என்பது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் என்று மாற்றியமைக்கப்படுகிறது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாதம் ரூ.1,000, அவர்கள் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள், ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்றுவந்தாலும், இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இந்த திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகள் பயன்பெற வாய்ப்புள்ளது என்று பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு, நிச்சயமாக மாணவிகளை மேற்படிப்பு படிக்கத் தூண்டும்.

பட்ஜெட்டில்தான் இந்த அறிவிப்பை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார் என்றால், அதற்கும் சிறப்பு கூட்டும் வகையில், பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளிக்கும்போது, “இந்த திட்டத்தில் 10-ம் வகுப்பு படித்து முடித்து பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. செல்லும் மாணவிகளுக்கும் நிதியுதவி வழங்கவேண்டும் என்று பல உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதை ஏற்று இத்திட்டம் திருத்தியமைக்கப்படும்” என்று அறிவித்தார். இனி பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோரும், 10-ம் வகுப்போ, 12-ம் வகுப்போ படித்து முடித்த தங்கள் மகள்களின் படிப்பை நிச்சயம் நிறுத்தமாட்டார்கள். அவர்களுக்கு செலவு இல்லாமல் அரசு உதவித்தொகை மூலமாகவே உயர் படிப்புக்கு அனுப்ப முடியும்.

இதற்கு மெருகூட்டுவதுபோல, முதல்-அமைச்சரின் “நான் முதல்வன்” திட்டம் பல திறன்மேம்பாட்டு பயிற்சிகளையும் மாணவிகளுக்கு அளிக்கும். இந்த திட்டத்தை கொண்டுவருகிற அதேநேரத்தில், இதுவரை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழை பெண்கள் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட, தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டதே என்ற விமர்சனம் இப்போதும் கூறப்படுகிறது. ஆனால், “பசியாக இருப்பவனுக்கு ஒரு மீனை கொடுத்தால், அவனுக்கு ஒருநாள் உணவளிக்கலாம். அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும்” என்ற பழமொழிக்கேற்ப, தமிழக அரசு தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு பதிலாக உயர்கல்விக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு படித்து முடித்த பெண்கள், அதோடு படிப்பை நிறுத்திவிடாமல் உயர்கல்விக்கு சென்றுவிடுவார்கள். இதனால், அவர்கள் தங்கள் சொந்த காலில் நின்று தாங்களாகவே சம்பாதிக்க தொடங்கிவிடுவார்கள். அவர்கள் பொருளாதார நிலை உயர்ந்து அவர்கள் திருமணத்தை அவர்களே நடத்திக்கொள்ளும் வசதியை பெறுவார்கள்.

தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஏறத்தாழ ஒரு லட்சம் பெண்களே பயனடைந்து வந்தார்கள். தமிழக அரசு கொண்டுவந்துள்ள மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில், ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள். மேலும், சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு சொன்னது போல, தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பித்த ஏராளமான பெண்களுக்கு திருமணம் முடிந்த பிறகே தாலிக்கு தங்கமும், உதவித்தொகையும் கிடைத்திருக்கிறது. எனவே, பெண்களின் வாழ்க்கை முழுவதும் பிரகாசமாக இருக்க வேண்டுமானால், தாலிக்கு தங்கம் திட்டத்தைவிட 10, 12-ம் வகுப்புகளை முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு, அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டமே சாலச்சிறந்தது என்பதை ஆழமாக உற்றுநோக்கினால் புலனாகும்.


Next Story