பசுமை கட்டமைப்பு ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு


பசுமை  கட்டமைப்பு  ஏற்படுத்தும் சுற்றுச்சூழல்  பாதுகாப்பு
x
தினத்தந்தி 17 Jun 2017 3:00 AM IST (Updated: 16 Jun 2017 4:20 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய காலகட்டத்தில் நிலவும் சுற்றுப்புற சூழல் பாதிப்பு காரணமாக, அனைத்து கட்டிடங்களும் பசுமை கட்டிடங்களாக உருவாக்கப்படுவது அவசியம் என்று கருதப்படுகிறது.

ன்றைய காலகட்டத்தில் நிலவும் சுற்றுப்புற சூழல் பாதிப்பு காரணமாக, அனைத்து கட்டிடங்களும் பசுமை கட்டிடங்களாக உருவாக்கப்படுவது அவசியம் என்று கருதப்படுகிறது. பல்வேறு அரசு அமைப்புகள் பசுமை கட்டிடத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அவற்றின் அடிப்படை விதிகளை அனைத்து தரப்பு மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்பது வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது.

இடம் வேண்டும்

பசுமை கட்டிடங்களை அமைக்க இடவசதியோடு, மாற்று தொழில்நுட்ப முறைகளும் முக்கியம். நகரப்பகுதிகளில் இடநெருக்கடி காரணமாக, மாற்று யுக்திகளை கையாள வேண்டியதாக இருக்கும். புறநகர் பகுதிகளில் கட்டப்படும் வீடுகளாக இருக்கும் பட்சத்தில், இம்முறைகள் அனைத்தையும் கடைப்பிடிக்க முடியும். பெரிய அளவிலான கட்டிடங்கள் அல்லது சிறிய அளவிலான கட்டிடங்கள் ஆகிய எதுவானாலும், பசுமை கட்டிடங்களாக அமைக்கலாம்.

மரங்கள் பாதுகாப்பு

பொதுவாக, கட்டுமானங்களை வடிவமைக்கும் போது அந்த இடத்தின் இயற்கை வளங்களாகிய மரங்கள், கிணறுகள் போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அருகில் உள்ள மரங்களின் வளர்ச்சியை தடுக்காமல் அவற்றை கட்டுவது முக்கியம். கிணறுகள் இருந்தால் அவற்றை மூடிவிடாமல், அதன் நீராதாரத்தை பயன்படுத்தும் வகையில் மாற்றங்களை செய்து கட்டுமானங்களை அமைக்க வேண்டும். இயற்கையை பாதுகாக்கும் விதத்தில் மேற்கண்ட முறையில் கட்டுமான பணிகளை செய்யலாம்.

கழிவு நீர் சுத்திகரிப்பு

தற்போது நகர்ப்புறங்களில் உருவாக்கப்படும் குடியிருப்புகளில் ஆங்காங்கே இ.டி.பி மற்றும் ஆர்.ஓ என்று சொல்லப்படும் கழிவு நீர் மற்றும் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புறநகர் பகுதிகளை கவனத்தில் கொண்டு தேவையான வசதிகளை அரசு செய்து தரும் பட்சத்தில் மக்கள் அதிகமாக புறநகர் பகுதிகளில் பசுமை கட்டிடங்கள் அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

மாற்றம் அவசியம்

மேலும், நூறு வீடுகளுக்குமேல் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் ‘மினி சிட்டி டைப்’ குடியிருப்பு ஆகியவற்றில் தற்போது பசுமை கட்டுமான விதிகள் கையாளப்படுவது கவனிக்கத்தக்கதாக உள்ளது. பொதுவாக, பசுமை கட்டமைப்புகளில் போதிய இடம் விட்டு கட்டுவது மட்டுமல்லாமல், அதன் அமைப்பு மற்றும் கட்டுமான மூலப்பொருள்கள் ஆகியவற்றில் மாற்றம் என்ற வி‌ஷயங்கள் இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

மாற்று பொருட்கள்

வழக்கமாக, கட்டுமானங்களில் சிமெண்டு பயன்பாடு அதிகமாக இருக்கும். ஒரு டன் சிமெண்டு உற்பத்தியில், கிட்டத்தட்ட அதே அளவு கார்பன்–டை ஆக்ஸைடு வெளிப்படுவதாக அறியப்பட்டுள்ளது. அதை தடுக்கும் விதத்தில் தற்போது நிலக்கரி சாம்பல் வார்ப்புகளிலிருந்து கிடைக்கும் மணல், இரும்பு குழம்பு கலந்த ஸ்லாக் என்ற பொருள், சிலிகாபியூம் என்கிற பொருள் ஆகியவற்றை சிமெண்டின் ஒரு பகுதியாக சேர்த்து கான்கிரீட் தயாரிக்கப்படுவது கவனிக்கத்தக்கது. சிமெண்டு கலப்பு இல்லாமல் நிலக்கரி சாம்பலால் தயாரிக்கப்பட்ட ‘ஜியோ பாலிமர் கான்கிரீட்’ பயன்பாடு பற்றியும் கட்டுனர்கள் கவனிக்க வேண்டும்.

பல்வேறு நடவடிக்கைகள்

இந்திய அளவில் பசுமை கட்டிடம் தொடர்பான நடவடிக்கைகள் சமீப காலத்தில் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் நாட்டில் பல்வேறு தனியார் மற்றும் அரசு அமைப்புகள் அந்த பணிகளை கவனித்து வருகின்றன. மேலும், கார்பன்–டை ஆக்ஸைடு முற்றிலும் இல்லாத நிலக்கரி சாம்பல் செங்கற்களை பயன்படுத்தி கட்டுமானங்களை வடிவமைப்பதிலும், உமி சாம்பல் கலந்த சிமெண்டினால் ஆன கான்கிரீட் பிளாக்கை பயன்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முயற்சிகள் அவசியம்

பசுமைக் கட்டிடம் என்பது சமீபகாலத்தில் உருவாக்கப்பட்ட கருத்து என்று பலரும் கருதுவதால், அதன் முக்கியத்துவம் பெரிய அளவில் உணரப்படவில்லை என்று பல வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். பசுமை கட்டிட வடிவாக்கத்தில், தமிழ்நாடு தற்போது கவனம் செலுத்தி வருகிறது. மேலும், அந்த முயற்சி பரவலாக்கப்பட்டு கட்டுமான பணிகளின்போது, வெவ்வேறு நிலைகளில் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை குறைக்க வேண்டும் என்பது இன்றைய தேவையாக உள்ளது.

Next Story