குட்டி பையன்கள் மனம் கவரும் உள் அலங்காரம்


குட்டி பையன்கள் மனம் கவரும்  உள்  அலங்காரம்
x
தினத்தந்தி 24 Jun 2017 5:00 AM IST (Updated: 23 Jun 2017 6:24 PM IST)
t-max-icont-min-icon

எப்போதும் குதூகலமாகவும், உற்சாகமாகவும் காணப்படும் குட்டிப்பையன்கள் இருக்கும் இடம் ‘கலர்புல்’–ஆக இருக்கவேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் விரும்புகிறார்கள்.

ப்போதும் குதூகலமாகவும், உற்சாகமாகவும் காணப்படும் குட்டிப்பையன்கள் இருக்கும் இடம் ‘கலர்புல்’–ஆக இருக்கவேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் விரும்புகிறார்கள். மழலை பேச்சால் கலகலப்பான சூழ்நிலையை உருவாக்கும் குட்டிப்பசங்கள் உலகமெங்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக இன்றைய சூழலில் குட்டி குழந்தைகளுக்கும்கூட விளையாடுவதற்காக அவர்களுக்கென்று வீட்டில் தனியாக ஒரு இடம் வடிவமைக்கப்படுவது உலகளாவிய வழக்கமாக இருந்து வருகிறது.

விளையாட்டில் நவீனம்

இன்றைய காலகட்டத்தில் அவர்கள் தலையாட்டி பொம்மைகள் அல்லது பொம்மை ரயில் வண்டிகளுடன் விளையாடுவதில்லை. ‘குட்டி கம்ப்யூட்டர்’, நவீன செல்போன் மற்றும் ‘பேட்டரி கார்’ வகையறாக்களுடன் அவர்களது விளையாட்டும் உயர் தொழில் நுட்பமாக மாறிவிட்ட காரணத்தால், வீடுகளில் அதற்கான இடவசதி செய்து தரவேண்டியது அவசியமாக மாறி விட்டது. உள் கட்டமைப்புகளில் பசங்களுக்கு தனி அறை அல்லது ஒரு பகுதி ஒதுக்க வேண்டும். கம்ப்யூட்டர் பயன்பாடு, கேரம் அல்லது செஸ் விளையாட இடம், படிக்கவும், எழுதவும், நோட்டு புத்தகங்கள் அடுக்க என்று அவர்களுக்கான இடவசதி தேவைப்படுகிறது. அதன்மூலம், அவர்களுடைய வேலைகளை அவர்களே செய்து பழகும் வாய்ப்புகள் ஏற்படும்.

‘குஷி’ தரும் அமைப்புகள்

குட்டி பசங்கள் பயன்படுத்த வசதியான ‘பர்னிச்சர்’ வகைகள் இப்போது கிடைக்கின்றன. சிறிய சைஸ் மேசைகள், அதற்கேற்ற குட்டி நாற்காலிகள் அல்லது நீளமான டெஸ்க் போன்றவை அவர்களுக்கு பலவிதங்களிலும் உபயோகமாக இருக்கும். அவர்கள் உயரத்திற்கு ஏற்ப இருப்பதால் பயன்படுத்துவதும் எளிது. இரண்டு பசங்கள் இருக்கும்பட்சத்தில் பங்க் பெட் (இரண்டு அடுக்கு படுக்கை) அமைத்துவிட்டால் அவர்கள் குஷியாகி விடுவார்கள். மேலும், சுவர்களில் அவர்களே பயன்படுத்தும் விதத்தில் ரெடிமேடாக கிடைக்கும் குட்டி ‘வார்டு ரோப்புகள்’ அமைத்தும், தரைத்தளத்தில் பசுமையாகவும், குளிர்ச்சியாகவும் உள்ள ‘லான் கார்பெட்’ விரித்தும் அவர்களை பரவசமாக்கலாம். கீழே விழுந்தாலும் அடிபடாமல் புல்தரை போன்று இருப்பதால் அதன் நடுவில் சிறிய சறுக்கு மரம், குட்டி சோபா, சின்ன ஊஞ்சல், பொம்மைகளை அடுக்க அலமாரி போன்றவற்றையும் வைக்கலாம்.

வண்ண அலமாரிகள்

குட்டி பையன்கள் தங்களது அறை அல்லது இடத்தில் உள்ள அலமாரிகளில் அவர்களது துணிகளை அடுக்குவது, விளையாட்டு பொருட்களை சரியாக வைப்பது, தரைப்பராமரிப்புகள் போன்றவற்றை சிறு வயதிலேயே செய்துகொள்வதற்கு மேற்கண்ட பொருட்கள் உறுதுணையாக இருக்கும். அவர்களுக்கான இடம், அவர்களது பொருள் என்ற நிலையில் அவர்களாகவே அடுக்கி வைத்து பழகிக்கொள்வார்கள். போதிய இடவசதி இல்லாத நிலையில் அனைத்து வண்ணங்களையும் கொண்ட பி.வி.சி–யால் தயாரிக்கப்பட்ட புத்தக அலமாரிகள் வைத்து, அவர்கள் விருப்பத்திற்கேற்ற விதவிதமான படங்களையும் ஒட்டி வைக்கலாம்.

மேசை மற்றும் நாற்காலிகள்


தனி அறை அமைக்கும் வாய்ப்பு இல்லாவிட்டால் வீட்டின் ஒரு இடத்தை அவர்களுக்கு பிடித்த மாதிரி மாற்றி அவர்கள் உயரத்திற்கு ஏற்ற மேசை, நாற்காலிகள் அல்லது மேசையுடன் கூடிய நாற்காலிகள் அமைத்து தரலாம். அல்லது, ‘பிளாஸ்டிக்‘ நாற்காலிகளையும் பயன்படுத்தலாம். அவை இப்போது தரமாகவும், பல வண்ணங்களுடன் நல்ல டிசைன்களில் கிடைக்கின்றன. சுவர் பெயிண்டிங் அமைப்புக்கு மேட்சிங்–அக இருப்பதுபோல தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இடம் மிச்சமாகும் வகையில் அனைத்தும் ‘செட்டாக’ கிடைக்கின்றன. படிக்கும் மேஜையில் ‘டேபிள் லேம்ப்’ வைக்கும்பொழுது அவர்களுக்கு இடப்புறம் இருந்தால், வெளிச்சம் சரியாக கிடைப்பதோடு, நிழல் புத்தகத்தின் மேல் விழாமல் படிக்க வசதியாக இருக்கும்.

திவான் அமைப்பு

அறைகளில் இடம் போதுமானதாக இல்லாவிட்டால், ‘திவான்’ படுக்கையை அமைத்தால் அமர்வதற்கும், உறங்குவதற்கும் டூ இன் ஒன்–ஆக அதாவது, பகலில் சோபாவாகவும், இரவில் படுக்கையாகவும் பயன்படும். மேலும் அதன் கீழ்ப்புறம் ‘ஸ்டோரேஜ்’ வசதி கொண்டதாக இருப்பது சிறப்பாக இருக்கும்.

சில வீடுகளில் மாடிப்படிகளின் கீழ்ப்புறம் உள்ள காலியிடத்தில் பழைய பொருட்கள், பழைய சைக்கிள், ஷூ ஸ்டாண்டு ஆகியவை வைக்கப்படும். அந்த இடத்தையும் ‘பிளே ஸ்டே‌ஷன்’ போன்றும் அமைத்து தரலாம். இரண்டு நாற்காலிகள், மேசை ஆகியவற்றை அமைத்து கேரம், செஸ் போன்ற விளையாட்டுகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தலாம். அவர்களுக்கான அறைகளில் பல்வேறு வண்ணங்கள் இருக்கவேண்டும். குறிப்பாக, வைலட், ரோஸ், நீலம் மற்றும் பச்சை போன்ற நிறங்கள் அவர்களை கவரக்கூடியது.


Next Story