கட்டமைப்புகளை பாதிக்கும் இரண்டு வகை விரிசல்கள்


கட்டமைப்புகளை பாதிக்கும் இரண்டு வகை விரிசல்கள்
x
தினத்தந்தி 24 Jun 2017 5:30 AM IST (Updated: 23 Jun 2017 6:30 PM IST)
t-max-icont-min-icon

கட்டமைப்புகள் எதுவாக இருந்தாலும் அவற்றின் தொடக்கம் முதல் இறுதி வரையில் கட்டுமான பணிகளை மிக்க கவனத்துடம் மேற்கொள்ள வேண்டும்.

ட்டமைப்புகள் எதுவாக இருந்தாலும் அவற்றின் தொடக்கம் முதல் இறுதி வரையில் கட்டுமான பணிகளை மிக்க கவனத்துடம் மேற்கொண்டாலும், பல சமயங்களில் சுவர்களில் அல்லது தரைப்பரப்புகளில் விரிசல்கள் ஏற்பட்டு விடுவது வழக்கமாக இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறாக பார்க்கப்படும் விரிசல்கள் உண்டாவதற்கு வெளியில் தெரியாத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அஸ்திவாரம் அமைப்பது உள்ளிட்ட மேல்தளம் அமைப்பது முதல் ஜன்னல்கள் பொருத்துவது வரையில் உள்ள வெவ்வேறு கட்டுமான பணிகளில் உண்டாகும் குறைபாடுகள் நாளடைவில் விரிசல்களாக தோன்றுவதாக அறியப்பட்டுள்ளது.

இரண்டு வகை


விரிசல்களை கட்டுமான பொறியாளர்கள் பொதுவான இரண்டு வகைகளாக குறிப்பிடுகிறார்கள். அவை, ‘ஆக்டிவ் கிராக்’ எனப்படும் விரிவடையும் தன்மை கொண்ட விரிசல்கள் மற்றும் ‘டார்மண்ட் கிராக்’ எனப்படும் விரிவடையும் தன்மை இல்லாத விரிசல்கள் என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு இனம் காணப்பட்டுள்ளன.

‘ஆக்டிவ் கிராக்’

கட்டிட விரிசல்களில் ‘ஆக்டிவ் கிராக்’ என்பது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், கட்டுமான பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகளால் ஏற்படும் ‘ஆக்டிவ் கிராக்’ என்பது கட்டிடத்துக்கு நிச்சயமான பாதிப்பை உண்டாக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. சிறு அளவில் ஏற்பட்ட விரிசல், நாளடைவில் பெரியதாக மாறுவதோடு, சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் பகுதி இடிந்துவிடும் நிலை ஏற்படும்.

காரணங்கள்

மேற்கண்ட விரிசல்களை தொடக்கத்திலேயே கண்டறிந்துவிட்டால் சிக்கலை உடனடியாக சரி செய்துவிட முடியும். விரிசலின் அளவுகளை அவற்றின் ஆழம் மற்றும் அகலம் ஆகியவற்றை வைத்து அதனால் வரக்கூடிய பாதிப்பை அறிய முடியும். சுவர்கள் அமைக்கப்படும்போது ஏற்பட்ட குறைகள், தள மட்டம் அமைக்கும்போது கச்சிதமான ‘பில்லிங்’ முறைகளை பயன்படுத்தாமல் விட்டது, மண்ணின் பாரம் தாங்கும் தன்மையை சரியாக கணக்கிடாமல் விடப்பட்டது, கிணற்றை தூர்த்து மேலே கட்டிடம் அமைப்பது, மண்ணின் தன்மைக்கு தக்க அஸ்திவார அமைப்புகள் செய்யாமல் விட்டது மற்றும் நிலத்தின் ‘செட்டில்மெண்டு’ எனப்படும், கட்டமைப்பின் அஸ்திவாரத்தை தாங்கும் பூமியின் கீழ்ப்புற தரைமட்டம் கீழே தாழ்வது போன்ற காரணங்களால் ‘ஆக்டிவ் கிராக்’ ஏற்படலாம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தீர்வுக்கான வழிகள்

பெரும்பாலான விரிசல்களுக்கு ‘கிராக் இன்ஜெக்‌ஷன் மெத்தடு’ என்ற முறைப்படி ‘எபாக்ஸி ரெஸின்’ என்ற வேதிப்பொருளை உட்செலுத்தி அடைப்பது வழக்கம். இந்த முறையானது அவ்வளவாக பயன்தரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் பகுதியைப்பொறுத்து நவீன மாற்றுமுறை கட்டுமான யுக்தி அல்லது வேதியியல் தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி சரி செய்ய முடியும். அதாவது, ‘பவுண்டே‌ஷன் பின்னிங்’ என்ற அஸ்திவார தாங்கு தூண்கள் அமைப்பது மற்றும் விஷேச கான்கிரீட் நிரப்புவது போன்ற முறைகள் கடைப்பிடிக்கப்படும். எவ்வகை முறையை கடைப்பிடிப்பதாக இருப்பினும் தொடக்கத்திலேயே அதற்கான பணிகளை செய்வதுதான் பாதுகாப்பானது.

‘டார்மண்ட் கிராக்’

இரண்டாவதாக உள்ள டார்மண்ட் கிராக் எனப்படும் விரிவடையும் தன்மை இல்லாத விரிசல்கள் கட்டிடங்களுக்கு பெரிய ஆபத்தை தருவதில்லை என்று அறியப்பட்டிருக்கிறது. இவ்வகை விரிசல்கள் முதலில் நாம் பார்த்தபோது இருந்த அளவிலேயே பெரிய பாதிப்புகள் இல்லாமல் காணப்படும்.

இருப்பினும் விரிசல்களின் வழியாக ஈரப்பதம் அல்லது தண்ணீர் செல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அதன் காரணமாக வேறு பாதிப்புகள் வரக்கூடிய நிலையும் இருக்கிறது. இவ்வகை விரிசல்களுக்கு ‘எபாக்ஸி ரெஸின்’ போன்ற தக்க வேதியியல் பொருட்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன.

கட்டுமான பொறியாளரது ஆலோசனையின் பேரில் அவற்றை பயன்படுத்தி கட்டிடத்தை பாதுகாத்துக்கொள்ளலாம். 

Next Story