குளிர் கண்ணாடி அணிந்த கட்டிடங்கள்


குளிர் கண்ணாடி அணிந்த  கட்டிடங்கள்
x
தினத்தந்தி 24 Jun 2017 5:30 AM IST (Updated: 23 Jun 2017 6:33 PM IST)
t-max-icont-min-icon

‘அல்பஹர்’ டவர்ஸ் என்ற பெயர் கொண்ட இரண்டு வித்தியாசமான கட்டிடங்கள், 29 மாடிகள் கொண்டதாகவும், 145 மீட்டர் உயரம் உள்ளதாகவும் ஐக்கிய அரபு குடியரசின் தலைநகரான அபுதாபியின் கிழக்கு நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளன

‘அல்பஹர்’ டவர்ஸ் என்ற பெயர் கொண்ட இரண்டு வித்தியாசமான கட்டிடங்கள், 29 மாடிகள் கொண்டதாகவும், 145 மீட்டர் உயரம் உள்ளதாகவும் ஐக்கிய அரபு குடியரசின் தலைநகரான அபுதாபியின் கிழக்கு நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டிடம் ‘அபுதாபி இன்வெஸ்ட்மெண்ட் கவுன்சில்’ என்ற அரசு அலுவலகமாகவும், இன்னொன்று ‘அல்ஹிலால்’ நிதி நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது.

குளிர் கண்ணாடி

மேற்கண்ட தகவல்களை விடவும் ஒரு முக்கியமான வி‌ஷயம் என்னவென்றால், அந்த கட்டிடங்களுக்கு சூரிய வெப்பம் தாக்காதவாறு குளிர் கண்ணாடிகள் அணிவிக்கப்பட்டுள்ளதுதான். மனிதர்கள் வெயிலின் தாக்கம் கண்களை பாதிக்காதவாறு குளிர்ச்சியான கண்ணாடிகளை அணிவது வழக்கம். ஆனால், அபுதாபியின் கட்டிடக்கலை வல்லுனர்கள் இந்த இரண்டு கட்டிடங்களுக்கும் கண்ணாடியை அணிவித்து அழகு செய்துள்ளார்கள். அதுவும் அந்த கண்ணாடிகள் சூரியனின் பாதைக்கு ஏற்ப தங்களது இருப்பிடத்தையும் மாற்றிக்கொள்ளும் தன்மை படைத்தவையாக இருப்பதுதான் கவனிக்கத்தக்கது.

தாமாக நகரும்

அதாவது, இந்த கண்ணாடிகள் காலையில் சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு பக்கத்தில் இருக்கும் நிலையில், மதியத்துக்கு மேல் சூரியனின் பாதையை ஒட்டி மேற்கு பக்கமாக நகர்ந்து கொள்கின்றன. அதற்கேற்ற வகையில் கணினி முறையில் தாமாகவே செயல்படுவதுபோல் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 2000 எண்ணிக்கைகள் கொண்ட குடை அமைப்பிலான கண்ணாடிகள் பொருத்தப்பட்டு கட்டிடத்தின் உட்பகுதி வெயில் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

அரேபிய கலை வடிவம்

அந்த கண்ணாடி அமைப்பானது ‘மாஸ்ரபியா’ என்ற அரேபிய கட்டிடக்கலை வடிவமாகும். கிட்டத்தட்ட 15–ம் நூற்றாண்டிலிருந்து இந்த முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, மரம் அல்லது உலோக பொருட்களால் குறுக்கும் நெடுக்குமான வடிவமைப்புகளோடு, வெளிப்புறத்தை முற்றிலும் மறைக்காமல், காற்றோட்டமாகவும் அதே சமயம் அறைகளில் இருக்கும் தனித்தன்மை பாதிக்கப்படாமலும் அமைக்கப்பட்ட மறைப்புகள் ‘மாஸ்ரபியா’ எனப்பட்டது. அவை பெரும்பாலும் இரண்டாவது மாடியில் இருக்கும் ஜன்னல்களை மறைக்கும் விதமாக அமைக்கப்படுகின்றன.

வெப்பத்தடுப்பு

மேற்கண்ட பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் அல்பஹர் டவர்ஸில், சன் ஸ்க்ரீன் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், கண்களை கூசும் வெளிச்சம் கட்டிடத்துக்குள் நுழைவது தடுக்கப்படுகிறது. பைபர் கிளாஸ் மூலமாக அமைக்கப்பட்டுள்ள அந்த கண்ணாடிகள் சூரிய வெளிச்சத்தின் தாக்கத்தை 50 சதவிகிதத்துக்கும் மேலாக தடுத்துவிடுவது குறிப்பிடத்தக்கது.

சூழல் பாதுகாப்பு

மேற்கண்ட வெப்பத்தடுப்பு காரணமாக ஏ.சி உள்ளிட்ட மின்சார சாதனங்களின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அரபு குடியரசின் சுற்றுச்சுழல் பாதுகாப்புக்கான ‘சில்வர் ரேட்டிங்’ அளிக்கப்பட்டுள்ளது.  

Next Story