மனைகள்–குடியிருப்புகளை வரன்முறை செய்யும் விதிமுறைகள்


மனைகள்–குடியிருப்புகளை வரன்முறை  செய்யும்  விதிமுறைகள்
x
தினத்தந்தி 1 July 2017 4:00 AM IST (Updated: 30 Jun 2017 4:15 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வேகமான நகர்ப்புற வளர்ச்சிகள் ஆகியவற்றின் காரணமாக பெருநகர பகுதிகளில் குடியிருப்புகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டு, நிலங்களுக்கான தேவை அதிகரித்தது.

ன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வேகமான நகர்ப்புற வளர்ச்சிகள் ஆகியவற்றின் காரணமாக பெருநகர பகுதிகளில் குடியிருப்புகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டு, நிலங்களுக்கான தேவை அதிகரித்தது. அதன் அடிப்படையில், தக்க அங்கீகாரம் பெறாமல் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் மற்றும் வீட்டு மனைகளுக்கான வரன்முறைப்படுத்தப்பட்ட விதிகளை அரசு, தற்போது அறிவித்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தர அரசால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைகள் வழங்கியுள்ள நிலையில், ஜூன் மாதம் இரண்டாம் வாரம் அமைச்சரவையின் ஒப்புதலோடு, அவற்றிற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

* சென்னை பெருநகர் பகுதியின் வளர்ச்சி விதிகள் மற்றும் நகர் ஊரமைப்பு துறை கட்டுப்பாட்டு பகுதிகளுக்கான வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளிலிருந்து, நியாயமான வரம்புகள் மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாமல், நடைமுறை சாத்தியக்கூறுகளுக்கு இணங்க, விலக்கு அளிப்பதற்கு ஏதுவாக நகர் ஊரமைப்பு சட்டம், 1971–ல் பிரிவு 113–சி இணைத்து உள்ளது.

* இந்த விதிமுறைகளுக்கு உட்படும் கட்டமைப்புகள் 2007–ம் ஆண்டு ஜூலை 1–ம் தேதி அல்லது அதற்கு முன்னர் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

* விமான போக்குவரத்து அமைச்சகத்தின் விதிமுறைகள், கடலோர பகுதி விதிமுறைகள், விமான படைத்தள விதிமுறைகள், ராணுவ விதிமுறைகள், மலையிடப்பகுதி பாதுகாப்பு விதிமுறைகள், தமிழ்நாடு நியூக்ளியர் நிறுவுதல் விதிமுறைகள் போன்ற விதிமுறைகளுக்கு ஏற்ப கட்டமைப்புகள் அல்லது மனைகள் இருக்க வேண்டும்.

* பொது இடங்கள், சாலைகள், தெருக்கள், அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்கள், நீர்நிலைப்பகுதிகள், முழுமைத் திட்டம் அல்லது விரிவான வளர்ச்சி திட்டம் அல்லது புதிய நகர் வளர்ச்சி திட்டம் அல்லது ஒப்புதல் பெற்ற மனைப்பிரிவுகளின் பூங்கா மற்றும் விளையாட்டு திடலுக்காக ஒதுக்கப்பட்ட திறந்த வெளிப்பகுதிகளில் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் இத்திட்டத்தின் கீழ் வரன்முறை செய்யப்படமாட்டாது.

* சென்னை பெருநகர் பகுதிகளில் அமைக்கப்பட்ட, நிலத்தடி நீர்பிடிப்பு பகுதி மற்றும் இதர நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைக்கப்பட்ட அனுமதி பெறாத கட்டிடங்களை வரன்முறைப்படுத்த இயலாது.

* இந்த திட்டத்தின் கீழ் மனைகளுக்கான சாலை அகலம், அவற்றில் உள்ள காலியிடங்கள், தளப்பரப்புக்கான குறியீடுகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் திறந்த வெளிப்பகுதி தேவை போன்ற திட்ட காரணிகள் குறித்த விதிவிலக்குகள்,
தீ தடுப்புக்கான பாதுகாப்பு மற்றும் கட்டிடத்தின் உறுதித்தன்மை ஆகிய அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

* தங்களுடைய கட்டிடங்களை வரன்முறைப்படுத்த விரும்புபவர்கள் வழக்கமான வளர்ச்சி கட்டணம், கூடுதலாக உள்ள தளப்பரப்பு குறியீடுகளுக்கு ஊக்க தளப்பரப்பு குறியீட்டு கட்டணம், வாகன நிறுத்துமிடத்திற்கான குறைபாடு கட்டணம், திறந்த வெளிப்பகுதி விதிமீறல்களுக்கான கட்டணங்கள் ஆகியவற்றை செலுத்த வேண்டும்.

* வரன்முறைப்படுத்துவதற்கான அபராத தொகையை உள்கட்டமைப்பு மற்றும்
வசதிகள் கட்டணத்தின் குறிப்பிட்ட சதவீத அடிப்படையில்
அவரது தளப்பரப்பு குறியீட்டுக்கு ஏற்றவாறு செலுத்த வேண்டும்.

* 2007–ம் ஆண்டு ஜூலை 1–ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னர் அனுமதி பெறாமல், விதிமீறல்களுடன் அமைக்கப்பட்ட அனைத்து தனியார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் பிளாட் புரமோட்டர்கள் தங்கள் கட்டிடங்களை அதற்கான கட்டணங்களை சுயமதிப்பீடு செய்து கொள்ளவேண்டும். இவ்விதிகள் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 6 மாத கால அவகாசத்துக்குள் தகுந்த கட்டணங்கள் செலுத்தப்பட்ட நிலையில் இணைய தளம் வழியாக விண்ணப்பம் செய்யவேண்டும்.

* இத்திட்டத்தின்கீழ் வரன்முறைப்படுத்த தகுதியற்றதாக கருதப்படும் கட்டிடங்களுக்கான குடிநீர், கழிவுநீர், வடிகால் இணைப்புகள் மற்றும் மின்சார இணைப்புகளை துண்டிக்கும் வகையிலும், இவ்வகை சொத்துக்களை பிற நபருக்கு விற்க தடைவிதிக்கும் வகையிலும், உரிய துறைகளான குடிநீர் வாரியம், மின்சார வாரியம், பதிவுத்துறை ஆகிய துறைகளுக்கான சட்டம் மற்றும் விதிமுறைகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

Next Story