தெரிந்து கொள்வோம்: ‘கேண்டிலிவர்’


தெரிந்து கொள்வோம்: ‘கேண்டிலிவர்’
x
தினத்தந்தி 1 July 2017 2:30 AM IST (Updated: 30 Jun 2017 4:51 PM IST)
t-max-icont-min-icon

செங்குத்தாக உள்ள ஒரு கட்டுமான அமைப்பில் குறிப்பிட்ட உயரத்தில், கிடைமட்ட வாக்கில், தாங்கு தூண்கள் இல்லாமல், தேவைப்பட்ட அளவுக்கு அதன் ஒரு பக்கம் மட்டும் நீண்டிருப்பதுபோல அமைக்கப்படும் கட்டமைப்பு ‘கேண்டிலிவர்’ என்று சொல்லப்படும்.

செங்குத்தாக உள்ள ஒரு கட்டுமான அமைப்பில் குறிப்பிட்ட உயரத்தில், கிடைமட்ட வாக்கில், தாங்கு தூண்கள் இல்லாமல், தேவைப்பட்ட அளவுக்கு அதன் ஒரு பக்கம் மட்டும் நீண்டிருப்பதுபோல அமைக்கப்படும் கட்டமைப்பு ‘கேண்டிலிவர்’ என்று சொல்லப்படும். எளிமையாக சொல்வதென்றால் ஜன்னல்களுக்கு மேலாக ‘சன் ஷேடுகள்’ சுவரை ஆதாரமாக கொண்டு முன்பக்கம் நீண்டிருப்பதுபோல அமைக்கப்பட்டிருப்பதை அனைவரும் கவனித்திருப்போம். அவ்வகை கட்டமைப்பின் வடிவம் ‘கேண்டிலிவர்’ என்று சொல்லப்படும்.

இவ்வகை கட்டமைப்புகளுக்கு உதாரணமாக அன்றாட வாழ்வில் நாம் கவனித்த பல வி‌ஷயங்களை குறிப்பிட்டால் எளிதாக புரியும். உயரமான கட்டிடங்களின் கட்டுமான பணிகளை, அதன் மேல் தளங்களில் செய்வதற்கு பயன்படும் ‘டவர் கிரேன்’ அமைப்பு, செங்குத்தாக நிறுத்தப்பட்ட தூண்களை ஆதாரமாகக்கொண்டு இருபக்கமும் வலுவான கேபிள்கள் பொருத்தப்பட்டு அதில் கட்டப்படும் பாலங்கள், தூண்கள் இல்லாது அமைக்கப்படும் விளையாட்டு மைதானங்களின் மேற்கூரைகள் மற்றும் பேருந்து நிறுத்தத்திற்கான நிழற்குடை போன்றவை கேண்டிலிவர் அமைப்புக்கான உதாரணங்களாக செல்லலாம்.

குறிப்பாக, வீடுகளில் சாதாரணமாக கட்டமைக்கப்படும் மாடிப்படிக்கட்டுகளின் ‘லேண்டிங்’ பகுதிகள், பால்கனிகள் மற்றும் ‘சன்ஷேடுகள்’ போன்றவை ‘கேண்டிலிவர்’ முறையில் வடிவமைக்கப்படுகின்றன. அவை செங்குத்தான சுவரை ஆதாரமாக கொண்டு குறிப்பிட்ட உயரத்தில் வேறு எந்தவிதமான தாங்குதளமும் இல்லாமல், தேவைப்பட்ட அளவுக்கு முன்புறமாக நீட்டப்பட்டு அமைக்கப்படுகின்றன.

கேண்டிலிவர் முறையில் இதர தூண்கள் வேண்டியதில்லை எனும் பட்சத்தில் செங்குத்தாக உள்ள ஆதார சுவர் அல்லது தூண் அமைப்புகள், அவற்றின் மேல்புறத்தில் தாங்கவேண்டிய பளு அல்லது சுமை ஆகியவற்றை கணக்கிட்டு தக்க அளவிலும், வடிவமைப்பிலும் அமைக்கப்படும். அந்த அமைப்பின் வடிவமைப்பில் தக்க கணக்கீட்டு முறை என்பது மிகவும் அவசியமானது. சாதாரணமாக வீடுகளில் உள்ள பால்கனி அல்லது படிக்கட்டு லேண்டிங் போன்றவை எளிதாக அமைக்கப்படும் நிலையில் அவற்றைப்போல நூற்றுக்கணக்கான மடங்கு பெரியதாக அமைக்கப்படும் பாலங்கள் போன்றவை அதற்கான பொறியியல் நுட்பம் சார்ந்த கணக்கீடுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story