வலிமையான கட்டிடத்துக்கு வழிகாட்டும் தொழில் நுட்ப குறிப்புகள்


வலிமையான  கட்டிடத்துக்கு  வழிகாட்டும்  தொழில்  நுட்ப  குறிப்புகள்
x
தினத்தந்தி 1 July 2017 3:00 AM IST (Updated: 30 Jun 2017 4:56 PM IST)
t-max-icont-min-icon

நாம் வாழும் பூமியில் இருக்கும் அனைத்து பொருட்களும் குறிப்பிட்ட கால வரையறைக்கு கட்டுப்பட்டதாக இருக்கின்றன. அந்த வகையில் கட்டுமானங்களும் அவற்றின் அமைப்பை பொறுத்த ஆயுள் காலம் கொண்டதாக உள்ளன.

நாம் வாழும் பூமியில் இருக்கும் அனைத்து பொருட்களும் குறிப்பிட்ட கால வரையறைக்கு கட்டுப்பட்டதாக இருக்கின்றன. அந்த வகையில் கட்டுமானங்களும் அவற்றின் அமைப்பை பொறுத்த ஆயுள் காலம் கொண்டதாக உள்ளன. ‘ஸ்ட்ரக்சுரல் ஸ்ட்ரெங்த்’ எனப்படும் அடிப்படை கட்டமைப்பு உறுதி மற்றும் புறத்தோற்றம் ஆகியவை தொடர்ச்சியான பருவ நிலை மாற்றங்களால் பாதிக்கப்படுவதால், கட்டிடங்கள் படிப்படியாக வலுவை இழக்கின்றன.

கட்டிடங்களின் ஆயுள்

கட்டுமான நிபுணர்களின் பொதுவான கருத்துப்படி, கட்டமைப்புகள் தோராயமாக 75 வருடம் முதல் 95 வருடங்கள் வரையில் அவற்றின் ஆயுட்காலமாக கணக்கிடப்படுகிறது. ஆனால், இன்றைய காலச்சூழலில் அனைத்து வகையான கட்டமைப்புகளுக்கும், தோராயமாக 50 வருடங்கள் வரையில்தான் அவற்றின் உறுதித்தன்மைக்கு உத்திரவாதம் இருப்பதாக கருதுகிறார்கள். அதற்கு மேற்பட்டும் ஒரு கட்டமைப்பு உறுதியாக நிற்பதற்கு, பல்வேறு காரணிகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ந்து செய்யப்படும் பராமரிப்புகளும் கட்டமைப்புகளின் ஆயுளை அதிகரிக்கின்றன. இந்த நிலையில், கட்டிடங்களின் நீடித்த ஆயுளுக்கு வல்லுனர்கள் தரும் பொதுவான குறிப்புகளை இங்கே காணலாம்.

பாதிக்கும் காரணிகள்

வீடுகள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் காலமாற்றத்தால் பாதிக்கப்படும் மூலப்பொருட்களைக்கொண்டு உருவாக்கப்படுகின்றன. மேலும், நம்மால் பயன்படுத்தப்படும் முறைகள் மற்றும் காலம் ஆகிய இரண்டு காரணிகளோடு, கட்டுமானத்தின் அடிப்படை அமைப்புகளில் உள்ள குறைகளும் வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளின் ஆயுளை நிர்ணயம் செய்கின்றன. அத்தகைய நிலைகளில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் :

* சரியான கால இடைவெளிகளில் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் பராமரித்து வரவேண்டும். வேண்டாத பொருட்களை வீட்டில் ஓரிடத்தில் போட்டு அடைத்து வைப்பது கூடாது.

* முக்கியமாக கவனிக்கவேண்டிய வருடாந்திர பராமரிப்புகளாகிய வெளிப்புற பெயிண்டிங், கரையான் பாதிப்புகள், அஸ்திவார வலிமை ஆகியவற்றை முறையாக செய்து வருதல் முக்கியம்.

* பருவ நிலையில் ஏற்படும் மாற்றங்கள் தவிரவும், சென்னை போன்ற கடற்கரையோர நகரங்களில் நிலவும் தட்பவெப்ப நிலை மாற்றங்களும், கட்டமைப்புகளின் உறுதியை பாதிப்பதாக அறியப்பட்டுள்ளது. அவை, கட்டிடத்தின் வெளிப்புற தோற்றத்தில் விரைவான பாதிப்பை உண்டாக்குகின்றன.

* எதிர்பாராமல் ஏற்படும் அதிகப்படியான மழை, வெப்பம் ஆகிய காரணங்களும் கான்கிரீட் அமைப்புகளின் உறுதியை பாதிக்கின்றன. அதுபோன்ற தருணங்களில் சற்று கூடுதலான பராமரிப்புகள் அவசியம்.

* கட்டுமான மூலப்பொருட்களை பயன்படுத்தும் நிலையிலேயே அவற்றின் நீடித்த உழைப்பு பற்றி நன்றாக அறிந்த பிறகு பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் பல சிக்கல்களை தவிர்க்கலாம்.

* பொதுவாக, கடற்கரையோரத்தில் கட்டப்படும் கட்டிடங்களில், வெளிப்புற அமைப்புகளில் இரும்பின் பயன்பாட்டை தவிர்ப்பதன் மூலம் உப்பு காற்றின் அரிப்பிலிருந்து வீட்டை பாதுகாக்க இயலும். அதாவது, பால்கனி கைப்பிடிகள் மற்றும் மாடிப்படிகளுக்கான ஹேண்ட் ரெயில்ஸ் போன்றவற்றை மரத்தால் அல்லது அலுமினியத்தால் அமைப்பதே நல்லது.

* எவ்வித கட்டமைப்பாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட ஏரியாவைப் பொறுத்து அஸ்திவார அமைப்பு, மூலப்பொருட்கள் பயன்பாடு மற்றும் வல்லுனர்களது வழிகாட்டல் ஆகியவை எல்லா இடத்திலும், எல்லா காலத்திலும் பொருந்தக்கூடிய விதிமுறையாகும்.

Next Story