வளர்ச்சிக்கு வித்திடும் நகர விரிவாக்கம்


வளர்ச்சிக்கு வித்திடும் நகர  விரிவாக்கம்
x
தினத்தந்தி 7 July 2017 11:00 PM GMT (Updated: 7 July 2017 2:20 PM GMT)

சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகையானது ஆண்டு தோறும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகிறது.

சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லையை சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் வட்டத்தை உள்ளடக்கிய பகுதிவரையில் விரிவாக்கம் செய்வதாக அரசின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறை அறிவித்துள்ளது. அவை பற்றிய தகவல்களை காணலாம்.

மக்கள் தொகை அதிகரிப்பு

சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகையானது ஆண்டு தோறும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகிறது. அதன் பொருட்டு பெருநகர வளர்ச்சி குழுமம் கடந்த 2008–ம் ஆண்டில் ஒரு திட்டத்தை வெளியிட்டிருந்தது. சென்னையின் இன்றைய நிலையை கவனிக்கும்போது, வரும் 10 வருடங்களுக்குள் சென்னை நகரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 1 கோடியே

25 லட்சமாக  அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

நகர விரிவாக்கம்

சென்னை நகரத்தில் மக்கள் தொகை நெருக்கத்தை குறைக்கவும், சென்னையை சுற்றிலும் விரைவாக நகர் மயமாகி வரும் பகுதிகளில் ஏற்படக்கூடிய வளர்ச்சிகளை தக்க முறையில் ஒழுங்கு படுத்தவும் மற்றும் பெருகி வரக்கூடிய பொருளாதார செயல்பாடுகளுக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகள் அமைத்து தரவும் சென்னையுடன் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம் வட்டம் சார்ந்த பகுதிகள் ஆகியவற்றை இணைத்து விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக, 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை பெருநகரம் 8,878 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மிகவும் பெரிய நகரமாக மாற இருக்கிறது.

மக்கள் குடியேற்றம்

குறிப்பாக சொல்வதென்றால், சென்னையின் தெற்கு பகுதியான ஸ்ரீபெரும்புதூரை சுற்றியுள்ள பகுதிகள், வடக்கு பகுதியான கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணினி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கனரக தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் காரணமாக நாட்டின் பல இடங்களிலிருந்தும் அப்பகுதிகளில் மக்கள் குடியேறி வருவதால் சென்னை புறநகர் பகுதிகளும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

எதிர்கால வளர்ச்சி

இன்னும் வரக்கூடிய காலங்களில், மேற்கண்ட இடங்களில் பல தொழிற்சாலைகள் உருவாகும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. அத்தகைய வளர்ச்சிகள் காரணமாக, குடியிருப்பு பகுதிகளும் அதிகமாக தேவைப்படும் நிலை ஏற்படும். அதனால் ஒழுங்கற்ற முறையில் உருவாகும் கட்டமைப்புகளை தக்க முறைகளில் சீரமைக்க, சென்னை பெருநகரின் எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டியதாக உள்ளது.

ஒருங்கிணைந்த மேம்பாடு

மேற்கண்ட விரிவாக்கத்தின் அடிப்படையில் தற்போதுள்ள நகர் மையங்கள் மற்றும் புதிய பொருளாதார வளர்ச்சி மையங்களும் தேர்வு செய்யப்படும். மேலும் அந்த மையங்களுக்கு முழுமை திட்டங்கள் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதி முழுவதற்குமான மண்டல வியூக திட்டமும் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் போக்குவரத்து வசதிகள், அடிப்படை கட்டமைப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விவசாய நிலங்கள் பாதுகாப்பு ஆகிய முக்கியமான அம்சங்களில் கவனம் செலுத்தப்படும். அதற்கேற்ப சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக அமைப்பில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

பெரிதாகும் ‘பெருநகரம்’

சென்னை பெருநகரம் தற்போது 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின் மூலம் சென்னை பெருநகரம் 8,878 சதுர கி.மீட்டர் கொண்டதாக விரிவடைகிறது. அந்த கணக்கின்படி சென்னை பெருநகரம் கிட்டத்தட்ட 7 மடங்கு பெரிய அளவுள்ளதாக மாறுகிறது.

மற்ற மாநிலங்கள்

கடந்த 2011–ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட இந்த திட்டமானது, 5 ஆண்டுகளுக்கு பிறகு தக்க முறையில் நகர விரிவாக்கம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட இருக்கிறது. இது போன்ற முறையை பயன்படுத்தித்தான் பெங்களூரு, ஐதராபாத் மற்றும் மும்பை போன்ற நகரங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு முறையான வளர்ச்சிகளை பெற்றுள்ளன.

குறிப்பாக சொல்வதென்றால், மும்பையானது 4,354 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும், ஐதராபாத் 7,100 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் மற்றும் பெங்களூரு 8,005 சதுர கி.மீட்டர் பரப்பளவும் கொண்டதாகவும் உள்ளன. இந்த நகரங்களோடு ஒப்பிடும்போது சென்னை பெருநகரம் ‘பெரிய நகரமாக’ மாற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story