நில உபயோக மாற்றம் செய்வதற்குரிய விதிமுறைகள்


நில உபயோக மாற்றம் செய்வதற்குரிய விதிமுறைகள்
x
தினத்தந்தி 15 July 2017 4:00 AM IST (Updated: 14 July 2017 3:53 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமானத்துறையின் வளர்ச்சிகள் விண்ணைத்தொட்டாலும், நகரமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரு நகரங்களில் இடப்பற்றாக்குறையை சமாளிப்பது கடினமாக மாறியிருக்கிறது.

ட்டுமானத்துறையின் வளர்ச்சிகள் விண்ணைத்தொட்டாலும், நகரமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரு நகரங்களில் இடப்பற்றாக்குறையை சமாளிப்பது கடினமாக மாறியிருக்கிறது. பூமி என்று சொல்லப்படும் இடம் என்பது எப்போதும் மாறாததாகவும், உற்பத்தி செய்ய இயலாத மதிப்பு மிக்க பொருளாகவும் இருக்கிறது. அதன் காரணமாக உபயோகம் மிகக்குறைவாக இருக்கும் நில வகைகளை உபயோக மாற்றம் செய்து பயன்படுத்த சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமம் பல்வேறு விதிமுறைகளை அறிவித்திருக்கிறது.      

முழுமை திட்டம்

1971–ம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டப்பிரிவு 32(4)–ன் கீழ் தற்போது நில உபயோகம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள முழுமை திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சி திட்டத்தில் அந்த நடைமுறை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நில உபயோக மாற்றம் செய்வதற்கு ஏற்ற அணுகுபாதைகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் வளர்ச்சிக்கு ஏற்புடையதாகவும், சூழலை பாதிக்காத வகையில் இருக்கும் இடங்கள், நில உபயோக மாற்றத்தை வேண்டி விண்ணப்பம் செய்யும்போது பெருநகர வளர்ச்சி குழுமம் அதை தனது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கிறது. அதற்கான விதிமுறைகள் பற்றி இங்கே காணலாம்.

* நில உபயோக மாற்றம் விழைபவர்கள், முதலில் அதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

* அந்த விண்ணப்பத்தை உள்ளாட்சி நிறுவனத்தின் பரிந்துரையுடன், ஆய்வு கட்டணம் மற்றும் அறிவிக்கை கட்டணம் ஆகியவற்றுக்கான வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) இணைத்து, குறிப்பிட்ட வினா பட்டியலுக்கான விடைகள் மற்றும் பரிந்துரை ஆகியவற்றோடு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்திற்கு அனுப்ப வேண்டும்.

* சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் அந்த விண்ணப்பத்தை பெற்று பதிவு செய்து கொண்டு, அதற்குரிய ஆரம்ப கட்ட ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்.

* விண்ணப்பதாரருக்கு சம்பந்தப்பட்ட நிலத்தின் மீதுள்ள உரிமை, நிலத்தின் ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவை பற்றி சோதனைகள் மற்றும் நிலத்தின் சுற்றுப்புற விவரங்களின் வரைபடம் ஆகியவை சோதனை செய்யப்படும்.

* ஏதாவது ஆவணங்கள் விடுபட்டிருப்பது அறியப்பட்டால் அல்லது நில உபயோக மண்டல மாற்றத்திற்கான கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால் அவற்றை அளிக்கும்படி விண்ணப்பதாரரிடம் கேட்கப்படும்.

* நில உபயோக மாற்றத்திற்கான அறிவிக்கையை நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டு, அது குறித்த ஆலோசனைகள், ஆட்சேபணைகள் மற்றும் முறையீடுகளை பொதுமக்கள், குழுமத்திற்கு தெரிவிக்க 21 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படும். பொதுவாக நில மாற்றத்திற்கான 10 விண்ணப்பங்கள் சேர்ந்த பிறகு அவை நாளிதழ்களில் பிரசுரிக்கப்படும்.

* அத்தகைய ஆலோசனைகள் அல்லது ஆட்சேபணைகள் பொது மக்களிடம் அறிவிக்கையின் மூலம் பெறப்பட்டு, அதனை ஆய்வு செய்து தொழில் நுட்ப குழு மற்றும் குழுமத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

* துணை திட்ட அமைப்பாளர் நில உபயோக மாற்றத்தை கேட்கும் நிலத்தை, நேரடியாக ஆய்வு செய்து அது பற்றிய வரைபடம் மற்றும் குறிப்புகளை அளிப்பார்.

*தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் ஆகிய அரசு நிறுவனங்களிடம், தேவைப்பட்டால் மட்டும் சம்பந்தப்பட்ட நில உபயோக மாற்றம் பற்றி தீர்மானத்திற்கான ஒப்புதல் பெறப்படும்.

* நில உபயோக மாற்றம் தொடர்பான வரைவு குறிப்பினை தொழில் நுட்ப குழுவின் பரிந்துரையுடன் குழுமத்தின் கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்படும்.

* குழுமத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், நில உபயோக மாற்றம் பற்றிய விபரங்களை அரசிதழில் வெளியிடப்பட்டு, சட்டதிட்டங்களின்படி அறிவிக்கை மீண்டும் பிரகடனம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும்.

Next Story