மரபுசார் முறைப்படி அமைக்கப்பட்ட வீடுகள்


மரபுசார்  முறைப்படி  அமைக்கப்பட்ட  வீடுகள்
x
தினத்தந்தி 15 July 2017 3:00 AM IST (Updated: 14 July 2017 4:07 PM IST)
t-max-icont-min-icon

மண்ணால் அமைக்கப்பட்ட சுவர்கள், கான்கிரீட்டை விடவும் வலுவாக இருப்பதாக மரபு சார் கட்டுமான வல்லுனர்கள் தெரிவித்துள்ள கருத்து

ண்ணால் அமைக்கப்பட்ட சுவர்கள், கான்கிரீட்டை விடவும் வலுவாக இருப்பதாக மரபு சார் கட்டுமான வல்லுனர்கள் தெரிவித்துள்ள கருத்து இன்றைய சூழலில் பலராலும் கவனிக்கப்படும் தொழில்நுட்பமாக உள்ளது. மரபுசார் வழியில் மண் வீடுகள் கட்டமைக்க பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. பழைய காலங்களில் கட்டுமானத்துக்கு உபயோகப்படுத்தும் மண்ணின் தன்மைக்கு தக்கவாறு கடுக்காய், வெல்லம், நெல் உமி, கற்றாழை, வைக்கோல் போன்ற இயற்கை பொருட்களை கொண்டு மண்ணை நன்றாக பிசைந்து, மிதித்து, அதன் குழைவு தன்மை நீக்கப்பட்டு, இறுக்கமாக மாற்றி, சுவர்களை அமைப்பது முறையாகும்.

வெவ்வேறு முறைகள்

மண்ணை இறுக்கமாக மாற்றுவதற்கு பயன்படும் பொருட்கள் மற்றும் அதற்கான முறைகள் ஆகியவை இடத்திற்கு தக்கவாறு மாறும் என்பது கவனிக்கத்தக்கது. நன்றாக இறுக்கப்பட்ட மண் கொண்டு அமைக்கப்பட்ட சுவர்கள் நாளடைவில் பாறை போன்று இறுகி விடுவதோடு, ஆண்டுகள் செல்லச்செல்ல பருவநிலை மாற்றங்களை தாங்கி நிற்பதன் காரணமாக அவை எளிதாக இடிக்க இயலாத அளவுக்கு உறுதியாக மாறிவிடுவது அறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக, மண் சுவர்களால் அமைந்த பழைய கட்டமைப்புகளை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடிக்க வேண்டியதாக உள்ளது.

வலிமை அதிகம்

கெட்டியான தன்மை கொண்டதாக இருந்தாலும், மண் சுவர்கள், உள்ளும் புறமும் காற்றோட்டம் கொண்டதாக இருக்கும். அதனால் கோடைகால வெப்பம் வீட்டுக்குள் வராமல் இருப்பதோடு, குளிர் காற்றும் வீடுகளுக்குள் வராது. காரை கொண்டு பூசப்பட்ட கான்கிரீட் சுவர்களுக்கு அந்த தன்மை இல்லை என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சாய்வு கூரைகள்

மண் சுவர்கள் கொண்ட தனி வீடுகள் அமைக்கப்படும்போது கச்சிதமான சாய்வு கூரைகள் மற்றும் தரைப்பகுதியில் சுவர்களை சுற்றியும் சாய்வு தளம் போன்ற திண்ணை அமைத்தும் மண் சுவர்களின் உறுதி பாதுகாக்கப்பட்டது. மழைக்காலத்தில் அதிகமாக தண்ணீர் தேங்கி நிற்காத மேட்டுப்பகுதியில் வீடுகள் கட்டப்பட்டதோடு, மழை நீர் வீட்டை விட்டு விலகிச் செல்லுமாறு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கீழ்ப்புற சுவர்களில் ஈரம் படியாமல் தடுக்கப்பட்டது.

Next Story