சுவர்களை வலுவாக்கும் சிமெண்டு கலவை வகைகள்


சுவர்களை வலுவாக்கும் சிமெண்டு கலவை வகைகள்
x
தினத்தந்தி 29 July 2017 3:30 AM IST (Updated: 28 July 2017 4:08 PM IST)
t-max-icont-min-icon

சுவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான கட்டிட பகுதிகளுக்கு சிமெண்டு மற்று மணல் கலக்கப்பட்ட காரை மேற்பூச்சாக அமைக்கப்படும்.

சுவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான கட்டிட பகுதிகளுக்கு சிமெண்டு மற்று மணல் கலக்கப்பட்ட காரை மேற்பூச்சாக அமைக்கப்படும். சுவர்களை பாதுகாக்கும் விதத்தில் செயல்படும் சுவர் பூச்சுக்கான சிமெண்டு கலவைகள் தொழில்நுட்ப ரீதியாக என்–வகை, எம்–வகை, எஸ்–வகை, ஓ–வகை மற்றும் கே–வகை என்று ஐந்து விதங்களாக உள்ளன. அத்தகைய சிமெண்டு கலவைகள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

என்– வகை கலவை

1 பங்கு சிமெண்டு, 1 பங்கு சுண்ணாம்பு மற்றும் 6 பங்கு மணல் என்ற விகிதத்தில் என்–வகை கலவை தயார் செய்யப்படுகிறது. அறைகளிள் உள்ள சுவர்களின் உட்புற பூச்சு வேலைக்கு இந்த முறை பயன்படுகிறது. பளு தாங்கும் சுவர்களுக்கு இவ்வகை பயன்படுத்தப்படுவதில்லை.

எம்–வகை கலவை

3 பங்கு சிமெண்டு, 1 பங்கு சுண்ணாம்பு, 12 பகுதி மணல் என்ற விகிதத்தில்

எம்–வகை கலவை தயார் செய்யப்படுகிறது. பொதுவாக, அஸ்திவார சுவர்கள் உள்ளிட்ட வலுவான சுவர் அமைப்புகளுக்கு இவ்வகை கலவையை பயன்படுத்தப்படுகிறது. கட்டிடங்களில் அதிகப்படியான உபயோகம் அல்லது நடமாட்டம் இருக்கக்கூடிய தரைப்பகுதிகள், கட்டிடங்களின் தளங்கள், பில்லர்கள், காலம்கள் ஆகியவற்றை, இந்த கலவையால் பூச்சு வேலை செய்தால் உறுதியாக இருக்கும்.

எஸ்– வகை கலவை

இவ்வகை கலவை 1 பங்கு சிமெண்டு, 0.5 பங்கு சுண்ணாம்பு மற்றும் 2.25 பங்கு மணல் என்ற விகிதத்தில் எஸ்–வகை கலவை தயாரிக்கப்படுகிறது. எம்– வகை சிமெண்டு கலவை போன்று இதுவும் வலிமையானது. கட்டிடங்களின் பளுவை தாங்கும் சுவர்களுக்கு இவ்வகை கலவையால் பூச்சு வேலைகள் செய்வது வழக்கம்.

ஓ–வகை கலவை

இக்கலவையானது 1 பங்கு சிமெண்டு, 2 பங்கு சுண்ணாம்பு மற்றும் 9 பங்கு மணல் என்ற விகிதாச்சாரப்படி தயார் செய்யப்படுகிறது. அறைகளின் உட்புறம் மற்றும் வெளிப்புற பூச்சுகளுக்கு பயன்படுத்தலாம். இக்கலவையானது ஒரு சதுர அங்குல அளவுக்கு 350 கிலோ என்ற அளவில் பளு தாங்குவதாக அறியப்பட்டுள்ளது.

கே–வகை கலவை

இக்கலவை நடைமுறையில் அதிகமாக புழக்கத்தில் இல்லை. 1 பங்கு சிமெண்டு, 3 பங்கு சுண்ணாம்பு மற்றும் 10 பங்கு மணல் என்ற விகிதாச்சாரப்படி இக்கலவை தயாரிக்கப்படுகிறது. பழமையான கட்டிட சுவர்களின் பாதுகாப்புக்காக அவற்றின் மீது ‘கோட்டிங்’ தருவதற்கு இம்முறை பயன்படுகிறது.
1 More update

Next Story