பத்திர பதிவுத்துறை அளிக்கும் மின்னணு சேவைகள்


பத்திர பதிவுத்துறை அளிக்கும்  மின்னணு சேவைகள்
x
தினத்தந்தி 4 Aug 2017 11:00 PM GMT (Updated: 4 Aug 2017 12:12 PM GMT)

தமிழ்நாடு பத்திர பதிவுத்துறையில் பொது உபயோகத்திற்காக பல்வேறு ஆன்–லைன் சேவைகள் வழங்கப்படுகின்றன.

மிழ்நாடு பத்திர பதிவுத்துறையில் பொது உபயோகத்திற்காக பல்வேறு ஆன்–லைன் சேவைகள் வழங்கப்படுகின்றன. சொத்துக்கான வழிகாட்டி மதிப்பு, வில்லங்க சான்று, முத்திரைத்தாள் ஆன்–லைன் கட்டணம், பத்திர முன்பதிவு போன்ற பல அம்சங்கள் சேவைகளாக அளிப்பது குறிப்பிடத்தக்கது. அவை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

பட்டா விவரங்கள்

அரசின் நிலப்பதிவேடுகள் மின்னணு சேவை மூலம் பட்டா, சிட்டா ஆகிய நில உரிமைக்கான பதிவேடுகளை இணைய தளம் மூலம் அறிந்துகொள்ளலாம். தகவல்களை பெறுவதற்கு   ESERVICES.TN.GOV.IN/REGISTRATION    என்ற இணைய தள இணைப்பிற்குள் சென்று, நிலப்பதிவேடு மின்னணு சேவை பக்கத்தில் கேட்கப்படும் தகவல்களை உள்ளீடு செய்து பட்டா விவரங்களை பார்வையிடலாம். அந்த இணைய பக்கத்தில் பட்டாவுக்கான மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் எண் மற்றும் அங்கீகார மதிப்பு ஆகிய தகவல்களை கச்சிதமாக பதிவு செய்வது அவசியம். மேலும், இந்த சேவை அரசு சம்பந்தப்படாத தனியார் நிலங்களுக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. அதனால், நகராட்சி, மாநகராட்சி மற்றும் கிராம நத்தம் சம்பந்தப்பட்ட நிலங்களுக்கு இந்த மின்னணு சேவை பொருந்தாது என்பது கவனிக்கத்தக்கது.

ஆன்லைன் வழிகாட்டி மதிப்பு

அவரவர் பகுதிகளுக்கான வழிகாட்டி மதிப்பை   www.tnreginet.net    என்ற இணைய தளத்திற்குள் செல்வதன் மூலம் அறிந்து கொள்ளமுடியும். மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் கேட்கப்படும் தெருவின் பெயர் அல்லது சர்வே எண், மண்டலம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், சொத்தின்

நில வகைப்பாடு, சொத்தின் கூடுதல் விவரங்களான குடியிருப்பு நிலம், வணிக நிலம், விவசாய நிலம்,

அல்லது புறம்போக்கு நிலம் போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும். விவரங்கள் கச்சிதமாக இருக்கும்பட்சத்தில் வழிகாட்டி மதிப்பை தெரிந்து கொள்ள முடியும்.

வில்லங்க சான்றிதழ்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பதிவுத்துறை இணையதளம் மூலம் வில்லங்க சான்றிதழ் சரி பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சொத்துக்களின் வில்லங்கங்களை பத்திர பதிவுத்துறையின் இணையதளம் மூலம் அறிவதற்கு, மேற்கண்ட இணையதளத்தில் உள்ள வில்லங்கம் சரிபார்க்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். அதில், சொத்து உள்ள மண்டலம், மாவட்டம், சார்–பதிவாளர் அலுவலகம், கிராமம் மற்றும் எத்தனை வருடங்களுக்கு தேவை, சொத்தின் சர்வே எண், உட்பிரிவு போன்ற விவரங்களை அளிக்க வேண்டும். இன்றைய நிலையில் 1987–ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து சார் பதிவாளர் அலுவலக பதிவுகளையும் ஆன்–லைன் மூலம் பார்க்க இயலும். சொத்து பற்றிய விவரங்களையும் இணையதளம் மூலம் சரிபார்க்க முடியும். 2010–ம் ஆண்டுக்கு முந்தைய பவர் பத்திரம் மற்றும் உயில் பத்திரம் ஆகிய தகவல்களை இணையத்தில் பார்க்க இயலாது.

ஆன்லைன் பத்திர முன்பதிவு


குறிப்பிட்ட ஒரு நாளில் பத்திரப்பதிவு செய்ய விரும்புபவர்கள், ஒரு மாத காலத்துக்கு முன்னதாக, சொத்து உள்ள சார்–பதிவாளர் அலுவலகத்தில், ஆன்–லைன் மூலம் முன்பதிவு செய்ய கொள்ளலாம். இந்த சேவையானது ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, கேரளா போன்ற மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story