கட்டிடங்களின் பாதுகாப்புக்கு உதவும் ‘பீம்கள்’


கட்டிடங்களின் பாதுகாப்புக்கு உதவும்  ‘பீம்கள்’
x
தினத்தந்தி 28 Oct 2017 5:00 AM IST (Updated: 27 Oct 2017 6:09 PM IST)
t-max-icont-min-icon

பழைய கட்டுமான முறைகளில் அஸ்திவாரம் முதல் மேல்தளம் வரை நான்கு புறங்களிலும் அமைக்கப்பட்ட சுவர்கள்தான் ஒட்டு மொத்த கட்டமைப்பையும் தாங்கி நிற்கும்.

ழைய கட்டுமான முறைகளில் அஸ்திவாரம் முதல் மேல்தளம் வரை நான்கு புறங்களிலும் அமைக்கப்பட்ட சுவர்கள்தான் ஒட்டு மொத்த கட்டமைப்பையும் தாங்கி நிற்கும். காலப்போக்கில் கட்டுமான தொழிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ‘பிரேம்டு ஸ்ட்ரக்சர்’ முறை அறிமுகமானது. கட்டமைப்புகளில் தவிர்க்க முடியாத காரணமாக இருந்த ‘டெட் லோடு’ வெகுவாக குறைக்கப்படுவதற்கு அந்த முறை பெரும் உதவியாக இருந்தது.

‘கிரேடு பீம்கள்’

பொதுவாக, கிரேடு பீம்கள் என்ற கிடைமட்ட அமைப்பானது கட்டிடங்களுக்கான சரியான எடைப்பரவல் அளிப்பதன் மூலம் அதன் தாங்கு திறனை அதிகரிக்கிறது. அதாவது, கட்டமைப்பில் உள்ள பில்லர்கள் எனப்படும் தூண்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பீம்கள் மூலம் இணைப்பதன் மூலம் அது சாத்தியமாகிறது..

பரவலாக்கப்படும் சுமை

பெரிய அளவிலான குடியிருப்புகள் கட்டுமானத்தின்போது, ஆழமான அஸ்திவாரம் அமைக்கப்பட்டு தகுந்த கிரேடு பீம்கள் அமைக்கப்படுவது முறை. அதன் மூலம் ஒட்டுமொத்த கட்டமைப்பின் பாரமும் அஸ்திவாரத்தின் மீது பரவலாக இறங்க வழி செய்யப்படுகிறது. ஆனால், சிறிய அளவிலான கட்டிடங்களில், கட்டுமான பொறியாளர்களது தகுந்த ஆலோசனை இல்லாமல் பலரும் இந்த அமைப்பை தவிர்த்து விடுவதாக அறியப்பட்டுள்ளது.

கட்டுமான பாதிப்புகள்

பல இடங்களில் குடியிருப்புகள் அல்லது தனிப்பட்ட மாடி வீடுகள் அமைக்கப்படும்போது பில்லர்கள் எனப்படும் தூண்களை அமைத்து, அவற்றிற்கு இடையில் 9 அங்குலம் அல்லது 10 அங்குலம் அளவிலான சுவர்களை அமைப்பது வழக்கம். அந்த நிலையில் வேவ்வேறு காரணங்களால் நிலங்களில் ஏற்படும் அதிர்வுகள் காரணமாக கட்டிடங்களில் பாதிப்புகள் அல்லது விரிசல்கள் ஏற்படலாம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘ரூப் பீம்கள்’

பில்லர்கள் மற்றும் பீம்கள் அமைப்பு, கருங்கல் அஸ்திவாரம், கிரேடு பீம், பில்லர்களின் மேல்மட்டத்தில் ‘ரூப் பீம்கள்’ அமைப்பது போன்ற முறைகள் சம்பந்தப்பட்ட நிலம் மற்றும் கட்டிட அமைப்பு ஆகியவற்றை பொறுத்து மாறுபடலாம் என்று கட்டிட பொறியாளர்கள் கூறுவது கவனிக்கத்தக்கது.

ஆலோசனை அவசியம்

குறிப்பாக, பழைய வீடு அல்லது குடியிருப்புகளில் கூடுதலான கட்டுமானங்களை அமைக்க முடிவு செய்வதற்கு முன்னர் கட்டுமான பொறியாளர்களது ஆலோசனையை அவசியம் பெற வேண்டும். காரணம், மேல்தளத்தில் சுமை அதிகரிக்கும் நிலையில் மேல் மட்ட பீம்கள் வழியாக அந்த சுமை பரவலாக்கப்பட்டு அஸ்திவார மட்டத்துக்கு கடத்தப்படும். அந்த நிலையில் சம்பந்தப்பட்ட கட்டமைப்புக்கு புதிய சுமையை தாங்கக்கூடிய அளவில் கூடுதல் வலு இருக்கிறதா..? என்பதை கண்டறியவும், மாற்று வழிகளை நடைமுறைப்படுத்தவும் கட்டுமான பொறியாளர்களை அணுக வேண்டும்.       

மற்ற பாதிப்புகள்

கட்டிடத்தின் மேற்புற சுமையின் அழுத்தம் மட்டுமல்லாமல், கட்டிடத்தை சுற்றியுள்ள நிலத்தில் உள்ள ஈரப்பதம் மற்றும் மண்ணின் சுருக்கம் ஆகிய மற்ற காரணங்களை சமாளிக்கவும் தரைமட்ட பீம்கள் அமைக்க வேண்டும், மேலும், இட நெருக்கடி உள்ள பகுதிகளில், கட்டிடத்துக்கு அருகில் வேறொரு கட்டிடத்திற்காக ஆழமான அஸ்திவாரம் அல்லது மற்ற காரணங்களுக்காக நிலப்பகுதியில் குழிகள் அமைக்கப்படும்போது மண்ணின் மேல் அடுக்குகளில் மாற்றம் ஏற்பட்டு கட்டமைப்புகள் பாதிக்கப்படாமல் கிரேடு பீம்கள் பாதுகாக்கின்றன.

எதிர்கால பாதுகாப்பு

மேற்கண்ட, நிலைகளில் கட்டிடத்தின் ஒட்டுமொத்த வலிமை பாதிக்கப்படாமல் தரை மட்ட பீம்கள் காக்கின்றன என்ற அடிப்படையில், அவற்றிற்கான செலவு அவசியமானது என்பது கட்டுமான வல்லுனர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. எனவே, தற்போதைய கட்டிடத்தின் எடைப்பரவல் மற்றும் வருங்காலத்தில் கட்டப்படும் மேல் அடுக்குகளின் சுமை ஆகியவற்றை கணக்கில் கொண்டு தகுந்த கிரேடு பீம்களை தொடக்க நிலையிலேயே அமைப்பது நல்லது.

Next Story