சொத்துக்கள் உரிமை மாற்றத்துக்கு உதவும் உயில்


சொத்துக்கள் உரிமை மாற்றத்துக்கு உதவும் உயில்
x
தினத்தந்தி 27 Jan 2018 11:23 AM IST (Updated: 27 Jan 2018 11:23 AM IST)
t-max-icont-min-icon

வீடு மற்றும் நிலம் போன்ற சொத்துக்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் ஒரு பங்கை ஒருவரது காலத்துக்கு பிறகு யாருக்கு சேர வேண்டும் என்ற உரிமையை உறுதி செய்யும் ஆவணம் உயில்.

ற்ற ஆவணங்களைப்போல சார்பதிவாளர் அலுவலகத்தில் உயிலை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பதிவு செய்யும் பட்சத்தில், உயில் நடைமுறைக்கு வரும்போது ஏற்படக்கூடிய சிக்கல்கள் தவிர்க்கப்படுகின்றன. குறிப்பாக, உயிலில் குறிப்பிடப்படும் தகவல்கள் தெளிவாக புரியும்படி இல்லாத காரணத்தால், சொத்து பங்கீடு சமயத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக தகவல்கள் உள்ளன. அதனால், உயிலை எழுதும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி சட்ட வல்லுனர்கள் குறிப்பிடும் தகவல்களை இங்கே காணலாம்.

1) ஒருவரது சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த சொத்துக்கு மட்டும் உயில் எழுதி வைக்க முடியும். தனது தந்தை வழி பூர்வீக சொத்துக்கு உயில் எழுதி வைக்க இயலாது.

2) ஒருவரிடம் உள்ள அனைத்து சொத்துகள் பற்றிய முழுவிவரங்கள், அதாவது சர்வே எண், வீடு மற்றும் இடத்தின் அளவுகள், அவற்றிற்கான பட்டா எண்கள், சம்பந்தப்பட்ட சொத்து உள்ள கிராமம், கிரயப்பத்திர எண்கள் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு எழுதவேண்டும்.

3) எந்தச் சொத்து யாருக்கு உரியது என்பதை தெளிவாக குறிப்பிட்டு, அவர்களது பெயர் மற்றும் உறவுமுறைகளை கச்சிதமாக குறிப்பிட வேண்டும். பெரிய அளவுள்ள வீடு அல்லது அடுக்கு மாடியாக இருந்து, அதை பிரிக்க வேண்டிய சூழலில், எந்தப் பகுதி யாருக்கு என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். கீழ்த்தளம் உள்ளிட்ட இதர தளங்கள் யாருக்கு என்ற விபரங்கள் தக்க பெயர்களுடன் உயிலில் தெளிவாக இருக்க வேண்டும்.

4) சிறிய அளவுள்ள சொத்துகளை உயிலில் குறிப்பிட பலரும் மறந்து விடுவதாக அறியப்பட்டுள்ளது. மேலும், சிலர் தமது பேரக் குழந்தைகளை குறிப்பிடும்போது, அவர்களது சரியான பெயர்களை குறிப்பிடாமல், செல்லப்பெயர்களை எழுதி விடுகிறார்கள். அதன் காரணமாகவும் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு,

5) வக்கீல், ஆவண எழுத்தர் அல்லது நன்றாக விவரம் தெரிந்தவர் ஆகியோர் மூலமாக உயில் எழுதுவது பாதுகாப்பு. மேலும், பச்சை அல்லது சாதாரண வெள்ளைத்தாளில் எழுதினால் போதுமானது.

6) உயில் எழுதிய பிறகு நம்பிக்கைக்கு உரிய இரு நபர்களிடம் அதுபற்றி தெரிவிப்பது அவசியம். அப்போதுதான், தக்க சமயத்தில் உரியவர்களிடம் உயில் சென்று சேரும்.

7) உயிலை பதிவு செய்ய இயலாதவர்கள், மேற்கண்ட விவரங்களின் அடிப்படையில் உயிலை தெளிவாக எழுதி, கீழே கையொப்பமிட்டு, இடது கை பெருவிரல் ரேகையும் பதிக்க வேண்டும். குறிப்பாக, இரண்டு நபர்களது சாட்சிக் கையெழுத்து அவசியமானது.

பதிவு செய்யும் முறை

உயிலுக்குரிய சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் வருகிறதோ அங்கு பதிவு செய்யப்பட வேண்டும். சொத்துகளின் அளவு, அரசின் வழிகாட்டி மதிப்பு அல்லது ஒட்டு மொத்த சொத்துகள் மதிப்பு எவ்வளவு இருந்தாலும் பதிவு கட்டணம் மட்டும் பெறப்படும். மேலும், உயில் எழுதுபவரின் புகைப்படம் ஒட்டப்பட்டு, அவருடைய இடதுகை பெருவிரல் கைரேகை பதியப்பட்டு, இரண்டு சாட்சிகளின் கையொப்பமும் பெறப்படும்.

வருவாய்த்துறை ஆவணங்கள்

உயிலில் குறிப்பிட்டுள்ள முறைப்படி, ஒருவருக்குரிய சொத்தை அவரது பெயருக்கு மாற்ற விரும்புபவர்கள் வருவாய்த்துறை சம்பந்தமான ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்தாலே போதுமானது. அதற்காக, உயில் எழுதியவரின் இறப்பு சான்றிதழ், உயிலின் நகல் மற்றும் உயில் யாருக்கு எழுதியிருக்கிறாரோ அவருக்கான அடையாள சான்று ஆகியவற்றை வருவாய்த்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து, பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் ஆகிய பதிவேடுகளை தங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளலாம். 

Next Story