அஸ்திவார உறுதிக்கு உகந்த வழிமுறை


அஸ்திவார உறுதிக்கு உகந்த வழிமுறை
x
தினத்தந்தி 24 Feb 2018 6:53 AM GMT (Updated: 24 Feb 2018 6:53 AM GMT)

‘பெஸ்ட் கண்ட்ரோல்’ என்ற கரையான் தடுப்பு பற்றி பலருக்கு விழிப்புணர்வு இல்லை என்று கட்டுமான வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஸ்திவார பணிகளை தொடங்கி செய்யும்போது ‘பெஸ்ட் கன்ட்ரோல்’ அதாவது கரையான் உள்ளிட்ட இதர உயிரினங்களால் எதிர்காலத்தில் கட்டமைப்புகளுக்கு பாதிப்பு வராமல் தடுக்க வேண்டி செய்யப்படும் நடவடிக்கையாகும்.

ஓரிரு மணி நேரம்

அஸ்திவாரத்திற்கான பள்ளங்கள் அமைப்பிற்குப்பிறகு அவற்றில் ‘சென்ட்ரிங்’ கம்பிகளை இணைக்கும் பணிகளை முடித்து, கான்கிரீட் கலவையை நிரப்புவதற்கு முன்னதாக ‘பெஸ்ட் கன்ட்ரோல்’ பணிகளை செய்து முடிப்பது சரியானது. பொதுவாக, ஓரிரு மணிகளிலேயே இந்த பணிகளை செய்து முடிக்க முடியும்.

இயற்கை பாதிப்பு

இன்றைய நகர்ப்புற சூழலில், ஒரு காலத்தில் விவசாய நிலமாகவும், நீர் நிலைகளுக்கு அருகாமையிலும் அமைந்துள்ளதாகவே மனைகள் இருக்கின்றன. அத்தகைய இடங்களில் அஸ்திவாரம் அமைக்கப்படும் நிலையில், மண்ணில் வசித்து வரும் கரையான் போன்ற இதர பூச்சி வகைகளை கவனித்து, எதிர்காலத்தில் அவற்றால் அஸ்திவாரம் பாதிக்கப்படாமல் தடுக்கவேண்டும்.

கட்டிட பாதிப்பு

மண்ணுக்குள் மறைந்து வாழ்ந்து, படிப்படியாக அஸ்திவாரத்தை அரித்து விடக்கூடிய கரையான், கரப்பான், எலி போன்றவை கட்டிடத்தின் வலிமையை பாதிக்கக்கூடியவையாக இருக்கின்றன. குறிப்பாக, கரையான் புற்று மனையில் இருந்தால் ‘பெஸ்ட் கன்ட்ரோல்’ செய்வது அத்தியாவசியம்.

படிப்படியாக பழுது

தரமான கட்டுமான பொருட்களைக்கொண்டு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கட்டிடம் காலப்போக்கில் அஸ்திவார அளவில் பழுதடைந்து விட்டது என்ற நிலை பூச்சி வகைகளால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்பதை கட்டிடவியல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

விழிப்புணர்வு

கட்டுமானங்களுக்கான மண் பரிசோதனை பற்றி பலருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாததுபோல, ‘பெஸ்ட் கண்ட்ரோல்’ என்ற கரையான தடுப்பு பற்றியும் பலருக்கு விழிப்புணர்வு இல்லை என்றும் கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அஸ்திவார அமைப்புக்கான பள்ளம் எடுக்கப்பட்டவுடன் முதலில் ‘பெஸ்ட் கண்ட்ரோல்’ பணிகளில் பயன்படும் ரசாயனங்களை தக்க முறையில் பிரயோகம் செய்து பாதிப்புகளில் இருந்து கட்டிடத்தை காப்பது அவசியம்.

அவசிய செலவு

பொதுவாக, கட்டுமான பணிகளுக்கு முன்னதாக மனையை ஆய்வு செய்து கரையான் பாதிப்பிற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா..? என்று மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப மூன்று, நான்கு நிலைகளில் ‘பெஸ்ட் கண்ட்ரோல்’ செய்வது பாதுகாப்பானது. மனையில் எவ்விதமான பூச்சிகளும் இல்லை என்ற நிலையில் ‘பெஸ்ட் கண்ட்ரோல்’ செய்வது கூடுதல் செலவு என்ற எண்ணம் பலருக்கும் இருந்து வருகிறது. இந்த விஷயத்தில் வருமுன் காப்பது என்ற அடிப்படையில் செயல்படுவது அவசியம் என்று கட்டிட பொறியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

நிபுணர்கள் வழிகாட்டல்

அதன் அடிப்படையில் ‘பெஸ்ட் கண்ட்ரோல்’ நிபுணர்கள் வழி காட்டுதலுக்கேற்ப அஸ்திவார பணிகளின்போது அல்லது கட்டிடம் கட்டி முடித்த பிறகு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கட்டுமான பணிகள் முடிந்த நிலையிலும் கட்டமைப்புகளின் தரையும், சுவரும் இணையும் பகுதிகளில் ஒவ்வொரு அடி தொலைவுக்கும் ஒரு துளை இடப்பட்டு, அதற்குள்ளே தக்க ரசாயனங்கள் நிரப்பி அடைக்கப்படும். இந்த முறையின் மூலம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு கட்டிடத்தை தாக்கும் பூச்சிகள் தொல்லை ஏற்படுவதில்லை என்று அறியப்பட்டுள்ளது.

நான்கு முறைகள்

பொதுவாக, ஆறு மாதத்திற்கு ஒரு முறை மேற்கண்ட முறையை கடைப்பிடிப்பதன் மூலம் கரப்பான் பூச்சிகளையும், கொசுக்களையும் ஒழிக்க முடியும். ‘பெஸ்ட் கண்ட்ரோலை’ பொறுத்தவரை நான்கு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

1) கரையான்களுக்கு செய்யப்படுவது முதல் வகை.

2) இரண்டாவது அனைத்து வகையான பூச்சிகளுக்கும் அடிக்கப்படும் ஜெனரல் ஸ்பிரே முறை.

3) மூன்றாவது கரப்பான் பூச்சிகளை சாப்பிட வைத்து கொல்லும் ஜெல் ட்ரீட்மெண்ட்

4) நான்காவது கொசுக்களை அழிக்கும் ‘பாகிங்’ முறை. 

Next Story