மணல் தேவையை சமாளிக்க மாற்று முறைகள்
தமிழக அளவில் ஒரு ஆண்டுக்கான மணல் தேவை சுமார் ஒரு கோடி யூனிட் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நடைபெறக்கூடிய கட்டுமான பணிகளுக்காக நாளொன்றுக்கு சுமார் 10 ஆயிரம் லோடு மணல் தேவையாக உள்ளது. மொத்தத்தில், தமிழக அளவில் தினமும் சுமார் 30 ஆயிரம் லோடு மணல் தேவை என்ற நிலையில் தமிழக அளவில் ஒரு ஆண்டுக்கான மணல் தேவை சுமார் ஒரு கோடி யூனிட் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
எம்-சேண்ட்
கடந்த சில வருடங்களாக இயற்கை வளத்தை காக்கும் விதத்தில் ஆற்று மணலை எடுப்பதற்கு சட்ட திட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டன. அந்த நிலையில் ஆற்று மணலுக்கு மாற்றாக என்-சேண்ட் என்று சொல்லப்படும் குவாரி பாறைகள் உடைக்கப்பட்டு, அதனை அரைத்து பெறப்படும் செயற்கை மணல் பயன்பாட்டுக்கு வந்து ஓரளவுக்கு மணல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன.
வேறு வகை மணல்
தற்போதைய, நிலவரப்படி ஆற்று மணல் மற்றும் எம்-சேண்ட் ஆகியவை தவிர கட்டுமான பணிகளுக்கு வேறு வகை மாற்று மணல் சாத்தியக்கூறுகளை கண்டறிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுபற்றி கட்டுமான வல்லுனர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்ட தொழில் நுட்ப வல்லுனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
கட்டுமானங்கள் பெருக்கம்
சிமெண்டு பயன்பாட்டுக்கான சிறந்த ‘அக்ரிகேட்ஸ்’ என்ற நிலையில் ஆற்று மணல் கட்டிடங்களுக்கான சிறந்த மூலப்பொருளாக உள்ளது. மேலும், கடந்த பதினைந்து ஆண்டுகளில் சென்னை உள்ளிட்ட இதர தமிழக நகரங்களில் கட்டுமான அமைப்புகள் பெருகியதால், மணலின் தேவையும் கூடுதலாகி விட்டது. ஆனால், தேவைக்கேற்ப ஆற்று மணல் கிடைக்காத சூழலில், மாற்று வழிகள் பற்றி நிபுணர்களால் தீவிரமாக ஆராயப்பட்டு வந்தது.
‘காப்பர் ஸ்லாக்’
செம்பு உலையிலிருந்து பெறப்படும் உலோக கசடான ‘காப்பர் ஸ்லாக்’ என்பதும் மணலின் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்யும் நிலையில் இருப்பதை வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், பல வெளிநாடுகளில் கட்டிட கழிவுகளை அரசாங்கம் எடுத்துக்கொண்டு அவற்றை தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் மூலம் அரைத்து ஜல்லி மற்றும் மணலாக மாற்றி கட்டுமான பணிகளுக்கு குறிப்பிட்ட கட்டணத்தில் அளிக்கிறார்கள்.
‘தெர்மாகோல் துகள்’
சமீபத்தில், நியூசிலாந்து நாட்டில் மறு சுழற்சிக்கு உரிய ‘தெர்மாகோல்’ அட்டைகளை சிறிய அளவிலான துகள்களாக மாற்றி, மணலுக்கு பதிலாக சிமெண்டு சேர்த்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது.
அஸ்திவார மண்
மேலும், கட்டுமான இடங்களில் அஸ்திவார பணிகளின்போது, நிலத்தை தோண்டி கிடைக்கும் மண்ணை இந்திய தரக் கட்டுப்பாட்டு விதிகளின்படி கிடைக்கும் மணலை மண்ணிலிருந்து பிரித்து பயன்படுத்தலாம். அதாவது, மண்ணுக்கும், மணலுக்கும் உள்ள வித்தியாசமானது வடிவம் மற்றும் பருமன் ஆகியவற்றில் உள்ளது என்ற அடிப்படையில் வல்லுனர்கள் தங்களது ஆராய்ச்சிகளில் சிமெண்டு மற்றும் மண் ஆகியவற்றை கலந்து கான்கிரீட் தயாரித்து அதன் வலிமையை சோதித்து அறிந்துள்ளார்கள்.
சலித்த மண்
பெருநகரங்களில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு அல்லது வணிக வளாகங்கள் ஆகியவற்றின் அஸ்திவாரங்கள் பல மீட்டர் ஆழத்தில் தோண்டப்பட்டு, நிறைய மண் கிடைக்கிறது. அந்த மண்ணை கச்சிதமாக உலர்த்தி, சலித்து எடுத்து பயன்படுத்துவதன் மூலம் கட்டுமான பணிகளுக்கான மணல் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும் என்பதோடு, வெளிநாடுகளில் இந்த முறையை கடைப்பிடித்து வருவதாகவும் கட்டமைப்பு பொறியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இறக்குமதி மணல்
மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற தெற்காசிய நாடுகளில் உள்ள மணல் வளம் மூலம் ஏழெட்டு ஆண்டுகள் வரையிலும் தமிழக அளவில் மணல் தேவையை பூர்த்தி செய்ய இயலும். குறிப்பாக, கம்போடியா, பிலிப்பைன்ஸ், மியான்மர், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து, ஆற்று மணலை இறக்குமதி செய்ய நல்ல வாய்ப்புகள் இருப்பதாக கட்டுமானத்துறையினர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
Related Tags :
Next Story