தூண்கள் இல்லாமல் மேற்கூரை அமைக்கும் கட்டுமான நுட்பம்


தூண்கள் இல்லாமல் மேற்கூரை அமைக்கும் கட்டுமான நுட்பம்
x
தினத்தந்தி 31 March 2018 12:11 PM IST (Updated: 31 March 2018 12:11 PM IST)
t-max-icont-min-icon

பெரிய அளவுள்ள கட்டிடங்களின் மேற்கூரையானது கிட்டத்தட்ட 50 அடிகளுக்கும் மேலாக தாங்கு தூண்கள் இல்லாமல் அமைக்கப்பட்டிருப்பதை பல இடங்களில் பார்த்திருப்போம்.

பெரிய மண்டபங்களில் எவ்விதமான தாங்கு தூண்களும் இல்லாமல் மேற்புற ‘சீலிங்’ அமைக்கப்பட்டிருப்பதையும் பலர் கவனித்திருப்போம். அதற்காக கடைப்பிடிக்கப்படும் விஷேச தொழில்நுட்பம் பற்றி கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவித்தவற்றை இங்கே காணலாம்.

வீடுகளின் கூரை

பெரும்பாலும் தனி வீடுகள் அமைப்பில் மேற்கண்ட முறை இல்லாவிட்டாலும், பெரிய குடியிருப்பு பகுதிகளுக்கான அரங்கங்கள் அமைக்கப்படும்போது இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. வீடுகள் கட்டமைப்பில் 12 அல்லது 14 அடிகளுக்கும் மேற்பட்ட அகலம் கொண்ட மேற்கூரைகளை தாங்கி நிற்க தூண்கள் செங்குத்தாக கட்டமைத்து ‘பீம்கள்’ என்ற குறுக்கு விட்டங்களை அதில் இணைத்து அவற்றின் மேலாக கான்கிரீட் தளம் அமைக்கப்படுவது வழக்கம்.

அகலமான மேற்கூரை

மேற்சொன்ன முறையில் பீம்கள் அல்லது தூண்கள் இல்லாமல் மேற்கூரையை கிட்டத்தட்ட 75 அடிகளுக்கும் மேல் அளவுள்ளதாகவும், சதுர வடிவம் கொண்டதாகவும் ‘கிரிட் புளோர்’ (Grid Floor)  முறையில் வடிவமைக்கப்படுகிறது. இந்த அமைப்பை கீழிருந்து மேற்கூரையை கவனித்தால் சிறுசிறு பெட்டிகளைப்போல காட்சி தருவதால் ‘காபர்டு புளோர்’  (Coffered Floor)  என்றும் சொல்லப்படும்.

நம்ம ஊர் கட்டிடம்

தரைப்பரப்பில் தூண்கள் இல்லாமல் அகலமாக அமைக்கப்படவேண்டிய அரங்குகள் மற்றும் மண்டபங்கள் போன்ற பெரிய பரப்பிலான கட்டிடங்களுக்கு மேற்கண்ட ‘கிரிட் புளோர்’ முறை கடைபிடிக்கப்படுகிறது. உதாரணமாக, சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இது போன்ற கான்கிரீட் கூரை அமைப்பு இருப்பதை கவனிக்க இயலும்.

சீரான கட்டமைப்பு

அதாவது, சீரான அளவுகள் உள்ள 4 அல்லது 5 அடி இடைவெளிகளில் 6 அங்குல அகலம் கொண்ட ‘பீம்கள்’ மற்றும் அதற்கு மேலாக கூரையின் தளம் ஆகியவற்றை ஒரே சமயத்தில் முழுமையாக ஒன்றிணைந்த(Integrated)  மற்றும் ஒரே சீரான (Monolithic) முறையில் ஆர்.சி.சி கான்கிரீட் அமைக்கப்படும். அவற்றை அரங்கத்தின் நீள அகலத்திற்கு ஏற்ப சதுரம் அல்லது செவ்வக வடிவில் செங்குத்தாக அல்லது இணை ‘பீம்’ அமைப்புகள்(Perpendicular Beam)  உருவாக்கப்படும்.

உள் அலங்காரம்


பெட்டி போன்று தோற்றம் அளிக்கும் மேற்கண்ட ’சீலிங்’ பகுதியின் உட்புறத்தில் அதற்கான உள் அலங்கார பணிகள் மற்றும் வெளிச்சம் தருவதற்கான மின்விளக்கு அமைப்புகளை கச்சிதமாக செய்து கொள்ளலாம்.

வல்லுனர் ஆலோசனை


மேற்கண்ட ‘கிரிட் புளோர்’ அமைப்பில் நான்கு பக்கமும் வலிமையான சுவர்கள் அல்லது தூண்கள் மற்றும் பீம் அமைப்புகள் இருப்பது அவசியம். மேலும், இடையிலுள்ள ‘கிரிட் பீம்களும்’ அதிக அகலமில்லாமல் இருப்பதும் நல்லது. அந்த அமைப்பை பயன்படுத்தி பெரிய வீடுகளுக்கான ‘ஹால்கள்’, ‘லாபி’ மற்றும் ‘போர்டிகோ தளம்’ ஆகியவற்றை அமைப்பது பல இடங்களில் நடைமுறையில் இருக்கிறது. மேற்கண்ட சதுர வடிவங்கள் கொண்ட கட்டிட மேல்தளங்கள் அனுபவம் மிக்க கட்டிட வடிவமைப்பு பொறியாளரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் அமைக்கப்படுவதே பாதுகாப்பானது.

Next Story