கட்டுமான பணிகளை தொடங்க அவசியமான அனுமதிகள்


கட்டுமான பணிகளை தொடங்க அவசியமான அனுமதிகள்
x
தினத்தந்தி 28 April 2018 12:00 AM GMT (Updated: 27 April 2018 11:03 AM GMT)

சென்னை பெருநகர எல்லைக்குள் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு முன்னர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடமிருந்து தகுந்த திட்ட அனுமதி பெறுதல் வேண்டும்

சென்னை பெருநகர எல்லைக்குள் அமைந்த குறிப்பிட்ட ஒரு இடம் அல்லது மனையில் அபிவிருத்தி அல்லது கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு முன்னர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடமிருந்து தகுந்த திட்ட அனுமதியும், சென்னைக்கு வெளிப்புறமாக கட்டுமான பணிகள் நடைபெறும் பட்சத்தில் நகர் ஊரமைப்புத்துறை அல்லது சம்பந்தப்பட்ட பகுதிக்கான உள்ளாட்சி அமைப்பிலிருந்து திட்ட அனுமதியும் (Planning Permission) பெறுதல் வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகியவை உள்ளாட்சி அமைப்புகளாகும்.

திட்ட அனுமதிகள்

நில அபிவிருத்தி பணி அல்லது கட்டுமான பணியை தொடங்குவதற்கு முன்பு, பணிக்கான விண்ணப்பத்தின் பேரில் நகர் ஊரமைப்பு துறையின் கீழ் இயங்கும் உள்ளூர் திட்ட குழுமம் (Local Planning Authority) அல்லது உள்ளாட்சி அமைப்பால் தரப்படும் திட்ட அனுமதியின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள் கட்டிடத்திற்கான உரிமத்தை (Building Permission) அளிக்கின்றன.

உள்ளாட்சி அமைப்புகள்

உள்ளாட்சி அமைப்புகள் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் கொண்ட 4000 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கும், தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 2000 சதுர அடி பரப்புள்ள வணிக கட்டிடத்திற்கும் திட்ட அனுமதி வழங்கலாம்.

உள்ளூர் திட்டக் குழுமம்

இந்த அமைப்பின் உறுப்பினர் செயலர், மண்டல துணை இயக்குனர் மற்றும் புது நகர் அபிவிருத்தி குழும உறுப்பினர் செயலர்

ஆகியோர் கீழ்க்கண்ட வகையிலான திட்ட அனுமதியை வழங்குகிறார்கள்.

* 25,000 சதுரடி பரப்பிற்கு மிகாத தரைத்தளம் மற்றும் முதல் தளம் உள்ள சாதாரண கட்டிடம்.

* 25,000 சதுரடி பரப்பிற்கு மிகாத தரைத்தளம் மற்றும் முதல் தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளம் உள்ள சிறப்புக் கட்டிடம்.

* பள்ளிக்கூட கட்டிடம் பரப்பிற்கு அளவுக் கட்டுப்பாடுகள் இல்லை.

* தொழிற்கூட கட்டிட அளவிற்கும், குதிரைத் திறன் (Horse Power) அளவுக்கும் கட்டுப்பாடுகள் இல்லை.

* மனைப்பிரிவுகள் நகர்ப்பகுதிகளில் 5 ஏக்கர் நிலப்பரப்பிற்கும், கிராமப்பகுதிகளில் 10 ஏக்கர் நிலப்பரப்பிற்கும் திட்ட அனுமதி வழங்கலாம்.

* மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர, மற்ற இடங்களுக்கு சென்னையில் உள்ள நகர் ஊரமைப்பு இயக்குனர் திட்ட அனுமதி வழங்குவார். அந்த திட்ட அனுமதியின் பேரில் உள்ளாட்சி அமைப்புகள் உரிய உரிமம் வழங்கும்.

திட்ட அனுமதியின் கால அளவு

திட்ட அனுமதி மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும், மேலும் மூன்றாண்டுகளுக்கு புதுப்பித்து கொள்ளலாம். முதல் திட்ட அனுமதி காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்குள் திட்ட அனுமதியை புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.

திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்கள் (OSR Open Space  Reservation)

பூங்கா அல்லது விளையாட்டுத் திடல் போன்ற சமூக பொழுது போக்கு உபயோகத்திற்கு ஒதுக்கப்படும் இடங்கள், பொதுச் சாலையை ஒட்டி, தரைமட்டத்தில் நகரமைப்பு துறை குறிப்பிடும் வடிவம் மற்றும் இடத்தில்  அமைக்கப்பட வேண்டும்.

Next Story