கட்டுமான பணிகளில் உதவும் தொழில்நுட்ப ஆலோசகர்


கட்டுமான பணிகளில் உதவும் தொழில்நுட்ப ஆலோசகர்
x
தினத்தந்தி 9 Jun 2018 7:31 AM GMT (Updated: 9 Jun 2018 7:31 AM GMT)

கனவு வீட்டை ஒருவருக்கு பிடித்தமான வகையில் கட்டுவது ஒரு வகையில் சாதனையாக உள்ளது.

பல இடங்களில் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட மனை அல்லது இடத்தின் உரிமையாளர்களே சிக்கன நடவடிக்கை அடிப்படையில், பொருட்களை வாங்கி கொடுத்து ‘லேபர் கான்ட்ராக்ட்’ என்ற ஒப்பந்தப்பணி முறையில் தக்க நபர்களை நியமனம் செய்து, கட்டுமான பணிகளை செய்துகொள்வது வழக்கத்தில் உள்ளது. பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் இந்த முறையை கடைபிடித்து வரும் நிலையில், பல இடங்களில் இரு தரப்பிலும், வெவ்வேறு காரணங்களால் சிக்கல்கள் ஏற்பட்டு விடுவதாக அறியப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் சேமிப்பு

கனவு வீட்டை ஒருவருக்கு பிடித்தமான வகையில் கட்டுவது ஒரு வகையில் சாதனையாக உள்ள இன்றைய சூழலில், பலரும் வங்கிக் கடன் அல்லது அடமானம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கட்டிட பணிகளுக்கான பணத்தை ஏற்பாடு செய்கிறார்கள். பொதுவாக, அனுபவம் மிக்க கட்டுமான நிறுவனம் அல்லது தொழில்நுட்ப அனுபவம் கொண்ட கட்டுமான பொறியாளர் ஆகியோரிடம் கட்டிடம் அமைக்கும் பணியை ஒப்படைத்து, பணிகளை செய்து முடிப்பதுதான் பாதுகாப்பான அணுகுமுறையாக கருதப்படுகிறது. இருந்தாலும், மொத்த பட்ஜெட் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை மிச்சப்படுத்தலாம் என்ற அடிப்படையில் ‘லேபர் காண்ட்ராக்ட்’ முறையை தேர்ந்தெடுத்ததாக பலரும் தெரிவித்துள்ளார்கள்.

பொறியாளர்கள் ஆலோசனை

எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் வீடு அல்லது அடுக்குமாடி கட்டும் ஒருவர் தனது விருப்பப்படி செயல்படுவது இயற்கைதான் என்று தெரிவித்த கட்டுமான பொறியாளர்கள், கட்டுமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய அடிப்படையான விஷயங்கள் மற்றும் அதன் தொழில்நுட்பம் சார்ந்த படிநிலைகள் குறித்து பல்வேறு தகவல்களை அளித்துள்ளார்கள். அவை பற்றி கீழே காண்போம்.

நான்கு ‘எம்’

ஒரு வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்க நான்கு ‘எம்’ (M) அவசியம் என்று கட்டிட பொறியியல் ரீதியான வரையறை செய்யப்பட்டுள்ளது. அதாவது, பணம் (Money), மூலப்பொருட்கள் (Materials), மனித ஆற்றல் (Man Power) மற்றும் கட்டுமான மேலாண்மை (Management) ஆகியவையாகும்.

கட்டுமான மேலாண்மை

குறிப்பாக, கட்டுமான பட்ஜெட்டுக்கான பொருளாதார ஏற்பாடுகளை செய்யாமல் ஒருவரது விருப்பப்படி வீட்டு கட்டுமான பணிகளை செய்ய இயலாது. மேலும், ஆள் பலம் எவ்வளவு இருந்தாலும் தக்க ஒருங்கிணைப்பு அல்லது கட்டுமான மேலாண்மை இல்லாமல் கட்டிட பணிகளை திறம்பட செய்து முடிப்பதும் சிக்கலான விஷயம். இறுதியாக வருவது கட்டுமான மூலப்பொருட்கள். சிறிய பட்ஜெட் கட்டுமானம் அல்லது பெரிய பட்ஜெட் கட்டுமான எதுவாக இருந்தாலும் தகுந்த நேரத்தில், சரியான தரமுள்ள மூலப்பொருட்கள் பணியிடத்திற்கு வந்து சேர்வதற்கு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் முக்கியமான விஷயமாகும்.

விருப்பப்படி செயல்படலாம்

மேலும், லேபர் காண்ட்ராக்ட் முறைப்படி செயல்படும் ஒரு வீட்டு உரிமையாளர் அவரது விருப்பப்படி, தரமான கட்டுமான மூலப்பொருட்களை பணிகளில் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதோடு, கையிருப்பாக உள்ள பணத்தின் அளவிற்கேற்ப கட்டுமான பணிகளை மெதுவாக செய்ய சொல்லவோ அல்லது ஓரிரு வாரங்கள் கழித்து பணிகளை செய்ய சொல்லவோ வாய்ப்பு உள்ளது. காண்ட்ராக்டருக்கு தக்க காலங்களில் பணம் தரவேண்டும் என்ற அவசியம் இல்லாத நிலையில் கட்டுமான பணிகளை அவரது விருப்பப்படி மெதுவாக செய்ய இயலும்.

தொழில்நுட்ப குறைகள்

மேலும், பட்ஜெட் அடிப்படையில் மூலப்பொருட்களை பயன்படுத்தும்போது, பணியாளர்கள் அவற்றை கச்சிதமான அளவுகள் அல்லது முறைகளில் பயன்படுத்துகிறார்களா என்பதை சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரே கவனிக்க வேண்டியதாக இருக்கும். வீட்டின் கட்டுமான பணிகளை செய்யும் அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் கட்டுமான தொழிலில் உள்ள நுட்பமான அணுகுமுறைகள் பற்றிய அறிய இயலாத நிலையில், பணிகளில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப குறைபாடுகளை அவரால் கண்டறிவது சிரமமாக இருக்கும்.

கட்டுமான ஆலோசகர்

மேற்கண்ட சூழலில், ஒரு அனுபவமிக்க கட்டுமான பொறியாளரை கட்டுமான ஆலோசகராக (Consultant) நியமித்து, கட்டுமானத்தின் கால அளவு (Duration Of Construction), பணிகளின் தரம் (Quality) மற்றும் செலவுகளில் சிக்கனம் (Economy) ஆகிய மூன்று நிலைகளில் அவரது வழிகாட்டுதல்களை பெற்று பணிகளை செய்து முடிக்கலாம். அதன் மூலம் கட்டிடத்தின் உறுதி மற்றும் ஆயுள் ஆகிய நிலைகளில் நீடித்த பயன் பெற இயலும் என்று அனுபவம் மிக்க கட்டுமான வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முறையானது பெரிய, பெரிய கட்டுமான திட்டங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story