கட்டுமான பணிகளில் மூன்று வகை செலவினங்கள்


கட்டுமான  பணிகளில் மூன்று  வகை  செலவினங்கள்
x
தினத்தந்தி 29 Jun 2018 10:00 PM GMT (Updated: 29 Jun 2018 12:38 PM GMT)

சொந்த வீடு கட்டியவர்கள் ‘பட்ஜெட்’ எகிறிய சூழ்நிலைகளை சந்திக்க நேரும்போது மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது.

சொந்த வீடு கட்டியவர்கள் ‘பட்ஜெட்’ எகிறிய சூழ்நிலைகளை சந்திக்க நேரும்போது மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அதுபோன்ற சூழ்நிலைகளை முன்னதாகவே தவிர்க்க கட்டுமான செலவினங்களை மூன்றாக பிரித்து அறிந்து கொண்டு செயல்படலாம். மேலும், அதன் மூலம் செய்ய வேண்டியவை அல்லது தவிர்க்க முடிந்தவை என்று பிரித்து பார்த்து செய்யலாம்.

அடிப்படை செலவுகள்

கட்டுமான பணிகளில் மூலப்பொருட்களை கொள்முதல் செய்வது, மனை வாங்குவது, ஆவணங்கள் பதிவு, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு அல்லது ‘போர்வெல்’, கட்டமைப்புக்கான திட்ட அனுமதி பெறுவது ஆகியவை அடிப்படை செலவுகளாகும். இந்த வி‌ஷயத்தில் முன்பே வீடு கட்டியவர்களது ஆலோசனைகளைப் பெறுவதும் செலவு சிக்கனத்துக்கு உதவியாக இருக்கும். 

அத்தியாவசிய செலவுகள்

காண்ட்ராக்டர் அல்லது கட்டுனருக்கு தர வேண்டிய பணம், வேலையாட்கள் சம்பளம், மூலப்பொருட்களுக்கான வாகன வாடகை, இதர போக்குவரத்து செலவுகள், மின்சார செலவுகள் ஆகியவை அத்தியாவசிய செலவுகளாகும். திட்டமிட்டதை விடவும் கூடுதலாக ஆகக்கூடிய தன்மை மேற்கண்ட செலவினங்களுக்கு இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

எதிர்பாராத செலவுகள்

கட்டுமான பணிகளுக்கு இடைவெளியில், உறவினர்கள் ஆலோசனை, நண்பர்களின் அறிவுரை, குடும்ப அங்கத்தினர்களின் விருப்பம் என்ற நிலைகளில் கட்டிட அமைப்பில் மாற்றங்களை செய்வது பட்ஜெட்டை அதிகப்படுத்தும் நடவடிக்கையாக அமையும். மேலும், மூலப்பொருட்களின் எதிர்பாராத விலையேற்றம், இயற்கை சூழ்நிலைகளால் கட்டுமான மூலப்பொருட்கள் சேதமாவது, பணியாளர்கள் விடுமுறை காரணமாக 

வேறு ஆட்களை அவசரமாக நியமிப்பது என்ற வகைகளில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். முன்கூட்டியே திட்டமிட்டதை விடவும் கட்டமைப்புகளில் கூடுதல் விரிவாக்கம் செய்வதில்தான் செலவு அதிகரிக்கிறது என்பது வல்லுனர்களது கருத்தாகும். 

சிக்கன நடவடிக்கைகள்

அனைத்து செலவுகளையும் செய்வதற்கு முன்னர் சிக்கன நடவடிக்கையாக, அவற்றை குறைந்த பட்ச செலவுக்குள் செய்வது பற்றி யோசிக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாகும். செய்யவேண்டியவற்றை செய்வதும், தவிர்க்க வாய்ப்பு உள்ளவற்றை தவிர்ப்பதும் அதிகபட்ச செலவுகளை தடுக்கும் முறையாக இருக்கிறது. கட்டுமான பொருட்களுக்கான விலையை ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விசாரித்து வாங்குவது, அவசியமான அளவுக்கு மட்டும் மூலப்பொருட்கள் கையிருப்பு போன்ற எளிய நடவடிக்கைகள் மூலமும் பட்ஜெட் எகிறாமல் ஓரளவுக்காவது கட்டுப்படுத்த இயலும்.

Next Story