முதியோர்களுக்கு உதவும் வங்கி கடன் திட்டம்


முதியோர்களுக்கு  உதவும் வங்கி  கடன்  திட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2018 4:00 AM IST (Updated: 29 Jun 2018 6:13 PM IST)
t-max-icont-min-icon

பணி மற்றும் தொழில் காரணங்களுக்காக நகர்ப்புறங்களில் குடும்பத்துடன் குடியேறி, பணிபுரியும் காலத்தில் வீட்டுக்கடன் பெற்று சொந்த வீடு கட்டிய மூத்த குடிமக்கள் பலரும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

ணி மற்றும் தொழில் காரணங்களுக்காக நகர்ப்புறங்களில் குடும்பத்துடன் குடியேறி, பணிபுரியும் காலத்தில் வீட்டுக்கடன் பெற்று சொந்த வீடு கட்டிய மூத்த குடிமக்கள் பலரும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் மாதத்தவணைகளை செலுத்தி, வீட்டைச் சொந்தமாக்கிக் கொண்ட மூத்த குடிமக்கள் பணி ஓய்வு பெற்ற நிலையில் இன்றைய நகர வாழ்க்கையில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

முதியோர்களுக்கு உதவி

மேலும், அவர்களுக்கு வாரிசுகள் இல்லாதது, அவர்களது ஆதரவு போதுமானதாக இல்லாதது அல்லது வாரிசுகள் வெளிநாட்டில் ‘செட்டில்’ ஆகியிருப்பது போன்ற நிலைகளில் தனிமை வாழ்க்கையை பல தம்பதிகள் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அவர்களில் பலருக்கும் வருமானத்துக்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில், சொந்தவீடு இருக்கும் முதியோர்களுக்கு உதவும் வங்கி நிதி உதவி திட்டமாக ‘ரிவர்ஸ் மார்ட்கேஜ்’ இருப்பதாக நிதியியல் ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த திட்டம் பற்றிய அவர்களது கருத்துக்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

வீட்டின் மதிப்புக்கு நிதி 

பொதுவாக, வங்கி அளிக்கும் கடன் உதவி மூலம் வீட்டை வாங்கி அதற்கு ஒவ்வொரு மாதமும் வட்டி மற்றும் முதல் ஆகியவற்றை வங்கிக்கு திருப்பி செலுத்துவது ‘மார்ட்கேஜ் லோன்’ ஆகும். ஆனால், சொந்த வீடு வைத்துள்ள முதியோர்களுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் வீட்டின் மதிப்புக்கேற்ற நிதி உதவியை ஒவ்வொரு மாதமும் தவணை கணக்குப்படி வங்கியால் அளிக்கப்படும் முறை ‘ரிவர்ஸ் மார்ட்கேஜ்’ லோன் எனப்படும்.

குடியிருக்கும் வீடு

இந்த திட்டத்தின்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களது விருப்பதின் அடிப்படையில், வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, அதில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் வரை பெறலாம். அந்த கடன் தொகையை மாதாந்திர தவணை முறையில் அதிக பட்சமாக 20 ஆண்டுகளுக்கு வங்கிகள் அளிக்க முடியும். இந்த திட்டம் ஒருவர் குடியிருக்கும் அவரது சொந்த வீட்டுக்கு மட்டும் பொருந்தும். சொந்த வீடாக இருந்தாலும் வாடகைக்கு விடப்பட்டிருந்தால் இந்தத் திட்டத்தில் அதை பயன்படுத்திக் கொள்ள இயலாது.

வருமான வரி இல்லை

தவணை தொகையை ஒவ்வொரு மாதம், காலாண்டுக்கு ஒரு முறை அல்லது அரையாண்டுக்கு ஒரு முறை என்ற நிலைகளில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பணம் வருமானமாகக் கருதப்படாத காரணத்தால், வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. 

இடைப்பட்ட காலங்களில் வீட்டை விற்க உரிமையாளர் முடிவு செய்யும் பட்சத்தில், வங்கிக்குச் சேரவேண்டிய தொகையை செலுத்திய பின்னரே வீட்டை விற்க முடியும். 

வீட்டு பராமரிப்புகள்

மேற்கண்ட திட்டத்தில் நிதி உதவி பெற்றவர்களது காலத்துக்கு பிறகு வீடு வங்கிக்கு சென்று விடும். அவர்களது வாரிசுகள் விருப்பப்பட்டால் வங்கிக்கு மொத்தமாகப் பணம் கொடுத்து வீட்டை திருப்பிக்கொள்ள முடியும். வீட்டின் உரிமையாளர், வீட்டில் குடியிருக்கும் வரை அதற்கு அவரே உரிமையாளர் என்ற அடிப்படையில் வீட்டு வரி, வீட்டுப் பராமரிப்பு ஆகியவற்றை அவர் கவனித்துக்கொள்ள வேண்டும். இருபது ஆண்டுகள் சென்ற பிறகும் உரிமையாளர் அந்த வீட்டில் குடியிருக்கலாம். ஆனால், வங்கி மூலம் கிடைத்து வந்த நிதி உதவி கிடைக்காது.
1 More update

Next Story