நில அளவை பணிகளில் நவீன முறை


நில அளவை பணிகளில் நவீன முறை
x
தினத்தந்தி 7 July 2018 10:22 AM IST (Updated: 7 July 2018 10:22 AM IST)
t-max-icont-min-icon

நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மில்லிமீட்டர் அளவுக்கு துல்லியமான அளவுப் பணிகளை மேற்கொள்ள டிஜிட்டல் புவி அமைப்பு நிலை கருவியை பயன்படுத்தி நில அளவைப் பணிகளை மேற்கொள்ளும் முறை அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணியின் பயன்பாட்டிற்காக தமிழகம் முழுவதும் 70 தொடர் இயக்கப் பார்வை கட்டுப்பாட்டு மையங்கள் (Continuously Operating Reference Station-CORS) அமைக்கப்பட உள்ளன.

அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி மற்றும் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தொடர் இயக்கப் பார்வை கட்டுப்பாட்டு தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், இந்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருத்தணி நகராட்சியில் நகர நில அளவைப் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நகர்ப்புற நிலப்பதிவேடுகள் கணினி மயம்

மேலும், நகர நில அளவை ஆவணங்கள் பயன்பாட்டில் இருந்து வரும் அம்பத்தூர், ஆவடி, மாதவரம், திருவள்ளூர், திருவெற்றியூர் மற்றும் கத்திவாக்கம் ஆகிய நகராட்சிகளில் நகர அளவை நிலப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு, அவற்றில் அம்பத்தூர், ஆவடி, மாதவரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 நகராட்சிகளின் நில ஆவணங்கள் இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதன் மூலம் நில உரிமை மாற்ற பதிவுகள் இணைய வழியில் மேற்கொள்ள இயலும். மீதமுள்ள திருவெற்றியூர் மற்றும் கத்திவாக்கம் நகராட்சி நில ஆவணங்களின் கணினி பதிவுகள் விரைவில் இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

புல அளவு வரைபடங்கள் மின்னணுமயம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 11 ஊரக வருவாய் வட்டங்களில் உள்ளடங்கிய 2,16,382 புல வரைபடங்களில் இதுவரை 2,13,523 புல வரைபடங்கள் மின்னணு மயமாக்கப்பட்டு நவீன மென்பொருள் முலம் இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பொது மக்கள், அவர்களூக்கு சொந்தமான நிலங்களின் புல அளவு வரைபடங்களை பார்வையிட்டு நகல் பதிவிறக்கம் செய்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய நில ஆவண மேலாண்மை மையம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 11 ஊரக வருவாய் வட்டங்களில் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் அம்பத்தூர் ஆகிய 5 வருவாய் வட்டங்களில் நில ஆவண மேலாண்மை மையம் அனைத்து வசதிகளுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 6 வட்டங்களில் நில ஆவண மேலாண்மை மையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

Next Story