கட்டுமானத்துறை வளர்ச்சிக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம்


கட்டுமானத்துறை வளர்ச்சிக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம்
x
தினத்தந்தி 21 July 2018 7:27 AM GMT (Updated: 21 July 2018 7:27 AM GMT)

கட்டுமானத்துறையில் வெளிப்படையான வர்த்தக நடவடிக்கைகளை உறுதி செய்யும் வகையில் சென்ற ஆண்டு மே மாதம் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் (Real Estate Regulation and Development Act -RERA) அமலுக்கு வந்தது.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களால் நிறைவேற்றப்படும் கட்டுமான திட்டங்கள் குறித்த சகல விவரங்களையும் மேற்கண்ட சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளிடம் தெரிவித்து பதிவு செய்து கொள்ளவேண்டும். அதன் அடிப்படையில் கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அமைப்பின் இணைய தளம்

இந்த சட்டத்தின்கீழ், வீடு வாங்குபவர் அல்லது விற்பவர் ஆகிய இருவருக்குள் ஏற்படும் சிக்கல்களுக்கு இரண்டு மாதத்துக்குள் உரிய தீர்வு காணப்படும். மேலும் இந்த அமைப்பின் இணையதளம் வழியாக குறிப்பிட்ட கட்டுமான நிறுவனத்தின் திட்ட நிலவரம், கட்டுமான பணி நிலவரம் மற்றும் அவற்றின் இதர திட்டங்கள் குறித்த முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இயலும்.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

விற்பனையாளர், வாங்குபவர், தரகர் ஆகியோர்களது பொறுப்புகள் வரையறை, புகார்களை விசாரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம், மனையின் வரைபடம், கட்டி முடிக்கப்பட்ட விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கட்டுனர் அல்லது மனை விற்பனையாளரால் ‘‘RERA’ அமைப்பின் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், கட்டுமான திட்ட மதிப்பில் 70 சதவிகித தொகை மனை வாங்குபவர்களிடமிருந்து பெற்று திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். கட்டுமான உடன்படிக்கையில் குறிப்பிட்ட முன் பணத்தில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக வாடிக்கையாளரிடம் இருந்து வாங்கக்கூடாது. அதே சமயம் வாடிக்கையாளரும் கட்டுமான உடன்படிக்கையின்படி சொல்லப்பட்ட தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தராவிட்டால், அபராத தொகை கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்பவை இந்த சட்டத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

இதர மாநிலங்களில் நடைமுறை

மேற்கண்ட சட்டம் நடைமுறைக்கு வந்து ஓரு வருடம் முடிவடைந்த நிலையில் இந்த சட்டம் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் நடைமுறையில் இருந்து வருவதாகவும், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் அதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும் ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் மற்றும் கட்டுனர்கள் உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ளார்கள்.

தமிழ்நாடு மனை விற்பனை ஒழுங்கு முறை குழுமம்

குறிப்பாக, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘தமிழ்நாடு மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தின்’ (‘TNRERA) மூலம் கடந்த 2017-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 280 கட்டுமான திட்டங்களும், சுமாராக 180 ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பு 2018-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 280 கட்டுமான திட்டங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஒற்றை சாளர முறை

ஒரு கட்டுமான திட்டத்தில் எட்டு வீடுகளுக்கு அதிகமாகக் கட்டப்படும் பட்சத்தில் ‘RERA’ அமைப்பில் பதிவு செய்யப்பட வேண்டும். இன்றைய நிலையில் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த அமைப்பில் ஆங்காங்கே புகார்களும் அளிக்கப்பட்டு, அவற்றிற்கு தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசிடமிருந்து அனுமதி, கட்டுமான பணி நிறைவு சான்றிதழ், மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் ஆகியவை கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு ‘RERA’ அமைப்பின் மூலம் கிடைக்கும் பட்சத்தில் கட்டுமான திட்டங்களை விரைவில் செயல்படுத்த ஏதுவாக இருக்கும் என்பது கட்டுனர்களின் கருத்தாக உள்ளது. 

Next Story