குடியிருப்புகளுக்கான நடைபாதை அமைப்பில் புதுமை


குடியிருப்புகளுக்கான நடைபாதை அமைப்பில் புதுமை
x
தினத்தந்தி 4 Aug 2018 2:42 PM IST (Updated: 4 Aug 2018 2:42 PM IST)
t-max-icont-min-icon

அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், பண்ணை வீடுகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களுக்கு பிரதான சாலையிலிருந்து செல்ல உதவும் நடைபாதைகள் பொதுவாக கான்கிரீட் கொண்டு அமைக்கப்படுவது வழக்கம்.

ஒரு சில இடங்களில் தார் சாலையாகவும், தனிப்பட்ட கான்கிரீட் ‘சிலாப்’ அமைப்பாக அல்லது ‘கான்கிரீட் பிளாக்குகள்’ கொண்டு ஒன்றையொன்று இணைத்தும் அமைக்கப்படுகின்றன.

‘கான்கிரீட் ஸ்டாம்பிங்’

வெளிப்புற சாலையிலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக சுற்றுப்புறத்தில் அமைக்கப்படும் நடைபாதையில் ‘கான்கிரீட் ஸ்டாம்பிங்’ என்ற புதுமையான தொழில்நுட்ப அணுகுமுறை பல்வேறு மேலை நாடுகளில் உபயோகத்தில் இருந்து வருகிறது. அதாவது, விருப்பத்திற்கேற்ற வடிவங்கள் மற்றும் வண்ணங்கள் கொண்ட அச்சுக்கள் ஈரமான கான்கிரீட் பரப்பில் ‘என்கிரேவிங்’ என்ற முறையில் பல விதங்களில் பதிக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட இடத்தின் அமைப்புக்கு தகுந்த அளவில் அவை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ வெவ்வேறு வடிவங்களில் இருக்கும். தக்க வடிவங்களை பதித்து முடித்த பின்னர், அவற்றின் மேற்புறத்தில் பல வண்ண ரசாயன கூட்டுப்பொருட்களை பயன்படுத்தி அச்சுக்கள் மேலும், வண்ணமயமாக தோன்றும்படி செய்யப்படும்.

வழவழப்பான மேற்பரப்பு

அதன் பின்னர், கான்கிரீட் ‘ஸ்டெயினிங்’ என்ற முறையின்படி வண்ணமயமான கான்கிரீட் பரப்புகள் உபயோகத்துக்கு ஏற்றவாறு வழவழப்பான தன்மை கொண்டவையாக மாற்றப்படுகின்றன. குறிப்பாக, வீடுகள், பண்ணை வீடுகள், அலுவலகங்கள் போன்றவற்றிற்கு சிறிய அளவு கொண்ட அச்சுக்கள் பதிப்பது எடுப்பான தோற்றம் தரும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

குடியிருப்பு பகுதிகள்

அடுக்குமாடி குடியிருப்புகளின் கார் பார்க்கிங், அலுவலக கார் பார்க்கிங் ஆகிய பகுதிகளில் மேற்கண்ட ‘கான்கிரீட் ஸ்டாம்பிங்’ முறையை கையாளும்போது, பெரிய அளவு கொண்ட அச்சுகள் பயன்படுத்துவது அழகாக தோற்றமளிக்கும் என்றும் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். குறிப்பாக, இவ்வகை தரைத்தளங்கள் எளிமையான பட்ஜெட் கொண்டதாக இருப்பதுடன், பராமரிப்பதற்கும் சுலபமாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த முறை நமது பகுதிகளில் இன்னும் அதிகமான பயன்பாட்டுக்கு வரவில்லை. 

Next Story