குறைவான இடத்திலும் வீட்டு தோட்டம் அமைக்கலாம்


குறைவான இடத்திலும் வீட்டு தோட்டம் அமைக்கலாம்
x
தினத்தந்தி 11 Aug 2018 5:15 AM GMT (Updated: 11 Aug 2018 5:15 AM GMT)

சென்னை போன்ற நகர்ப்புறங்களில் குறைந்த அளவுகள் கொண்ட தனி வீடுகள் அல்லது அடுக்குமாடி வீடுகளின் மேல்பகுதியில் வீட்டு தோட்டம் அமைப்பது சிரமம் என்று பலரும் நினைக்கிறார்கள்.

சென்னை போன்ற நகர்ப்புறங்களில் குறைந்த அளவுகள் கொண்ட தனி வீடுகள் அல்லது அடுக்குமாடி வீடுகளின் மேல்பகுதியில் வீட்டு தோட்டம் அமைப்பது சிரமம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், கிட்டத்தட்ட 500 அல்லது 400 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளில் கூட அழகான வீட்டு தோட்டத்தை அமைத்து பயன்பெறலாம் என்று வீட்டுத் தோட்ட அமைப்பில் ஆலோசனை அளிக்கும் வேளாண் வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

இன்றைய காலகட்டத்தில் வீடுகள் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் பசுமையான சூழல் ஏற்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் மண் இல்லாமல், தென்னை நார் கழிவு மற்றும் மற்ற இடுபொருட்களை பயன்படுத்தி வீட்டு தோட்டத்தில் பசுமையான காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்துவதை நமது வல்லுனர்கள் கவனித்துள்ளார்கள். அதன் அடிப்படையில், ‘மண் இல்லாத வீட்டுத்தோட்டம்’ என்ற முறையில் பைகளில் செடிகள் வளர்க்கும் புதிய முறை நமது பகுதிகளில் அறிமுகமாகி உள்ளது.

பைகளில் செடி வளர்ப்பு

அதாவது, தென்னை நார் கழிவு, நுண்ணூட்டச்சத்து, இயற்கை உரம் உள்ளிட்ட இடுபொருட்கள், செடி, கொடிகள் வளர்வதற்கான இயற்கை உரங்கள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதற்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட பைகளில் போட்டு வைக்கப்படுகிறது.  அவற்றை வீடுகளில் வேண்டிய இடங்களில் வைத்து, காய்கறி உள்ளிட்ட பல்வேறு வீட்டுத்தோட்ட செடிகளை எளிதாக வளர்க்கலாம்.

காய்கறிகளை எளிதாக 

விளைவிக்கலாம்

இல்லத்தரசிகளுக்கு வசதியாக காய்கறிகள் மற்றும் பல்வேறு கீரை வகைகள், கற்பூரவள்ளி, துளசி உள்ளிட்ட மூலிகைச்செடிகள், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூச்செடிகள் என தேவையான அனைத்து செடி வகைகளையும், அதற்கேற்ற தனித்தனி பைகளில் வீட்டு தோட்டமாக அமைத்துக் கொள்ளலாம். இந்த முறைக்கு சூரிய ஒளி மற்றும் நீர், உரம் போன்றவை குறைவாக இருந்தாலே போதுமானது. சூரிய ஒளி வீடுகளில் விழக்கூடிய பகுதிகள், மேல் மாடிகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் என பல இடங்களில் காய்கறி தோட்டத்தை அமைக்க முடியும்.

ஆலோசனை தரும் அமைப்புகள்

அரசின் தோட்டக்கலை துறை மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் உள்ளிட்ட வேளாண் நிறுவனங்கள் வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கு ஆலோசனைகளை வழங்குவதோடு அதற்கான மூலப் பொருட்களையும் பல நகரங்களில் வழங்கி வருகிறார்கள். தேவையான செடி அல்லது கொடி வகைகளுக்கேற்ப அவற்றின் விதைகள் உள்ளீடு செய்யப்பட்ட பைகள், உரம் உள்ளிட்ட மற்ற இடுபொருட்களை அவர்களிடமிருந்து பெற்று, இடத்திற்கேற்ப அவற்றை சிறிய தோட்டமாக அமைத்துக்கொள்ளலாம். மேலும், வெயில் கால பகல் நேரங்களில் மாடித்தோட்ட செடி வகைகள் பாதிக்காதவாறு நிழல் வலை அமைப்பது முக்கியம். 

தேவையான அளவு

ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்களாக ஐந்து பேர் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவைப்படும் காய்கறி வகைகளை உற்பத்தி செய்ய, ஒரு செடிக்கு ஒரு பை என்ற நிலையில் 12 அல்லது 14 பைகள் போதுமானதாக இருக்கும் என்றும் வீட்டுத்தோட்டம் அமைக்க உதவும் ஆலோசகர்கள் குறிப்
பிட்டுள்ளனர்.

Next Story