கட்டுமான பணியாளருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்


கட்டுமான  பணியாளருக்கான  பாதுகாப்பு  நடவடிக்கைகள்
x
தினத்தந்தி 11 Aug 2018 5:44 AM GMT (Updated: 11 Aug 2018 5:44 AM GMT)

தொழிலாளர் நலன் என்ற அடிப்படையில் கட்டுமான பணியாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பல்வேறு விவரங்களை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொழிலாளர் நலன் என்ற அடிப்படையில் கட்டுமான பணியாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பல்வேறு விவரங்களை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் கட்டுமான பணியாளர் ஒருவர் தனிப்பட்ட முறையில் எவ்வளவு எடை அல்லது சுமையை தூக்க அனுமதிக்கலாம் என்ற வரையறை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வெவ்வேறு வரையறைகள் உள்ளன. 

எடை கட்டுப்பாடுகள்

கட்டுமான பணியிடங்களில் வேலை செய்யும் ஆண் தொழிலாளர்கள் அதிகபட்சமாக 50 கிலோ வரையில் எடைகளை தூக்குவதற்கு அல்லது எடுத்துச் செல்வதற்கு மட்டுமே அனுமதி உண்டு. பெண் தொழிலாளர்கள் அதிகபட்சமாக 30 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை தனியாக தூக்கிச் செல்லலாம்.

முறையான செயல்பாடு

மேலும், கட்டுமான பணி புரியும் தொழிலாளர்களுக்கு, பொருட்களை எவ்வாறு தூக்குவது, எப்படி எடுத்துக் கொண்டு சுமையுடன் நடப்பது போன்ற செயல்களை செய்வதற்கான முறைகளும் சொல்லப்பட்டுள்ளன. போதுமான பயிற்சி அல்லது முறையான திட்டங்கள் ஏதும் இல்லாமல் கட்டுமான வேலைகளை செய்யும் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களில் தண்டு வட எலும்பு பிசகு உள்ளிட்ட உடல் பாதிப்புகள் பிரதானமாக உள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

கட்டுமான பணியிடங்களில் தனி ஒருவராக குறிப்பிட்ட பொருளை தூக்க வேண்டிய சமயத்தில் தொழிலாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பணியிட பாதுகாப்பு தொடர்பான நிபுணர்கள் குறிப்பிட்ட தகவல்களை இங்கே காணலாம்.

 * ஒரு பொருளை தரையிலிருந்து தூக்கும் பொழுது, அதன் எடை, அவரது தூக்கும் சக்திக்கு உட்பட்டதா என அறிய வேண்டும். 

 * தூக்கும் நபர் பொருளின் பக்கத்தில் நின்று தனது கால் முட்டியை மடக்கி கீழே உட்கார்ந்து தூக்க முயற்சிக்க வேண்டும். நின்ற நிலையில் முதுகு வளைத்து குனிந்து தூக்க முயற்சி செய்வது கூடாது அதாவது தூக்கும் பொழுது முதுகுத் தண்டு எப்போதும் நிமிர்ந்து, நேரான நிலையில் இருப்பது முக்கியம்.

 * தூக்க வேண்டிய பொருளை மிக உறுதியாக உள்ளங்கையில் பிடிப்பு ஏற்படுத்திக்கொண்டு தூக்க வேண்டும். பொருளின் எடையானது முற்றிலும் விரல்களுக்கு மட்டும் செலுத்தப்படக்கூடாது.

 * தூக்கப்பட்ட பொருளை, கூடியவரை உடலை ஒட்டியே இருக்கும்படி வைத்து கொள்ளவேண்டும். தூக்கப்படும் பொருள், தூக்கிச் செல்பவரின் கண்பார்வையை மறைக்கும்படியாக இருக்ககூடாது. 

* மேலும், பொருளை தூக்கிக்கொண்டு செல்லக் கூடிய நடைபாதை வழுக்கும் தன்மை கொண்டதாகவும் குண்டும்குழியுமாகவும் இருப்பது கூடாது என்பது முக்கியம்.

மழைக்கால

கட்டுமான பணிகள்

மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் உயரமான அடுக்குமாடிகளுக்கான கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான வி‌ஷயம் இடி–மின்னல் பாதிப்புகள் ஆகும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சமயங்களில், மின்னல் உயரமான பகுதிகளையே முதலில் தாக்கும் என்பது பொதுவானது. அந்த நிலையில் உயரமான கட்டுமான அமைப்புகள் மின்னலால் தாக்கப்படும்போது அதில் உள்ளவர்களும் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. 

கால அவகாசம்

மேக மூட்டமாக இருந்து, மழை பொழியாத இடங்களிலும்கூட மின்னல் தாக்குதல் ஏற்படலாம். அதனால், கட்டுமான பணிகள் நடக்கும் இடத்திற்கு அருகில் மின்னல் ஏற்படுவது அல்லது இடி ஓசை கேட்பது ஆகிய நிலைகளில் சுமாராக அரை மணி நேரம் கழித்து பணிகளில் மீண்டும் ஈடுபடுவதே பாதுகாப்பானது என்றும் கட்டுமானத்துறை பாதுகாப்பு வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

Next Story