சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ற கட்டுமான பணி மேலாண்மை


சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ற கட்டுமான பணி மேலாண்மை
x
தினத்தந்தி 18 Aug 2018 4:40 AM GMT (Updated: 18 Aug 2018 4:40 AM GMT)

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம் (The Ministry of Environment, Forest and Climate Change) கட்டுமானம் மற்றும் கட்டிட கழிவு மேலாண்மை விதிகள்-2016 என்ற விதி முறைகளை அறிவிக்கை செய்துள்ளது.

 கட்டுமான பணிகளின்போது உருவாகும் கழிவு பொருட்களை தக்க முறையில் மேலாண்மை செய்யும் விதத்தில் மேற்கண்ட விதிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தனி நபர்கள், நிறுவனம் அல்லது கட்டுமான குழுமம் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் கட்டுமான பணிகள், கட்டிடங்களை பழுது பார்த்தல், பழைய கட்டமைப்புகளை இடித்து அகற்றுதல் போன்றவற்றால் உருவாகும் கட்டுமான கழிவுகளை மேலாண்மை செய்வதற்கான வழிகாட்டு நெறிகளாக மேற்கண்ட விதிகள் அமைந்துள்ளன.

தூசிகளால் பாதிப்பு

தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal NGT) கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களிலும், கட்டிடங்கள் இடிக்கப்படும் இடங்களிலும் வெளியாகும் தூசிகள் சுற்றுச்சூழலை பாதிப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், சாலை ஓரங்களில் கட்டுமான பொருள்களை விற்பதற்கும், சேமிப்பதற்கும் மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்பு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு விதிகள் கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

பணியில் பாதுகாப்பு

கட்டிட ஒப்பந்ததாரர், கட்டிட பணிகளை செய்பவர், கட்டுமான பொருள்கள் விற்பவர் அல்லது சம்பந்தப்பட்ட இதர நபர்கள் ஆகியோர் கட்டுமான பொருள்களை சேமித்து வைப்பதற்கும், கட்டிட இடிபாடுகள் காரணமாக ஏற்படும் கழிவுகளை அல்லது கட்டுமான பொருள்களை சாலை ஓரங்களில் போக்குவரத்து இடையூறாகவோ வைத்திருக்கும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் அல்லது கட்டிட இடிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் முகத்தில் கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் என்றும் மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாடு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

பாதிப்புகள் தடுப்பு

குடியிருப்பு பகுதிகளில் நடக்கும் கட்டுமான பணிகளின்போது பொருள்களை ‘பிளாஸ்டிக் ஷீட்’ அல்லது தார்ப்பாய் போன்றவற்றால் மூடி வைத்து தூசுதும்புகள் காற்றில் பறந்து பக்கத்தில் வசிப்போருக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்க வேண்டும் என்றும், கட்டுமான இடத்தை சுத்தப்படுத்தும்போது நவீன வாக்குவம் ஸ்வீப்பிங் (Vacuum Sweeping) கருவியை பயன்படுத்தும்படியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவிப்பு பலகை

கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்போது அல்லது கட்டிட இடிப்பு பணிகளின்போது அந்த இடங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி சம்பந்தப்பட்ட கட்டுனர் அல்லது நிறுவனங்கள் அரசின் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவிப்பது அவசியம். மேலும், மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்ற அறிவிப்பு பலகையை கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் கட்டுனர்கள் வைக்கவேண்டும் என்றும் மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது.

கழிவுகள் மேலாண்மை

கட்டுமான பணிகள் நடக்கும் பகுதியின் உள்ளாட்சி அமைப்புகள், கட்டுமான பணிகள் அல்லது இடித்து அகற்றப்படும் கட்டிட கழிவுகளை சரியான முறையில் மேலாண்மை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்வதற்கான இடத்தை தேர்வு செய்யும்படியும் உள்ளாட்சி அமைப்புகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. 

Next Story