உங்கள் முகவரி

நிலத்தடி நீர் தொட்டி கட்டமைப்பில் பாதுகாப்பு முறைகள் + "||" + Safety systems in underground water tank structure

நிலத்தடி நீர் தொட்டி கட்டமைப்பில் பாதுகாப்பு முறைகள்

நிலத்தடி நீர் தொட்டி கட்டமைப்பில் பாதுகாப்பு முறைகள்
இன்றைய நகர்ப்புறங்களில், பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள் நெருக்கடியாக அமைந்திருக்கின்றன.
அப்பகுதிகளில் அவசியமான வசதிகளை செய்து கொள்வதற்கு போதுமான இட வசதி இல்லாத நிலையில், இடத்தை கச்சிதமாக பயன்படுத்தி தேவையான கட்டமைப்புகளை செய்து கொள்ளவேண்டியதாக இருக்கும்.

நீர்த்தொட்டி மற்றும் ‘செப்டிக் டேங்க்’


அந்த நிலையில் குறைந்த பரப்பளவு கொண்ட தரைத்தள பகுதியில் தண்ணீர் தொட்டி மற்றும் ‘செப்டிக் டேங்க்’ ஆகியவை ஒன்றுக்கு ஒன்று மிகவும் அருகில் அமைக்கவேண்டிய நிலை ஏற்படலாம். அப்போது கட்டுமான தொழில்நுட்ப ரீதியாக மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் பற்றி பலருக்கும் குழப்பம் இருப்பதாக கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் தெரிவித்த ஆலோசனைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

கான்கிரீட் தண்ணீர் தொட்டி

பொதுவாக, நிலத்தடி தண்ணீர் தொட்டிகள் கட்டும்போது பெரும்பாலும் செங்கல் கட்டுமானமாக அமைக்கப்படுவதுதான் வழக்கத்தில் இருந்து வருகிறது. அதுபோன்ற தொட்டிகளை சுற்றிலும் 6 அல்லது 8 அடிகள் தொலைவுக்குள் செப்டிக் டேங்க் அமைப்புகள் இல்லாத நிலையில் அவை பாதிக்கப்பட பெரிதான வாய்ப்புகள் இருக்காது. ஆனால், மேற்கண்ட அளவுக்குள்ளாக அல்லது அதைவிட அருகிலோ இரண்டு தொட்டிகளும் அமைக்கப்பட வேண்டிய நிலையில் குடிநீர் தொட்டியை கண்டிப்பாக ஆர்.சி.சி முறைப்படிதான் அமைக்க வேண்டும்.

செங்கல் சுவரில் நீர்க்கசிவு

அதாவது, கச்சிதமாக வடிவமைத்த கான்கிரீட் அமைப்புக்குள் என்பது நீர் உட்புக இயலாது. ஆனால், செங்கல் சுவருக்குள் சுலபமாக நீர் உட்புகுந்து மறுபுறமாக கசியக்கூடிய தன்மை கொண்டது. அதனால், தண்ணீர் தொட்டி அமைக்கும்போது தக்க விதத்தில் பாதுகாப்பான கட்டுமான முறையை பயன்படுத்தவேண்டியது அவசியம்.

ஆறு அங்குல சுவர்

பொதுவாக, மேற்கண்ட சூழலில் நாலரை அங்குல செங்கல் சுவர் அமைத்து அதற்கு உட்புறமாக ‘சென்டரிங்’ அமைத்து, அதில் 4 அங்குல கான்கிரீட் சுவர் கட்டி தொட்டிகளை உருவாக்குவதுதான் பெரும்பாலான பொறியாளர்கள் கடைப்பிடித்து வரும் நடைமுறையாகும். கூடுதல் பாதுகாப்புக்காக ஆறு அங்குல சுவர் அமைப்பதோடு, சிறுவகை ஜல்லிகளையும் பயன்படுத்தலாம். மேலும், நீர் ஊடுருவாமல் தடுக்கும் அட்மிக்ஸர் ரசாயன பொருட்களை சிமெண்டில் போதிய அளவுகளில் கலந்து பயன்படுத்துவதும் அவசியம்.

ஒரே நாளில் செய்யவேண்டும்

மேற்கண்ட முறையில் கான்கிரீட் தொட்டிகள் கட்டுவதை ஒரே நாளில் முடித்துவிட வேண்டும். கான்கிரீட் போடும் பணியில் பாக்கி வைத்து மறுநாள் செய்வது கூடாது. அவ்வாறு செய்யும்போது காலப்போக்கில், மறுநாள் செய்த பணியின் இணைப்புகளில் தண்ணீர் கசிவு ஏற்படலாம்.

இடைவெளியில் ‘கான்கிரீட் ஷீட்’

இரண்டு தொட்டிகளுக்கும் இடைவெளி மிகவும் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவற்றுக்கு இடையே ‘பிரிகாஸ்ட்’ முறையிலான ‘கான்கிரீட் ஷீட்’ அமைப்புகளை இடைவெளியில் நிறுத்திக்கொள்ளலாம். அதன் மூலமாக ஒருவித மன நிறைவு உண்டாவதுடன், கூடுதல் பாதுகாப்பாகவும் அமையும்.

‘டைல்ஸ்’ உபயோகம்

ஒரு சில இடங்களில் தரையடி தண்ணீர் தொட்டிகளுக்கு உட்புறத்தில் எளிதாக சுத்தம் செய்ய வசதியாக டைல்ஸ் வகைகளை பதிப்பது வழக்கத்தில் இருப்பது அறியப்பட்டுள்ளது. இந்த முறையில் சுத்தப்படுத்துவது எளிது என்பதை தாண்டி வேறு பயன்கள் இல்லை என்பது பொறியாளர்கள் கருத்தாகும்.


ஆசிரியரின் தேர்வுகள்...