அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்


அடுக்குமாடி  குடியிருப்புகளில்  பாதுகாப்பு  ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 6 Oct 2018 3:30 AM IST (Updated: 5 Oct 2018 3:33 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய காலகட்ட பெருநகர அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது சகலவித தொழில்நுட்ப அடிப்படைகளையும் கொண்டதாக இருப்பது அவசியம் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி இருக்கின்றனர்.

ன்றைய காலகட்ட பெருநகர அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது சகலவித தொழில்நுட்ப அடிப்படைகளையும் கொண்டதாக இருப்பது அவசியம் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி இருக்கின்றனர். அதன் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி தெரிவித்த கட்டுமான வல்லுனர்கள் அவற்றை கீழ்க்கண்ட மூன்று விதங்களாக பிரித்து செயல்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

மூன்று அம்சங்கள்

1) பாதுகாப்பு உபகரணங்கள் 

2)பாதுகாப்பு நடவடிக்கைகள் 

3) பாதுகாப்பு ஊழியர்கள் 

ஆகிய நிலைகளில் செயல்படும் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் மூலம் குடியிருப்பவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

பாதுகாப்பு உபகரணங்கள்

மேல்மாடிகள், குழந்தைகள் விளையாடும் பகுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், பொது கழிவறைகளுக்கு வெளிப்புறம், ஸ்டோர் ரூம்கள் உள்ளிட்ட பல இடங்களில் ‘சி.சி.டி.வி’ கேமரா, மெயின் கேட்டுக்கு அருகில் அனைத்து கோணங்களிலும் படம் பிடிக்கும் கேமரா ஆகியவற்றை பொருத்தி அவற்றை கண்காணிப்பது அவசியம். 

தினமும் முப்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் வந்து செல்லக்கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளில் பயோமெட்ரிக் முறையில் பணியாளர்களின் வருகையை பதிவு செய்யக்கூடிய சாதனங்களை அமைக்கவேண்டும். அதாவது, வீட்டு பணியாளர்கள், செக்யூரிட்டிகள், தோட்ட பணியாளர்கள், மேனேஜர்கள், சமையல் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நபர்களது வருகையும் மேற்கண்ட முறையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

மெயின் கேட் பகுதியில் வருகையாளர் பதிவேடுகளுக்கு மாற்றாக கணினி முறையில் வருகைப்பதிவு செய்யப்படுவதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களது அடையாளத்தை செக்யூரிட்டி பணியாளர்கள் எளிதாக கண்டறிய முடியும். 

இரவு பகல் ஆகிய நேரங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் ரோந்து வரக்கூடிய செக்யூரிட்டி பணியாளர்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் செல்போன் அளிக்கப்பட வேண்டும். அதன் மூலம் சுற்றுப்புற பகுதிகளில் தென்படும் சந்தேகத்துக்குரிய நபர்கள் அல்லது பொருட்கள் ஆகியவை பற்றிய தகவல்களை உடனடியாக இதர செக்யூரிட்டி பணியாளர்களுக்கு அல்லது அடுக்குமாடி நிர்வாகத்துக்கு தெரிவிக்க இயலும். 

பாதுகாப்பு நடவடிக்கைகள்

கட்டுமான பணிகளின்போதே கச்சிதமான இடங்களை தேர்வு செய்து சி.சி.டி.வி அமைப்புகள் பொருத்தப்படுவது நல்லது. குறிப்பாக ‘கேட்டடு கம்யூனிட்டி’ குடியிருப்புகளின் கட்டுமான பணிகளின்போது வரக்கூடிய வெவ்வேறு வகையான பணியாளர்களை சிசிடிவி கேமரா மூலம் கவனிப்பது முக்கியமானது. அதன் பதிவுகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆய்வு செய்வதும் பாதுகாப்புக்கு ஏற்றது. மேலும், அனைத்து கேமரா பதிவுகளும் தக்க விதத்தில் செய்யப்படுவதை அவ்வப்போது கவனித்து உறுதி செய்து கொள்வது முக்கியம். 

குறிப்பாக செக்யூரிட்டி பணியாளர்களை அனுப்பும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பற்றி அடுக்குமாடி நிர்வாகம் கவனம் கொள்ள வேண்டும். வீடுகளுக்கு அவ்வப்போது வரக்கூடிய பணியாளர்களும் நிர்வாகத்தின் அனுமதி பெற்றே அனுமதிக்கப்படுவது நல்லது. குறிப்பாக பொருட்களை ‘டெலிவரி’ அளிப்பதற்கு வந்தவர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக குடியிருப்பில் தங்கியுள்ள நிலையில் அவர்களை கண்காணிப்பது முக்கியம்.

பாதுகாப்பு ஊழியர்கள்

செக்யூரிட்டி பணியாளர்களை தொடர்ச்சியாக இரண்டு ‘ஷிப்டுகள்’ பணி புரியும்படி விடக்கூடாது. அவர்களுக்கான சீருடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை தக்க விதத்தில் அவர்கள் பராமரித்து வருவதையும் நிர்வாகத்தினர் பார்த்துக்கொள்ளவேண்டும்.

குடியிருப்பு வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தக்க விதத்தில் செயல்படுவதை கண்காணிக்க பெண்கள் உள்ளிட்ட ஒரு துணை நிர்வாகக் குழுவை அமைத்துக்கொள்ளலாம். குடியிருப்போர்களுக்கான மாதாந்திர கூட்டத்தில் தெரிவிக்கப்படும் ஆலோசனை அல்லது புகார்களை அந்த குழு கவனித்து நிர்வாகத்திடம் தக்க முறையில் சேர்ப்பித்து அதன் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். 

பெண் குழந்தைகளுக்கான தற்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், குடியிருப்போர் தங்களது உரிமை மற்றும் வரையறை ஆகியவற்றை தக்க விதத்தில் கடைப்பிடிப்பதும் அவசியமான வி‌ஷயங்களாகும்.

Next Story