இரு வகை பயன்கள் கொண்ட புதுவகை பெயிண்டு


இரு வகை பயன்கள் கொண்ட புதுவகை பெயிண்டு
x
தினத்தந்தி 26 Oct 2018 11:15 PM GMT (Updated: 26 Oct 2018 10:22 AM GMT)

குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டுமானங்கள் ஆகியவற்றின் சுவர்களுக்கான அழகு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய காரணங்களின் அடிப்படையில் வெளிப்புறம் மற்றும் உள்புறம் ஆகிய இரு பகுதிகளுக்கும் வெவ்வேறு ரசாயனங்கள் கலக்கப்பட்ட பெயிண்டு வகைகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

அவை பயன்படும் இடங்களின் தன்மைக்கேற்ப வெவ்வேறு ரசாயன தன்மைகளை வெளிப்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது.

இருவகை பெயிண்டு

கட்டிடங்களுக்கான உள்புற இன்டீரியர் பெயிண்டு வகைகள் அழுக்குகளை சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். வெளிப்புற எக்ஸ்டீரியர் பெயிண்டு வகைகள் நிறம் வெளுத்துப்போகாமலும், பூஞ்சை உள்ளிட்ட பாசிகள் போன்றவற்றால் பாதிக்கப்படாத தன்மை கொண்டவையாகவும் இருக்கும். 

அவற்றில் சேர்மானமாக உள்ள நிறமிகள் (Pigments), கரைப்பான்கள் (Solvents), கூட்டுப் பொருள்கள் (Additives) மற்றும் ரெசின்கள் (Resin) போன்ற ரசாயனங்களின் அடிப்படையில் அவற்றின் மாறுபட்ட தன்மைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

கரைப்பான்கள்

‘லேட்டக்ஸ்’ பெயிண்டு வகையில் தண்ணீர் கரைப்பானாக பயன்படுத்தப்படும் நிலையில், ‘ஆயில் பேஸ்டு பெயிண்டு’ வகைகளில் ‘மினரல் ஸ்பிரிட்’ கரைப்பானாக இருக்கும். பெயிண்டு பூச்சு உலர்ந்து கரைப்பான்கள் ஆவியாகி விடும் நிலையில் அவற்றின் ரசாயன பொருள்கள் மீதமாகின்றன. 

வெளிப்புற பெயிண்டு வகைகள் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை தாங்கி நிற்கும் வகையிலும், உரிந்து போகாமலும், வெப்பத்தால் மங்கிப்போகாமலும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவற்றில் சேர்க்கப்பட்ட ரெசின்கள் உள்ளிட்ட இதர கரிமப்பொருள்கள் சிறிய அளவில் எப்போதும் ஆவியாகிக்கொண்டிருப்பதால் அவை உள்புற பயன்பாட்டுக்கு நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை. 

இன்டீரியர் வகைகள் அவ்வாறு ரசாயன ஆவியை வெளியேற்றாத நிலையில் இருக்கும். மேலும், அறைகளுக்கு அவற்றை பயன்படுத்தும்போது போதிய அளவு காற்றோட்டம் இருப்பது அவசியமானது.

நவீன பயன்பாடு

தற்போது நவீன தொழில் நுட்ப முறையில் கட்டமைப்புகளின் உள்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் பயன்படுத்தும் பெயிண்டு வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. விரைவில் ஆவியாகும் கரிம பொருள்கள் அவற்றில் குறைவாக உள்ளதால் ரசாயன பொருட்களின் வாசனை குறைவாக இருக்கும். அதன் அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத தொழில் நுட்பத்துடன் இவ்வகை பெயிண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வகை பெயிண்டுகளை உட்புற பகுதிகளுக்கு பிரஷ் மூலம் பூசுவதற்கு பதிலாக ரோலர் முறையில் மேற்பூச்சாக பூசலாம். குறிப்பாக, சமையலறைகளுக்கு இவ்வகையிலான ஆயில் பெயிண்டு அடித்து, அதன் மீது ‘சாட்டின் பினிஷ்’ (பெயிண்டு பூசப்பட்டு காய்ந்த பின்னர் அதன் தோற்றத்தை காட்டும் பினிஷ் வகைகளில் மேட், சாட்டின், செமி குளோஸ் மற்றும் குளோஸ் ஆகிய நிலைகள் உள்ளன) செய்தால் சுத்தம் செய்ய சுலபமாக இருக்கும். 

சாம்பிள் பெயிண்டிங்

குறிப்பாக, வீடுகளுக்கு தேர்வு செய்த பெயிண்டு வகைகளை சாம்பிள் கலர் பெற்று பயன்படுத்தி பார்த்த பின்னர் முடிவு செய்வதால் பல சிக்கல்களை தவிர்க்கலாம் என்று உள் கட்டமைப்பு வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story