தமிழ் கலாசார அழகை வெளிப்படுத்தும் ஆயிரம் ஜன்னல் வீடு


தமிழ் கலாசார அழகை வெளிப்படுத்தும் ஆயிரம் ஜன்னல் வீடு
x
தினத்தந்தி 27 Oct 2018 8:29 AM GMT (Updated: 27 Oct 2018 8:29 AM GMT)

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள செட்டிநாடு பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய வீடுகள் உலக புகழ் பெற்றவையாக உள்ளன.

அவை, சிமெண்டு பயன்படுத்தாமல், நமது பகுதிக்கே உரித்தான சுண்ணாம்பு கற்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதி வீடுகளின் கட்டமைப்பு, கலையம்சம் மற்றும் பன்முக பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் காரைக்குடி, பாரம்பரியம் மிக்க நகரம் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ஜன்னல் வீடு

அந்த பகுதியின் பிரபல அடையாளமாக ‘ஆயிரம் ஜன்னல் வீடு’ உள்ளது. நிறைய ஜன்னல்கள் இருப்பதால் மேற்கண்ட காரணப்பெயர் அந்த வீட்டுக்கு ஏற்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. விஸ்தாரமாக உள்ள அந்த வீட்டில் 25 பெரிய அறைகள் மற்றும் ஐந்து பெரிய ஹால் அமைப்புகள் உள்ளன. கிட்டத்தட்ட 20 கதவுகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஜன்னல்கள் அமைப்புடன் கண்கவர் கட்டுமானமாக அந்த வீடு இருக்கிறது. வீட்டின் பிரதான வாசலுக்கான சாவி கிட்டத்தட்ட ஒரு அடி நீளம் கொண்டதாக உள்ளது.

உள் கட்டமைப்புகள்

பெரிய அளவிலான அறைகள், விசாலமான நடு ஹால், கல்யாண மண்டபம் போன்ற டைனிங் அறைகள், பர்மா தேக்கு கதவுகள், ஜன்னல்கள், இத்தாலி சலவை கற்கள், இயற்கை வண்ண பூச்சு ஓவியங்கள், முட்டை மற்றும் சுண்ணாம்பு கலவையால் உருவாக்கப்பட்ட சுவர் பூச்சு என்று கிட்டத்தட்ட 20 ஆயிரம் சதுரடி பரப்பளவில் விசாலமாக அமைந்துள்ள அந்த வீடு, 1941-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. அதன் பட்ஜெட் அன்றைய காலகட்டத்திலேயே 1 லட்சத்துக்கும் அதிகமாக ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு பொருட்கள்

வீட்டின் முன்புறம் அழகான பெரிய திண்ணை, தரைத்தளத்திற்கு வெள்ளை மற்றும் கருப்பு நிற சதுரமான டைல்ஸ் மற்றும் பல்வேறு வண்ண வால் டைல்ஸ் ஆகியவையும் பதிக்கப்பட்டிருக்கின்றன. வீட்டில் உள்ள பெரிய கல் தூண்களை செய்வதற்கான பச்சை கற்கள் இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆங்காங்கே ஒளி தரும் விளக்குகள் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவை. அமர்வதற்கு பயன்படும் ஒரே மரத்தால் செய்யப்பட்ட பெஞ்சுகள் ஐம்பது அடி நீளம் கொண்டவையாக உள்ளன. தற்போது சுற்றுலாத்துறை இந்த வீட்டை பராமரித்து வருகிறது.

இதர அம்சங்கள்

மேலும், அந்த வீட்டுக்கு அருகில் உள்ள வீடுகளும் பெரிய அளவு கொண்டதாக இருக்கின்றன. அவற்றின் தலைவாசல் கதவுகள் மற்றும் இதர வாசல்கள் கம்பீரமான வேலைப்பாடுகளுடன், கோவில் வாசல் போன்ற தோற்றதுடன் உள்ளன. குறிப்பாக, அந்த பகுதி வீடுகளுக்கு வெளிப்புறத்தில் மழை நீர் சேகரிப்புக்காக வலை கொண்டு மூடப்பட்ட குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

Next Story