சுற்று சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் மீன் வடிவ கட்டமைப்பு


சுற்று சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் மீன் வடிவ கட்டமைப்பு
x
தினத்தந்தி 10 Nov 2018 8:33 AM GMT (Updated: 2018-11-10T14:03:04+05:30)

கட்டிடக்கலை திறமையை வெளிக்காட்டும் வகையில் அமைக்கப்பட்ட வித்தியாசமான கட்டுமானங்கள் உலகமெங்கும் பரவலாக இருக்கின்றன.

அதுபோன்ற உதாரணங்கள் அவற்றை வடிவமைத்தவர்களின் திறமையை மட்டும் வெளிக்காட்டுவதாக இல்லாமல், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பு போன்ற வாழ்வியல் அர்த்தங்களையும் தாங்கி நிற்கின்றன.

தங்க முலாம்

அந்த வகையில் உருவாக்கப்பட்ட ஒரு புதுமையான கட்டமைப்பு பற்றி இங்கே பார்க்க இருக்கிறோம். பிரமாண்டமான மீன் வடிவிலான இந்த கட்டமைப்பு முற்றிலும் தங்க முலாம் (கோல்டு கோட்டிங்) செய்யப்பட்டதாகும்.

சூழல் பாதுகாப்பில் விழிப்புணர்வு

சீனாவின் கிழக்கு மாகாணம் ஜியாங்சூ பகுதியில் உள்ள ஜென்ஜியாங் நகரத்தின் யாங்ஸே நதிப்படுகையில் அமைந்துள்ள இந்த ‘பபர் பிஷ்’ கட்டுமானத்துக்கு பின்னணியில் நதி பாதுகாப்பில் விழிப்புணர்வு என்ற வலுவான காரணம் உள்ளதாக அதனை வடிவமைத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பெரிய அளவு

சீனாவின் டோங்ஜி பல்கலைக்கழக கட்டிடவியல் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி குழு 15 மாடி உயரம் கொண்டதாக இந்த அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த ‘பபர் மீன்’ வடிவம் 90 மீட்டர் நீளம், 40 மீட்டர் அகலம், 62 மீட்டர் உயரம் மற்றும் சுமார் 2100 டன் எடை கொண்டதாகும்.

மின் விளக்கு அலங்காரம்

கிட்டத்தட்ட ஏழாயிரத்துக்கும் அதிகமான வெவ்வேறு அளவுகள் கொண்ட தங்க கோட்டிங் செய்யப்பட்ட பித்தளை தகடுகள் மூலம் மேற்புறம் மூடப்பட்டுள்ளது. அதன் காரணமாக பகலில் கண்ணை கவரும் விதத்தில் பளபளப்பாக ஜொலிக்கிறது. இரவில் ஜொலிக்க வண்ணமயமான மின் விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. இதன் வித்தியாசமான அமைப்பு மற்றும் அளவு ஆகியவற்றின் காரணமாக கின்னஸ் ரெக்கார்டு சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

Next Story