திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்கள் பற்றிய தகவல்கள்


திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்கள் பற்றிய தகவல்கள்
x
தினத்தந்தி 17 Nov 2018 3:14 PM IST (Updated: 17 Nov 2018 3:14 PM IST)
t-max-icont-min-icon

திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்கள் பொது நோக்கம் மற்றும் நகர்ப்புற திட்டம் ஆகிய நிலைகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்படும்.

வீட்டுமனை திட்டங்களை மனை மேம்பாட்டாளர்கள் செயல்படுத்தும்போது பெருநகர வளர்ச்சி கட்டுப்பாடு விதிகளுக்கேற்ப திறந்தவெளி இடங்கள், சாலைகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல் ஆகியவற்றுக்காக திறந்தவெளி ஒதுக்கீடு நிலப்பகுதிகளை (Open Space Reservtion OSR) ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுபற்றிய தகவல்கள் சென்னை பெருநகர மாநகராட்சி இணைய தளத்தில் நிலம் மற்றும் உடைமைத்துறை என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிலப்பகுதிகள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி அளித்த வரைபடத்தில் உள்ளபடி, பொது நோக்கம் மற்றும் நகர்ப்புற திட்டம் ஆகிய நிலைகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்படும். அன்பளிப்பு ஒப்பாவணங்களாக பதிவு செய்யப்பட்டு அளிப்பதற்கு முன்னரே அந்த நிலப்பகுதிகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடைமையாக ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வகை நிலங்களை மனை மேம்பாட்டாளர் அல்லது கட்டுனர் ஆகியோர் மூலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகளிடமிருந்து பதிவு செய்யப்பட்ட அன்பளிப்பு ஒப்பாவணம் மூலம் சென்னை நகர முனிசிபல் நகராட்சி சட்டத்தின் 74-வது பிரிவின்படி மன்ற தீர்மானத்திற்கு பிறகு ஏற்று கொள்ளப்படுகிறது.

அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலப்பகுதிகளில் இதர கட்டுமானங்கள் அல்லது ஆக்கிரமிப்புகள் ஏதும் இருப்பது கூடாது. எவ்வகை பயன்பாட்டிற்கு நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அதற்காக மட்டும் பயன்படுத்துவது அவசியம். அந்த நிலங்களின் பயன்பாடு மாற்றப்பட முடிவு செய்யும் பட்சத்தில், மன்ற தீர்மானம் பெற்ற பின்பு சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மூலம் அரசின் அனுமதி பெறப்பட வேண்டும்.

இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களில் அரசு துறை, தனியார் அமைப்புகள் அல்லது தனி நபர் ஆகியோருக்கு விற்கவோ, வாடகைக்கு விடுவதோ கூடாது. ஆனால், சம்பந்தப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்போர் நல சங்கம் அந்த நிலப்பகுதிகளை பராமரிக்க வேண்டி கோரிக்கை விடுக்கும் நிலையில் மன்ற தீர்மானத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட காலம் வரை பராமரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்ட நிலப்பகுதிகளில் (பாதுகாத்தல் மற்றும் ஒழுங்குமுறை விதிகள்) சட்டம் 1959-ன் தமிழ்நாடு பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளி இடங்கள் தலைப்பில் பிரிவு 8-ன் படி அரசின் முன் அனுமதி பெறாமல் நிரந்தர கட்டுமானங்கள் எதுவும் செய்யக்கூடாது.

மேற்கண்ட சட்டப்படி திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்கள் பற்றிய விவரங்கள் தமிழ்நாடு பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளி இடங்கள் என்ற தலைப்பில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு வெளியிடுகிறது. இவ்வகை நிலங்கள் ‘மாநகராட்சி தனியார் நிலங்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Next Story