அறையின் சூழலை இனிமையாக்கும் அழகிய படங்கள்


அறையின் சூழலை இனிமையாக்கும் அழகிய படங்கள்
x
தினத்தந்தி 17 Nov 2018 10:07 AM GMT (Updated: 17 Nov 2018 10:07 AM GMT)

வீடுகள் சிறிய அளவு கொண்டதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அவற்றில் செய்யப்பட்டிருக்கும் அலங்காரம் அனைவரையும் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பது பலருக்கும் விருப்பமாக இருக்கும்.

விலை உயர்ந்த பொருட்களை கொண்டு வீடுகளை அழகுபடுத்த வேண்டும் என்பதில்லை. கண்கவரும் வண்ணங்களில் அழகிய ஓவியங்களை ஆங்காங்கே மாட்டி வைத்தும் அறையின் சூழலை இனிமையாக மாற்ற இயலும்.

அவ்வாறு ஓவியங்கள், சிற்பங்கள் அல்லது படங்களை அறைகளில் வைப்பது அல்லது சுவர்களில் மாட்டுவதை பொறுத்து வீடுகளில் நேர்மறை சக்திகள் அல்லது எதிர்மறை சக்திகள் வெளிப்படுகின்றன என்று வாஸ்து நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் வீடுகளில் சிலைகள் அல்லது படங்களை மாடும் முன்னர் மனதில் கொள்ளவேண்டிய விஷயங்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

நேர்மறை அதிர்வுகள்

பொதுவாக, தன்னம்பிக்கையை அளிக்கும் படங்கள், இயற்கை அழகு மிகுந்த வண்ண ஓவியங்கள் ஆகியவற்றால் சுவர்கள் அலங்கரிக்கப்படும்போது மங்களம் தரும் சுப அதிர்வுகள் மனதில் ஏற்படும். வீட்டில் உள்ளவர்களுக்கும் அதன் காரணமாக மனதில் உற்சாகம் உண்டாவதோடு, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் அந்த உற்சாகம் பரவும்.

வீடுகள் அல்லது அறைகளில் கிழக்கு பகுதிகளில் அறிவு மற்றும் சக்தி ஆகியவற்றின் உருவகமாக உள்ள யானைகள் கூட்டமாக இருக்கும் படங்கள் அல்லது இரண்டு கொக்குகள், இரண்டு அன்னங்கள், பறந்து செல்லும் பறவைகள் கொண்ட படங்களையும் மாட்டலாம். அவை ஒற்றுமையை குறிப்பிடுவதாக அமையும். ஒரு யானை கொண்ட படமாக இருந்தால் அதன் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது சிறப்பு.

ஒற்றைக் கொம்பு கொண்ட ‘யூனிகார்ன் குதிரை’ படம் அல்லது மான்கள் துள்ளி ஓடும் படத்தையும் மாட்டி வைக்கலாம். அவை, பெருமை மற்றும் செல்வத்தை குறிக்கக்கூடியவையாக சொல்லப்படுகின்றன.

தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றை காட்டும் குட்டிகளுடன் கூடிய தாய் சிங்கத்தின் படம், வளத்தை எடுத்துச்சொல்லும் பெரிய பாய்மர கப்பல் ஆகிய படங்களையும் வீடுகளில் பயன்படுத்தலாம்.

சமையலறை சுவர்களில் அல்லது சாப்பிடும்போது கண்களில்படும்படி விதவிதமான காய்கறிகள், பழங்கள் போன்றவை அடங்கிய படங்களை மாட்டி வைக்கலாம்.

படுக்கையறை சுவர்களுக்கு மென்மையான நீல மலர்கள் கொண்ட படம் மற்றும் மேசையில் அலாரம் கொண்ட கடிகாரம் ஆகியவை பொருத்தமாக இருக்கும்.

எதிர்மறை அதிர்வுகள்

போர்க்களத்தில் பயன்படுத்தும் ஆயுதங்கள், போரை நினைவு படுத்தும் சிற்பங்கள் அல்லது புகைப்படங்கள், பீரங்கி பொம்மைகள், பெருக்கல் குறி போன்ற வாள்கள் ஆகியவற்றை வீடுகளில் வைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும், சிங்கம், புலி போன்ற விலங்குகள் இரையை துரத்துவது அல்லது அவற்றை வாயில் கவ்வி கொண்டிருப்பது போன்ற படங்களும் எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்தும் என்ற நிலையில் அவற்றையும் தவிர்த்து விடலாம்.

Next Story